Wednesday 30 September 2015

ராக்கோழிகள்


"ஏய் ...எய் கழுத என்னப் பண்ணுற. அதுக்குள்ள என்ன தூக்கம் வேண்டிக் கிடக்கு. எந்திருடி"

ஒவ்..அவ்னு கொட்டாவி விட்டப்படி எழுந்த விமலாவுக்கு எரிச்சலுடன் கோவமும் வந்தது. பின்ன தூங்கிட்டு இருந்தவளை எழுப்பி என்னப் பண்ணுறேன்னு கேட்டா.

இப்ப என்னச் செய்யனும் எதுக்கு எழுப்பினாள்னு தெரியாமலே எழுந்து போய் முகம் கழுவிட்டு வந்து கையில் புக்கோடு கட்டிலில் அமர்ந்தாள் விமலா.

"ஏய் என்ன பண்ற"னு கேட்ட அக்காவின் கேள்விக்கு ஒரு மிரண்ட பார்வையோடு என்ன என்பதுப் போல் பார்த்தாள் ஒன்னும் புரியாமல். 

"புக்கை தூக்கிப் போட்டுட்டு கிளம்பு சீக்கிரமா படம் போட்டுருவான்"

"படத்துக்கா ...நா வரலை. எனக்கு படிக்க வேண்டியது நிறைய இருக்கு. நா படிக்கனும்.நீங்க போயிட்டு வாங்க"

"உன்னைய தனியா விட்டுட்டு நாங்க மட்டும் எப்படி போக. கிளம்புடீய். போயிட்டு வந்து படிச்சா போதும். இப்ப படிச்சி கலெக்டர் வேலைக்கு போகப் போற மாதிரி தான்"

அக்காவுக்கு ஒத்து ஊதுவது போல் பார்வதி அக்காவின் சிரிப்பு விமலாவை ஆத்திரப் படுத்தியது. பாவம் விமலாவால் அழ மட்டுமே முடியும். வாய் திறந்தால் வீட்டுக்குள்ளே ஒரு படம் ஓடிவிடும் . எதற்கு வம்பு. அமைதியாவே இருப்பது நல்லதுனு இருந்து கொண்டாள்.

அம்மா தான் விமலாவுக்கு எப்பவும் சப்போட்டு. 

"சரி சரி... அவா தான் படிக்கனும்ங்கிறால்லா. படிக்கிறப் பிள்ளை ரொம்ப படம் பார்க்க வேண்டாம். வா நாம போவோம். படம் போட்டுறப் போறான்". அம்மா அக்காவை கிளப்புவதில் குறியா  இருந்தாள்.

அம்மாவுக்கு விமலா மேல் எப்பவும் பாசம் அதிகம்.எப்படியாவது நல்லா படிக்க வைச்சி நல்ல ஒரு வேலைக்கு அனுப்பனும்னு நினைப்பாள். நம்ம படும் கஷ்டத்தை மகளும் படக் கூடாதுனு நினைப்பவள்.

அம்மா பொன்னுத்தாயி. பெரிய குடும்பத்தில் சகல வசதியோடு பிறந்தவள். ஒரே அண்ணன். பாசமலர் சிவாஜியையும் மிஞ்சியவர்.

அம்மாவின் பிறந்த வீட்டில் எல்லாருமே நல்லா படித்து பதவியில் இருப்பவர்கள். ஆனா அம்மா மட்டும் கையெழுத்துக் கூட போடத் தெரியாத செல்லப் பிள்ளையா வளர்ந்துட்டாள்.

படிக்கா விட்டாலும் அவளிடம் இருந்த அந்த மிடுக்கும் தைரியமும் வீர நடையும் என் ரத்தத்தில் ஏட்டையா ரத்தம்மில்ல ஓடுது என்பாள்.

ஆம். அம்மாவின் குடுப்பத்தில் வீட்டுக்கு ஒருத்தர் ஏன் ரெண்டு பேர் நாட்டுக்காக பாடுபடுபவர்கள்.

வசதியாகவே பிறந்து வசதியாகவே வாழ்ந்த அம்மாவுக்கு அப்பாவின் திடீர் மரணம் அவளை திக்கு முக்காடப் பண்ணிட்டு. ஆனாலும் யார் கையையும் எதிர்ப் பார்க்காமல் விமலாவையும் வளர்த்து ரெண்டு அக்காக்கள் கொடுத்த கஷ்டத்தையும் சகிச்சி தன் சொந்த காலில் வைராக்கியமா இருப்பவள்.

என்னைக்கு சின்ன அக்கா வீட்டோடு வந்து தங்கினாளோ அன்னைக்கே அம்மாவின் மன வேதனையும், வேலை பளுவும், ஏன் அவளிடம் இருந்த ஒட்டு மொத்த சுதந்திரமும் பறி போனது. அம்மாவைப் பார்க்க விமலாவுக்கு  பாவமா தான் இருக்கும்.

விடியற்காலை எழுந்து ரெண்டு மூணு வீடுகளில் வேலைப் பார்ப்பாள். மதியம் பதினொரு மணியை சூரியன் பட்டு மறைந்த நிழலை வைத்து கணக்கெடுத்து நார் பெட்டியைத் தூக்கி கிட்டு வீடு வீடாப் போய் சாப்பாட்டு கேரியரை வாங்கி ஒவ்வொரு ஆபிஸா போய் சாப்பாடு கொடுக்க மைல் கணக்கில் நடப்பாள்.

விமலா  படிக்கும் ஸ்கூல் மெயின் ரோட்டில் இருப்பதால் மாடி வகுப்பில் இருந்து பார்த்தால் பத்துக்கும் மேல் பட்ட கேரியரைத் அம்மா தலை சுமையா தூக்கி செல்வதைப் பார்க்கும் போது அழுகையா வரும்.

எப்பவும் அதிகாரம் பண்ணும் அக்காவை பார்க்கையில் கோவமா வரும். அம்மா தான் பொறுமையா இருக்கச் சொல்லி கண்ணைக் காட்டுவாள். இப்பக் கூட விமலாவுக்காக தான் அவளோடு இரவு காட்சி படத்திற்கு போயிருக்காள்.

வீட்டு பக்கத்தில் தியேட்டர்.இரண்டு நாளைக்கு ஒரு படம் போடுவது அக்காவுக்கு கொண்டாட்டம் தான். பாவம் அம்மா அங்க போய் உட்கார்ந்து தூங்கிட்டு வருவாள்.

"ஆஹா மணி ஒன்னாயிட்டே. இப்ப படம் விட்டு வந்துடுவாங்கலே. உங்க கிட்ட பேசிக்கிட்டு இருந்ததுல மணியப் பார்க்கலை. எப்படியோ பேசிக்கிட்டே சயின்ஸ் காம்போசிஷன் நோட்ல மனிதனின் வயிற்றுப் பகுதியை வரைஞ்சிட்டா.

அக்காவும், அம்மாவும் வர்றதுக்குள்ள லைட்ட ஆப் பண்ணிட்டு தூங்க போறா. வரும் போது முழிச்சி இருந்தா அதுக்கும் திட்டு விழும். 

"இவ்வளவு நேரம் லைடப் போட்டுட்டு ஒரு வயசுப் பிள்ள முழிச்சி இருந்தா பக்கத்து வீட்டுல என்ன பேசுவாங்க. தப்பா பேச மாட்டாக"

ஆமாம். வயசுப் பிள்ளைய தனியா விட்டுட்டு நைட் ஸோ படத்துக்கு போறது தப்பில்லை. வயசுப் பிள்ளை முழிச்சி இருந்து படிச்சா தப்பா. எதுக்கு வம்பு லைட்ட ஆப் பண்ணிட்டு தூங்குவது போல் நடிப்போம். நீங்களும் தூங்குங்க.

குட் நைட்.

Monday 7 September 2015

முனிமா



முனிமா - அளவுக்கு அதிகமான அன்புக்கும், பாசத்திற்கும் ஏன் கோவத்திற்கும் சொந்தக் காரி. வெள்ளை மனம் கொண்டவள். யாரிடமும் மனதில் சீக்கிரத்தில் ஒட்டிக் கொள்ளும் குணம் கொணடவள்.

தன் தங்கையின் கல்யாணத்திற்காக வந்திருந்த என்னை வா என்று சொல்லா விட்டாலும் தங்கையுடன் கோவம் கொண்டு எனக்காக சண்டை இட்டு எனக்கு பிடித்த ஸ்பெஷல் தோசையை வரவழைத்து பாசத்தைக் காட்டியவள்.

கல்யாண வீட்டில் தான் பெண்ணுக்கு அக்கா என்ற நிலை மறந்து அங்கும் இங்கும் ஓடி ஓடி வேலை செய்து புன்னகையை மட்டுமே முகத்தில் காட்டி பூரிப்பு அடைந்தவள்.


எல்லார் மனதிலும் ஒட்டிக் கொண்டவள் என்னை மட்டும் எப்படி விடுவாள். ஒட்டிக் கொண்டாள் பாசத்தோடு. ஆரம்பத்தில் அவள் கோவம் கண்டு மிரண்ட என்னை தன் அன்பினால் சிறைப் பிடித்தாள்.

முனிமா அவளுக்கு மிகவும் பிடித்த பெயர் போல் அடிக்கடி தன் பெயரை தானே சொல்லி சந்தோஷம் அடைவதைப் பார்க்கனுமே.

கல்யாண வீட்டில் அவ்வளவு கூட்டத்திலும் என்னை சரியாக கவனித்துக் கொண்டாள். மணப் பெண்ணிற்கு அலங்காரம் செய்த என்னை வியப்புடன் நோக்கி தன் கல்யாணத்தில் நான் இல்லை என்ற கவலைக் கொண்டவளை இருத்தி அலங்காரம் செய்யத என்னை கட்டிக் கொண்டு அன்பைக் காட்டியவள்.

சடங்கு சம்பிரதாயம் முடிந்து புறப்பிட்ட என்னை கண்ணில் நீர் கொண்டு அனுப்ப மனமில்லாமல் வீட்டுக்கே ஆட்டோவை வரவழைத்து சிறு குழந்தையை அனுப்புவது போல் அனுப்பியவள்.

இன்று தினமும் சாப்பிட்டாச்சா, தூங்கலையா நேரத்துக்கு சாப்பிடுங்கனு அன்பு தொல்லைக் கொடுப்பவள். இவள் கள்ளமில்லா சிரிப்பில் மயங்கிய நான். எடுத்துக் கொண்டோம் நினைவாகப் புகைப் படம்.

.

கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்.



கல்யாண சமையல் சாதம். காய்கறிகளும் பிரமாதம்... படத்த பாத்தீங்கள்ல, பெண் அழைப்பு சாப்பாடு தயார் ஆகுது.

இப்படி சமையல் செய்து ரொம்ப நாட்கள் ஆயிட்டு. வீட்டுல அவுங்க இருக்கும் போது இப்படி தான். எந்த ஒரு விசேஷம்னாலும் முன்னாடி போய் நிற்பேன். நா போகாட்டாலும் தேடி வந்து அழைத்துட்டு போவாங்க.


கோலம் போடுவதில் இருந்து ஆரம்பிக்கும் என் வேலை. எல்லாத்தையும் ரசித்து ரசித்து செய்வேன்.

வீட்டில் நல்லா திட்டு வாங்குவேன் . "இவ்வளவு பெரிய கோலம் போடனுமா. சின்னதா போட்டா போதாதா"ன்னு. எல்லாம் அக்கறையுடன் அன்பால் வாங்கும் திட்டுக்கள்.

சமையலா - காய்கறி நறுக்குவதில் இருந்து அப்பளம் பொறிக்கும் வரை பக்கத்திலே இருந்து ஒவ்வொன்னா ரசனையோடு கவனிப்பேன். சமையல் எனக்கு பிடித்தமான ஒன்று.

பொண்ணுக்கு சேலைக் கட்டுவதில் இருந்து சிகை அலங்காரம் என்னுடையதாகவே இருக்கும். அதில் எனக்கும் மற்றவர்களுக்கும் ஒரு திருப்தி.

ஒரு முறை அப்படி தான் என்னோட நாத்தனார் மகன் கல்யாண விருந்து சாப்பாட்டுக்கு கூப்பிட்டாங்க. என்னிடம் யாரும் அப்போ சரியா பேச மாட்டாங்க. ஏன்னா எங்க கல்யாணம் அவுங்களுக்கு பிடிக்கலை.

கட்டாயத்தின் பேர்ல தான் அந்த விருந்துக்கு போனேன். அங்க எல்லாருமா என்னோட நாத்தனார்கள் வட்டமா உட்கார்ந்து கூடை கூடையா வெங்காயத்தை உறிச்சிக்கிட்டு இருந்தாங்க.

நமக்கு ஏன் வம்புனு தனியா ஒரு இடத்தில உக்காந்துகிட்டேன்.
விருந்துனா எல்லாருமா சேர்ந்து பணம் சேகரித்து மொத்தமா மாப்பிள்ளை பொண்ணுக்கு விருந்து கொடுக்கிறது. அதுல நாங்களும் சாப்பிடுவோம்.

கொஞ்ச பேர் தான்னு சொல்லி நம்மளே சமைக்கலாம்னு முடிவு பண்ணி முழு ஆட்டையும் வெட்டி வைச்சிருக்காங்க. ஒரு குடிகாரப் பெரியவரை நம்பி.

நான் சும்மா இருந்தாலும் என்னவர் சும்மா இருக்கனுமே. மெதுவா அடுப்பு பக்கம் போனது தான் தாமதம் எடுத்தாங்க பாருங்க ஓட்டம் எல்லாம் யாரு என் நாத்தனார்கள் தான்.

எதோ விரோதியக் கண்ட மாதிரி எல்லாத்தையும் போட்டுட்டு ஓடிட்டாங்க. அவ்வளவு தான் பிள்ளைகள் வீட்டில் ஒரே கெஞ்சல். நாம சமைப்பதில் எந்த பிரச்சனையும் இல்ல. ஆனா சமைத்ததை எல்லாரும் சாப்பிடனுமே. அதானே பிரச்சனை.

யாரைப் பற்றியும் கவலப் படாதே. எல்லாரும் சாப்பிடுவாங்கனு ஒரே அட்வைஸ். ஆத்துக்காரர் சொன்னா அடுத்தப் பேச்சி ம்கூம்.

பெரிய அண்டாவில் நிறைய தண்ணீரில் பருப்பு வேகப் போட்டுருக்கு. எதுக்குனா எலும்பு குழம்புக்காம். பெரியவர் சொன்னார். பெரியவர் சமையல்காரர் அல்ல சொந்தக்காரர்.

பெரியவரை ஒரு இடத்தில் உட்கார வைத்துட்டு ஆரம்பிச்சோம் பாருங்க நம்ம சமையல. கறி துவட்டல், சால்னா, சுக்கா வறுவல், குடல் பிரட்டல், தலைக் கறி குழம்பு, கத்தரிக்கா எலும்பு கறி, ரசம், பாயாசத்தோடு விருந்து தடபுடல்.

ஓடியவர்கள் எல்லாம் ஒட்டிக் கொண்டது நம் சமையலில் தான்னு சொல்லிக்க பெருமைப்படுகிறேன்.

Wednesday 2 September 2015

குதிரைக் கதை


வீட்டுப் பக்கத்தில ஒரே ஒரு கடை இருக்கு. அந்தக் கடையில போய் கொஞ்சம் காய்கறிகள வாங்கிட்டு திரும்பி வரும் போது பார்த்தா ஒரே குதிரைக் கூட்டம்.
கலர் கலரா அழகா குட்டிகளோடு பார்க்க அழகாவும் பயமாவும் இருந்துச்சி. பின்னே ஒன்னை ஒன்னு விரட்டிக்கிட்டு ஓடினா பயமா தானே இருக்கும். போட்டோ எடுக்கும் வசதி இல்லா வருத்தம் வேறு. வீட்டுக்கு வந்தும் குதிரை ஞாபகம் தான்.

பழைய கதை ஒன்று ஞாபகத்திற்கு வந்தது. 
**********************

ஒரு விவசாயி ஒரு குதிரையையும், ஆட்டையும் வளர்த்து வந்தான். ரெண்டும் நல்ல நட்பா இருந்தது. ஒரு நாள் குதிரைக்கு உடம்புக்கு முடியாமப் போய்ட்டு. விவசாயி டாக்டரை வரவழைத்து மருந்து கொடுக்கச் சொன்னார்.

குதிரையைப் பார்த்த டாக்டர் அதுக்கு வைரஸ் நோய் வந்திருக்கு. மூன்று நாள் மருந்து தாறேன். அப்படியும் குணம் ஆகலைனா இனி பிழைக்காதுனு சொல்லிட்டார்.

குதிரையின் நண்பன் ஆட்டுக்கோ ஒரே கவலை. நம்ம நண்பனுக்கு இப்படி ஆயிட்டேனு.

விவசாயி முதல் நாள் மருந்து கொடுத்தார். குதிரைக்கு எழுந்து நிற்க கூட முடியவில்லை. இன்னும் இரண்டு நாள் இருக்கு அதற்குள் சரியாகா விட்டால் உன்னை நம்பி உபயோகம் இல்லைனு சொல்லிட்டு போய்ட்டார்.

ஆடு தன் நண்பனைப் பார்த்து நண்பா கவலைப் படாதே. மெதுவா எழுந்து நிற்க முயற்சி செய். உன் முயற்சி உன்னை எழுந்து நிற்கச் செய்யும் . நீ எழுந்து நடக்கா விட்டால் உன்னை கொன்று விடுவார்கள் என்று குதிரைக்கு ஊக்கம் கொடுத்தது.

மூன்றாம் நாள் மருந்தும் கொடுத்தாச்சி. டாக்டர் விவசாயிடம் நாளைக்குள் எழுந்து நடக்கா விட்டால் குதிரையை கொன்று விடுங்கள். இல்லையென்றால் வைரஸ் மற்றவர்களுக்கும் பரவி விடும்னு சொல்லிட்டுப் போய்ட்டார்.

மருத்துவர் சென்றதும் ஆடு குதிரையிடம் நண்பா எப்படியாவது எழுந்து நடக்க முயற்சி செய். உன்னால் நடக்க முடியாமல் போனால் உன்னைக் கொன்று விடுவார்கள் என்றது.

குதிரை மெதுவா கஷ்டப் பட்டு எழுந்து நடக்கத் தொடங்கியது.
நடந்ததோடு அல்லாமல் ஓடவும் துவங்கியது. அந்தப் பக்கம்
தற்செயலா வந்த விவசாயி குதிரை ஒடுவதைப் பார்த்து சந்தோஷத்தில் உடனே டாக்டருக்கு போன் செய்து 

"டாக்டர் நீங்க கொடுத்த மருந்தால் என் குதிரை நல்லா குணம் ஆயிட்டு. என் குதிரையை பிழைக்க வைத்த உங்களுக்கு விருந்து ஏற்பாடு பண்ணுறேன் உடனே வாங்க" என்றான். 

குதிரை ஆட்டின் ஊக்கத்தால் எழுந்து நடந்தாலும் டாக்டர் கொடுத்த மருந்தால் தான் குதிரை குணமடைந்ததா நினைத்தான்.

குதிரை நல்லா குணம் அடைந்தாலும் நண்பனை பிரிந்த கவலையில் மனதால் மிகவும் கஷ்டப்பட்டது. விருந்துக்குப் பலியான நண்பனை நினைத்து கண்ணீர் விட்டது.