Tuesday, 14 July 2015

ஆனந்தியும் உமரும்


ஆனந்தியும், உமர் என்ற உமர் ரஸ்யா பேகமும் சின்ன வயசில இருந்தே ஒன்னா ஓரே ஸ்கூல படிச்சவங்க.

ஸ்கூல்ல மட்டும் இல்ல ஓரே க்ளாஸும் கூட. தப்பி தவறி அடுத்த அடுத்த க்ளாஸ்ல போட்டால் கூட பிடிவாதம் பிடிச்சி ஓரே க்ளாஸ்ல போய் உட்கார்ந்துக்கிடுவாங்க .

ஆனந்தியும்,உமரும் க்ளாஸ்ல பண்ணாத சேட்டையே கிடையாது . இரண்டு பேருமே ரஜினி ரசிகைகள்.

வீட்டுல அது வேணும் இது வேணும்னு கேட்க மாட்டாங்க . என்ன ரஜினி படம் கூட்டிட்டுப் போறேனுச் சொன்னாப் போதும் அந்த மாதப் பரீட்சையில் அவுங்க தான் முதல் ரெண்டு ரேங்க்.

கிட்டி டீச்சர் வரலாறு பாடம் எடுத்தால் போதும் எல்லாரும் பெஞ்ச விட்டு இறங்கி டீச்சரைச் சுற்றி கீழழப் போய் உட்கார்ந்துகிடுவாங்க. ஆனா ஆனந்தியும்,உமரும் மட்டும் பெஞ்ச நகட்டிப் போட்டு சுவற்றுக்கும் பெஞ்சுக்கும் இடையில் உட்கார்ந்து மற்றப் பிள்ளைகள் சாப்பாட்ட யாருக்கும் தெரியாம சாப்பிட்டு விடுவாங்க.

டீச்சர் பார்த்துட்டா அவ்வளவு தான் .விடுவாங்க பாருங்க ஒரு கதை.
டீச்சர்..... காலையிலெ உங்க பாடத்தை எடுத்து படிச்சிக்கிட்டு இருந்தோமா ஸ்கூலுக்கு வர நேரம் ஆயிட்டு. அதனால ரெண்டு பேரும் சாப்பிடாமலே வந்துட்டோம் டீச்சர். இப்ப பசிக்க ஆரம்பிச்சிட்டு அதான் டீச்சர்.....

ஹா ஹா.......ஹா. அவுங்க சொல்லுவது பொய்னு தெரிந்தாலும் கிட்டி டீச்சர் எதுவும் சொல்ல மாட்டாங்க .

அது மட்டுமா.... டீச்சர் நின்றுகிட்டு பாடம் நடத்தும் போது அவுங்க சேலை விளிம்ப பிடிச்சிகிறது. கேட்டால் உங்க சேலை ரொம்ப நல்லா இருக்கு டீச்சர்......

கிட்டி டீச்சருக்கு குழந்தைகள் கிடையாது. ஆனா பார்க்கிற எல்லா பிள்ளைகளையும் தன் பிள்ளைகளா நினைப்பாங்க.

டீச்சருக்கு... கோபம் வருமானு கேட்டா .....ம்கூம்.... படிக்காட்டாக் கூட பக்கத்தில கூப்பிட்டு வைச்சி அன்பா அறிவுரைச் சொல்லி ஊட்டி விடுவாங்க...

சில்வியா .....டீச்சர்.....கணக்கு ...டீச்சர். இவுங்க க்ளாஸ்னாலே எல்லார் வயிற்றிலும் பானக்காரம் தான் .அதான் புளிக் கரைக்கும்.
கொஞ்சம் சிரிச்சா தான் என்ன.....ம்கூம் . நல்லா அழகா இருப்பாங்க. நல்ல வசதி. அவுங்க சிரிச்சா அன்னைக்கு கண்டிப்பா குறிஞ்சி பூ பூத்திருக்கும் . அவ்வளவு சிரிச்ச முகம்.

சில்வியா டீச்சர் தான் ஸ்கூல் A.H.M. அதனால் க்ஸாஸுக்கு அவ்வளவா வர மாட்டாங்க . வராத நாள் தீபாவளி தான் .

எங்க.....ஸ்கூல் விட்டாலும் அவுங்க.... விடமாட்டாங்கலே. கரைக்டா ஸ்கூல் கடைசி மணி அடிக்கவும் க்ளாஸ்குள்ள வருவாங்க பாருங்க........

எல்லார் முகத்திலும் ஒரு ஒளி தெரியும் . அப்படியே மயங்கி உட்கார்ந்துடுவாங்க .

மட மடனு ஒரு கணக்க போடுல எழுதிப் போடுவாங்க . எழுதும் போது கையில் கிடக்கும் தங்க வளையல்கள் கிணுங்குவதைப் பார்த்து அதுக்கு ஒரு பாட்டு .

ஆனந்தியும்,உமரும் வளையல் கிணுங்கலுக்கு ஏற்ற மாதிரி .....

"என்னோடு ...வா...துபாய்...... ஏராளமா .....ரூபாய் ......உன்னை நானும் வைச்சிக்கிறேன்.....அன்பாய்."

யாரவது டீச்சர்ட போட்டு கொடுக்கட்டுமே. அவ்வளவுதான்...... ரஜினி படம் கதை வசனம் டைரக்சன் கட்டு.....

அப்புறம் ஆக்‌ஷனோட ப்ரியா யார் கத சொல்லுவா?.
............................

ஆனந்தியும்,உமரும் டெஸ்க்ல ஏறி உட்காருவதும்,படிக்கிறப் பிள்ளைகளை கூட்டி வட்டமா உட்கார்ந்து கதைப் பேசி கலாய்ப்பதும் டீச்சர் கேட்டா பாடத்துல சந்தேகம் கேட்டதாகச் சொல்லுவதுமா எப்போதும் ஜாலியாக சேட்டைகள் செய்வார்கள் .

இருவரும் இணைந்து செய்யும் சேட்டைகளை பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம். ஆனால் இருவருக்கும் மனதில் உள்ள சோகம் கூட இருக்கும் யாருக்குமே தெரியாது.

உமரோட அப்பா அவளோட சின்ன வயதிலேயே அவளையும் ,அவள் தம்பி சாகுல் ஹமிதையும் அவுங்க அம்மாட்ட விட்டுட்டு வேறு ஒரு பெண்ணோடு போய்ட்டார் .

உமர் அம்மா தன்னோட டீச்சர் வேலையை வைத்து இவளையும்,அவள் தம்பியையும் படிக்க வைக்கிறாங்க .

வீட்டில் சிரித்து பேச முடியாத உமர் பள்ளியில் தன் தோழி ஆனந்தியுடன் சேர்ந்து தானும் சிரித்து மற்ற தோழிகளையும் சிரிக்க வைப்பாள்

ஆனந்தி நிலையோ வேறு.

அவளோட ஏழாவது வயதில் அவள் அப்பா விஷக் காய்ச்சல்ல இறந்துட்டார் . ஆனந்திக்கு இரண்டு அக்கா. மூத்த அக்கா எதுவும் தேவைனா வந்து போவாள்.

இளைய அக்கா கணவன் இறந்ததும் அம்மா வீட்டிற்கே வந்துவிட்டாள். வந்த புதுசுல ஆனந்தியும்,அவள் அம்மாவும் நல்லா தான் இருந்தார்கள். ஆனந்தி வயசுக்கு வரும் வரை.

ஆனந்தி படிப்பது அவள் அக்காவுக்கு சுத்தமா பிடிக்கவில்லை .ஏன்னா அவள் அக்கா படிக்க வில்லை. மேலும் வாழ்க்கையை தொலைத்த அக்காவுக்கு அதன் வெறுப்பைக் காட்ட ஆனந்தி தான் கிடைத்தாள்.
நின்றால் குற்றம் நடந்தால் குற்றம்.

இரவு படுத்த உடன் தூங்கி விடனும். இல்லைனா ஏன் தூக்கம் வரமாட்டுக்கு யார நினைச்சிக்கிட்டு இருக்கே. தூங்காம?.

விடிகாலை நாளு மணிக்கு எந்திக்கனும். பொம்பளப் பிள்ளைக்கு என்ன தூக்கம் வேண்டி கிடக்கு. விடியும் போதே அர்சனை நடக்கும்.

எழுந்ததும் வாசல் கூட்டிப் பெருக்கி தண்ணித் தொளிச்சா அதுக்கு ஒரு குற்றம். தண்ணிய இப்பிடியா சலப்பு சலப்புனு தொளிக்கிறது. நிறுத்தி நிதானமா இசையோடு தொளிக்கனும்

சரி..... தொளிச்சாச்சி. முடிந்ததா அர்ச்சனை. இப்ப தானே ஆரம்பிச்சிருக்கு. இனி மணி அடித்து பூஜைப் பண்ண வேண்டாம்.

புள்ளி வைத்து கோலம் போட்டால் கோலம் முடியும் வரை பார்த்துக் கொண்டே பல் தேய்த்துக் கொண்டிருப்பாள்.

யாராவது கோலம் நல்லா இருக்கு ஆனந்தி இது எத்தனை புள்ளினு கேட்டால் போதும் அவ்வளவு தான் . வேதாளம் முருங்கை மரத்தில் இருந்து தொபக்கடினு கோலத்தில் தண்ணி ரூபத்தில் குதித்து ஓடும்.

அட....டா. .ஏங்கா.. இப்படி பண்ணிட்டிங்கனு யாராவது கேட்டா இன்னைக்கு என்ன கிழமை. வெள்ளிக்கிழமை அதுவுமா கம்பிக் கோலம் போடாம புள்ளிக் கோலம் போட்டு இருக்கா. நினைப்பு பூராம் எங்க இருக்கோ.

இது பரவாயில்லை . கம்பி கோலம் போட்ட அன்னிக்கு என்ன.... உன்னையப் பொண்ணாப் பார்க்க வராங்க இவ்வளவுப் பெரியக் கோலம் போட்டுருக்க.

ஆனந்திக்கு கோபத்தில் பதில் சொல்ல வாய் எடுக்கும் போது அவள் அம்மாவைப் பார்ப்பாள் .பாவமாக இருக்கும் அவளுக்கு.

எப்பவாது வார்த்தை தடிக்கும் போது பதில் பேசி விட்டால் போதும் அம்மாவுக்கு தான் வினை. சில நேரத்தில் அம்மாவுக்கு அடி கூட விழும்.

அம்மாவுக்காக எல்லாத்தையும் தாங்கி கொண்டாள் ஆனந்தி.

ஆனந்திக்கு ஓரே ஆறுதலான இடம் அவள் படிக்கும் பள்ளிக்கூடமும், பள்ளித் தோழிகளும் தான் .

புலி எப்ப பாயும். எப்ப பிடுங்கும் என்பதான வாழ்க்கை தான் ஆனந்திக்கு. ஆனா தோழிகள் இருவரும் சேர்ந்துட்டா போதும் வானமும், வையகமும் கிடுகிடுத்து தான் போய்விடும்.

மாந்தோப்பில் மாங்காய் பறித்து தின்பதும் ,புளிய மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடுவதுமாக பள்ளிக்கூட வாழ்க்கையை கொண்டாடினார்கள்.

"தீபத்தின் ஒளியாக ஒரு பாதி நீ தேன் கொண்ட மலராக மறுபாதி நான் காற்றின் ஒலியாக வருவேனடி கனவுக்குள் நினைவாக வருவாயடி நிலவுக்கு வானம் நீருக்கு மேகம் கொடிக்கு கிளைபோல் துணை நீயம்மா"

ஆனந்தியும்,உமரும் நம்மைப் பிரிக்க யாரும் இல்லை என்ற எண்ணத்தில் இப்படி பாடி திரிந்தார்கள். எதப் பத்தியும் கவலையேப்படாம...

No comments:

Post a Comment