Wednesday 7 October 2015

நவராத்திரி கொலு (தசரா) - பாகம் 5



ஒரு மாலை வேளை. உதிர்ந்த மல்லிகை மலர்களை தொடுக்கும் நேரம் இரண்டு தேவதைகளோட நடமாட்டம். யாரதுன்னு பாத்தா மலரும் , பானும் தான்.

“வாங்கப்பா எப்படி இருக்கீங்க. பார்த்து ரொம்ப நாளாச்சி. ஸ்கூலுக்கு போயிட்டு வந்துட்டிங்களா?”

“இல்ல அத்தை. இப்போ ஸ்கூல் லீவு. காலாண்டு பரீட்சை முடிந்து லீவு விட்டுட்டாங்க”. சொன்ன பானுவின் காதில் மலர் எதோ சொல்ல நீயே கேளுனு அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

“என்னப்பா உங்களுக்குள்ளே பேசிக்கிறீங்க. என்னனு சொன்னா நானும் கேட்டுப்பேன்ல. என்னடா அது ரகசியம். வாங்க முதல்ல கிட்ட வந்து உட்காருங்கடா”

“இல்ல அத்த. இவா சொல்லுதா உங்கள இப்போ பார்த்தா பயமா இருக்குனு”

“யே....ய். நீயும் தானே சொன்னே. இப்போ என்னைய மட்டும் சொல்லுதே”

இரண்டு சின்ன வாக்குவாதம் செய்வதும் அழகு தான்.

“இல்லத்த, நீங்க முன்னாடி எல்லாம் பார்க்க அழகா எப்பவும் சிரிச்சிக்கிட்டு இருப்பிங்க. ஆனா இப்போ உங்க கிட்ட வரவே பயமா இருக்குத்தே”

“எதுக்குப்பா பயப்படுறீங்க. பயப்படாதிங்க. நா உங்க அத்தை தானே, எதுக்கு பயம்?

“இல்ல அத்த ராமு, செந்தில், ரவி, உஷா, கவிதா எல்லாரும் உங்க வீட்டுக்கு வரப் பயப்படுறாங்க. எங்களுக்கும் கொஞ்சம் பயமா தான் இருந்துச்சி. ஆனா உங்களைப் பார்த்ததும் சரியாயிட்டு. மாமா செத்ததை நாங்கப் பார்த்தோம் அத்தை. எனக்கு காய்ச்சலே வந்துட்டு”

“எனக்கும் தான் அத்தை. அப்புறம் ஊசியெல்லாம் போட்டு தான் சரியாச்சி”

கள்ளம் கபடம் இல்லாமல் பேசும் குழந்தைகள் கண் முன் நிகழும் மரணம் எத்தனை கொடியது. நான் எப்படி சொல்வேன். மாமா சதிகாரர்களின் கொலையால் கடவுளிடம் போயிட்டார் என்று. அள்ளி முடியாத கூந்தலும், புன்னகை இல்லா என் முகம் பார்க்க பயப்படும் குழந்தைகளிடம் என் நிலையை எப்படி விளக்குவேன்?

பானு தான் முதலில் கேட்டாள்.

“அத்தை கொலு எப்போ வைப்பிங்க? நாங்க தினமும் உங்க வீட்டத் தூரமா நின்னுப் பார்ப்போம். ஆனா உங்க வீடு பூட்டியே இருக்கும். இனி மாமா வர மாட்டாங்களா அத்தை. நீங்க இப்படியே தான் இருப்பிங்களா அத்த?”. கேட்கும் ரெண்டு பேருக்கும் ஆறேழு வயது தான் இருக்கும்.

எங்க வீடு, எங்க அத்த வீடு, எங்க மாமா வீடுனு உரிமையோடு வந்து விளையாடும் குழந்தைகள் இன்று உங்க வீடுனு தனியா பிரித்து சொல்லும் போது மனசு வலிக்க தான் செய்தது. ஒரு மரணம் சீக்கிரத்தில் எல்லாவற்றையும் மாற்றி விடுகிறது.

கட்டிய மலர்களை ரெண்டு பேருக்கும் சூடி விட்டு “சரிப்பா வீட்டுக்கு போயிட்டு நாளைக்கு வரும் போது ரவி, ராமு, கவிதா, உஷா செல்வி எல்லாரையும் கூட்டிட்டு வாங்க. அத்தை எல்லாரையும் தேடினேன்னு சொல்லுங்க என்ன”

பானுவும் மலரும் கடைசியா கேட்ட கேள்விக்கு என்னப் பதில் சொல்ல என தெரியாமல் இருக்கும் போது தான் பக்கத்து தெருவில் இருக்கும் அம்மன் கோயில் நியாபகத்திற்கு வந்தது. இந்த குழந்தைகள் ஆசை என்றும் தடைப்படக் கூடாது.

வேலைக்கு போயிட்டு வந்த பெரியவனிடம் மாடியில் இருக்கும் கொலு பொம்மைகளை கீழே இறக்கச் சொன்னேன். எதுவும் புரியாமல் விழித்தவன் பின் “கொலு வைக்கப் போறீங்களாமா”னு கேட்டவனிடம் “நானே கொலுவில் இருக்கும் போது எப்படிடா அதெல்லாம். இந்த பொம்மைகளை எல்லாம் பக்கத்து தெருவில் இருக்கும் கோயிலில் கொண்டு கொடு” என்றேன்.

சின்ன சின்னப் பொம்மைகளை வந்திருந்த குழந்தைகளுக்கு பரிசா கொடுத்துட்டு அம்மன் கோயில்ல நாளையில இருந்து கொலு வைப்பாங்க போய் பார்க்கச் சொன்னேன். கோயில் பூசாரி முதலில் சம்மதிக்கவில்லை. கூட்டி பெருக்குவதில் இருந்து கோலம் போடுவது வரை தெரு பிள்ளைகள் சம்மதித்ததும் ஒத்துக்கிட்டார். சின்னக் கோயில் தான். அவ்வளவா வருமானம் வராது. ஆனா இன்று என் தெருக்காரப் பிள்ளைகளால் கொலுவில் பேர் வாங்கி நிற்குது. அதை நினைக்கையில் இப்போ பெருமையா இருக்குது.


- தொடரும் 


நவராத்திரி கொலு (தசரா) - பாகம் 1
நவராத்திரி கொலு (தசரா) - பாகம் 2
நவராத்திரி கொலு (தசரா) - பாகம் 3
நவராத்திரி கொலு (தசரா) - பாகம் 4

1 comment:

  1. நல்ல யோசனை செய்து கோயிலில் கொலு வைக்க வைத்தமை சிறப்பு! நன்றி!

    ReplyDelete