Sunday 4 October 2015

நவராத்திரி கொலு (தசரா) - பாகம் 3



எங்க வீட்டுக் கொலு எப்பவுமே குதூகுலமாவும், சந்தோஷமாவும், அமர்க்களமா இருக்கும். ஏன்னா கலந்துக்கிற எல்லாருமே பத்து பதினைந்து வயது குழந்தைகள்.

நாங்க இருக்கிற ஏரியாவில் எல்லாருமே அன்றாடம் வேலைக்கு போய் களைத்து வருபவர்கள். அவுங்களுக்கு கொஞ்ச நேரம் கூட தன் பிள்ளைகளோட சந்தோஷமா இருக்க நேரம் கிடைக்காது. நவராத்திரின்னாலோ, கொலுன்னாலோ எதுவும் தெரியாதவர்கள். என்ன சரஸ்வதி பூஜைனா சுண்டல், சர்க்கரைப் பொங்கல் வைப்பாங்கனு மட்டுமே தெரிஞ்சவுங்க.

முதல் முதலா நான் கொலு வைச்சப்போ எனக்கு சரியா யார்கிட்டயும் பேசி பழக்கம் கிடையாது. கடைக்கு வருகிறப் பிள்ளைகள்ட என் கணவர் தான் விளையாட்டா சொல்லுவார். எங்க வீட்டுல கொலு வைச்சிருக்கோம். உனக்கு தெரியுமானு சின்னப் பிள்ளைகள்ட சின்னப் பிள்ளை மாதிரி சொல்லுவார்.

கொலுவா..? அப்படினா என்ன மாமானு வெகுளியா கேட்கும் குழந்தைகளை வீட்டுக்கு கூட்டிட்டுப் போய் கொலு வைத்திருக்கும் அழகைக் காட்டுவார். அவருக்கும் கொலுவைப் பற்றி அப்போ சரியா தெரியாது. ஆனா குழந்தைகளுக்கு அங்கு இருக்கும் பொம்மைகளைக் காட்டுவதில் அவ்வளவு சந்தோஷம்.

கொலுவைப் பார்த்த குழந்தைகள் பார்வையில் அங்கு கடவுளையோ, பக்தியோ தெரியல. எதோ அழகழகா இருக்கும் பொம்மைகள் மட்டும் தான் தெரிந்தது. குழந்தைகள் முகத்தில் அவ்வளவு சந்தோஷம். என் கணவரோ தினமும் பார்க்க வாங்கனு அனுப்பி வைச்சார்.

ஸ்கூலுக்குப் போயிட்டு வீட்டுக்கு வந்த பிள்ளைகள் ஸ்கூல் பேக்கை வீட்டில் போட்டுட்டு தன் வீட்டில் இருந்த விளையாட்டுக் கார்,பந்து, பொம்மைகள் எல்லாத்தையும் தூக்கிட்டு வந்து அத்தை இந்த பொம்மைகளையும் இங்க வைக்கலாமானு கேட்கும் போது எனக்கு அழுகையே வந்துட்டு.

பிள்ளைகள் எல்லாரையும் வீட்டுக்கு கூட்டிட்டுப் போய் அவுங்க கொண்டு வந்த பொம்மைகளை அவுங்க கையாலே கொலுவில் வைக்கச் சொன்னேன். ஆஹா அவுங்களுக்கு தான் எவ்வளவு சந்தோஷம்.

சரி... எல்லாரும் வீட்டுக்குப் போய் யூனிபாம் மாற்றிட்டு கொஞ்ச நேரம் விளையாடிட்டு அப்புறமா வாங்கனு அனுப்பி வைச்சா யாருக்குமே போக மனசே இல்ல. இந்த பிள்ளைகளுக்கு எதாவது செய்யனும்னு நானும் என் கணவரும் முடிவெடுத்தோம்.

ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் ஒரு திறமையை வளர்க்கனும் அதுக்கு இந்த கொலுவை ஆதாரமா வைக்கனும்னு நினைச்சேன்.

எல்லாப் பிள்ளைகளுமே கொஞ்சம் கஷ்டப்பட்ட பிள்ளைகள் தான். அதனால நானே கொஞ்சம் கலர் பேப்பர், குண்டூசி, குட்டி ப்ளாஸ்டிக் குடம், பந்து, மரச் சட்டம், கலர் ரிப்பன், எம்பிராய்ட் நூல் எல்லாம் வாங்கி கொடுத்து அவுங்க அவுங்களுக்கு திறமையப் பொருத்து சின்ன சின்ன கைப் பொருள்களை செய்ய சொல்லிக் கொடுத்தேன்.

அவுங்க செய்த பொருட்களை கொலுவில் வைக்கச் சொன்னதும் எல்லாப் பிள்ளைகளும் சந்தோஷமாவும், உற்சாகமாவும் பொறுமையாவும். செய்ய ஆரம்பிச்சாங்க.

பிரேமா மரச் சட்டத்தில் பெயிண்ட் பண்ணி வெஸ்ட் நவதானிய வால்கேங்கிங், செல்வி ஐந்தாவது படிப்பவள் ப்ளாஸ்டிக் குடத்தில் வெள்ளியும், தங்கமும் தோற்கும் அளவுக்கு கும்பக் குடம் அப்படினு நிறைய பொருட்கள் செய்தார்கள்.

சின்னக் குழந்தை ரம்யாவும், பாலாவும் பொம்மைக் கேட்டு வீட்டில் அழுத போது தான் அவுங்க அம்மாவுக்கு எங்க வீட்டில் கொலு இருப்பதே தெரியும்.

ரம்யாவின் அம்மா கொத்த வேலைக்கு போறவங்க. வீட்டில் இருந்த கொலுவைப் பார்த்துட்டு அப்படியே உருகி போய் கும்பிட்டு அழுதாங்க. உடனே கடைக்கு போகும் போது பத்து ரூபாய்க்கு ஒரு பெண் தலையில் சுமை தூக்கி வைச்சிருப்பது போல் ஒரு பொம்மை வாங்கிட்டு வந்துக் கொடுத்துட்டு கண்ணீர் மல்க அடுத்த வருஷம் நா நல்லா இருந்தேன்னா என்னால முடிஞ்ச பொம்மைகளை வாங்கி தாறேன்னு சொல்லி கும்பிட்டு போனாங்க. அதோடு தெருவில் இருக்கும் எல்லார்ட்டையும் கடைக்காரக்கா வீட்டுல கொலு வைச்சிருக்காங்க. வாங்க எல்லாரும் போவோம்னு கூட்டிட்டு வந்து என்னை சந்தோஷத்தில் திக்கு முக்காட செஞ்சிட்டாங்க.

அது மட்டுமா தினமும் ஆள் ஆளுக்கு பூ பழம் பலகாரம் கொண்டு வந்து வீட்டை கோயிலாவே ஆக்கிட்டாங்க. கொலுவில் வேண்டிக்கிட்டா நல்லது நடக்கும்னு நம்பினாங்க. இன்னைக்கும் சுந்தரி தனக்கு குழந்தை பிறந்தா பொம்மை வாங்கி தாறேனு சொன்ன நடராசர் அவுங்க பேர் சொல்லிக்கிட்டு இருக்கு. "கல்யாணியே கபாலி காதல் புரியும் இந்த நல்லாசி வைத்த எந்தன் நாயகியே"


- தொடரும்


நவராத்திரி கொலு (தசரா) - பாகம் 1

நவராத்திரி கொலு (தசரா) - பாகம் 2

2 comments:

  1. நல்ல நினைவுகள்! அம்பிகையின் அருள் கிடைக்கட்டும் அனைவருக்கும்!

    ReplyDelete