Wednesday 7 October 2015

நவராத்திரி கொலு (தசரா) - பாகம் 4



எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. பாளையங்கோட்டை தான் நான் பிறந்து வளர்ந்த ஊர். தாமிரபரணி தண்ணீர் குடித்து வளர்ந்தவள். பொதுவா சொல்லுவாங்க கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்னு. பாளையங்கோட்டையைப் பொருத்த வரை கோயிலுக்குப் பஞ்சமே கிடையாது. தடிக்கி விழுந்தா கோயில்கள் தான். நெல் காத்த நெல்லையப்பர் முதல் ராமர், கிருஷ்ணர், கோபாலன், பிள்ளையார்,முருகர்னு கோயில்கள் நீண்டுக்கிட்டேப் போனாலும் அம்மன் கோயிலுக்கு தனி சிறப்பு உண்டு.

அம்மன் கோயில்னா ஒன்னு ரெண்டு கோயில் இல்லைங்க. ஒரே பெயரில் ரெண்டு மூணு கோயில்களும் உண்டு. ஆனா அக்கா தங்கைகள்னுச் சொல்லி ஏழு பேர் ஊருக்குள்ள இருந்து அருள் புரியும் அழகே தனி தான்.

பெரியவள் ஆயிரத்தாள், அடுத்து பேராச்சி . இவள் மட்டும் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமர்ந்து பேராத்துச் செல்வி என்கிறப் பெயரில் ஆற்றுக் கரையில் குடியிருக்கும் மக்களுக்கு துணையா இருக்காள்.

அடுத்து மூணாவதா முப்பிடாதி. நாலாவதா உலகம்மா. ஐஞ்சாவதா முத்தாரம்மா, ஆறாவதா உச்சினிமாகாளி, ஏழாவதா கடைக்குட்டி தூத்துவாரி அம்மன்னு அக்கா தங்கச்சிக்குள்ள இருக்கிற ஒற்றுமையப் பார்க்கனுமே. அதிலும் நவராத்திரி வந்துட்டாப் போதும் அக்கா தங்கைகளுக்குள் இருக்கும் சந்தோஷத்தை ஒண்ணா ஒரே நேரத்தில் பார்க்க காண கண் கோடி வேண்டும்.

புரட்டாசி மாத அமவாசை வளர் பிறை முதல் நாளில் ஆற்றங்கரையில் இருக்கும் பேராச்சியை தவிர மற்ற தங்கைகளான முப்பிடாதி, உலகம்மா, முத்தாரம்மா, உச்சினிமாகாளி எல்லாரும் அக்கா ஆயிரத்தாள் வீட்டுக்கு படை சூழ வருவார்கள். கடைக் குட்டி தங்கை தூத்துவாரி பெரியவள் ஆயிரத்தாள் பக்கத்திலே இருப்பதால் அவளை அழைத்துக் கொண்டு அக்கா தங்கைகள் சிவப் பெருமாளை வழிப்பட்டு நகர்வலம் வருவார்கள். விடிய விடிய சந்தோஷத்தை களிப்பில் விளையாடி கழித்து விடிந்ததும் அவர் அவர் வீடுகளுக்கு செல்லும் அழகை சொல்லி மாழாது.

அமவாசை முதல் நாளில் ஒன்று ரெண்டு அல்ல பத்து சப்பரத்தில் பத்து பேரா விளக்கு அலங்காரமும், பூ அலங்காரமுமா வரும் அழகே அழகு தான். பேராச்சி அன்னைக்கு மட்டும் தனித்து தன் ஊர் ஜனங்களோடு அவள் இருக்கும் இடத்திலே நகர்வலம் வருவாள்.

பத்து சப்பரமா அது எப்படினுக் கேட்டா அக்கா தங்கைகளையும் நம் மக்கள் தத்து எடுத்து தனியா அசைவம், சைவம்னு பிரிச்சிட்டாங்கல்ல.

அமாவாசை அன்று காலையில் நேர்த்திக் கடனா பால் குடம் எடுப்பார்கள். எல்லாக் கோயில்ல இருந்தும் சின்னப் பிள்ளைகள் முதல் பெரியவங்க வரை ஒன்று மாத்தி ஒன்றா கொட்டு மேளத்தோடு வரும் போது பார்க்க அழகா இருக்கும். அன்று எல்லா அம்மனுக்கும் சந்தனங்காப்பு அலங்காரம் செய்வார்கள். மாலையில் சப்பரத்தில் வந்த அம்மனை கொலு வைக்கும் கொலு மண்டபத்தில் பூ அலங்காரத்தில் லைட் அலங்காரமும் சேர்த்துப் பார்க்கும் போது அப்படியே நம்மை மறந்து அவள் காலடியில் கொஞ்ச நேரம் அமர தோன்றும்.

இறைவன் உலகத்தை படைக்க விரும்பிய போது இச்சை (ஆசை) சக்தி தோன்றியதாம். அவனே எப்படி படைக்கலாம் என எண்ணும் போது தோன்றியது தான் ஞான சக்தி (அறிவு). இறைவன் உலகத்தைப் படைத்தது (அருள்) கிரியா சக்தி.

அமவாசையின் மறுநாள் வரும் முதல் மூன்று நாள்களும் அம்மனை இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கை அலங்காரம் செய்வாங்க. அடுத்து வரும் மூன்று நாள்கள் அதாவது நாலாவது ,ஐந்தாவது, ஆறாவது தசரா நாளில் அம்மனை கிரியா சக்தியான லெஷ்மியின் அலங்காரம் இருக்கும். ஏழாவது, எட்டாவது, ஒன்பதாவது நாட்கள் ஞானசக்தியான சரஸ்வதியின் அலங்காரம் செய்வார்கள். மகிஷாசூரன் என்ற அசுரனை ஒன்பது ராத்திரி போராடி ஒன்பதாவது நாள் அவனை வதம் செய்த நாள் தான் தசராவின் நோக்கமே. நவ என்றால் ஒன்பது என்று அர்த்தம். நவராத்திரி என்பதை நவரத்தினமா மின்னும் அம்மனை சொல்லலாம்.

இதையெல்லாம் விட ஒன்பதாவது நாள் பேராச்சி அம்மன் அக்கா வீட்டுக்கு வரும் அழகே தனி தான். ஆமாங்க. கொட்டு மேளத்தோடு வருஷத்தில் ஒரு நாள் வரும் தங்கைக்கு பெரிய அக்காவான ஆயிரத்தாள் உடுத்தும் உடையில் இருந்து போட்டுக்கும் நகை, பூ அலங்காரம், லைட் அலங்காரம்னு கொட்டு மேளத்தோடு வரவேற்கும் அழகைப் பார்க்க காணக் கண்கோடி வேண்டும். ஒன்பதாவது நாள் மாரி அம்மன் கோயில் மைதானத்தில் வைத்து நடக்கும் சம்காரத்தைப் பார்க்கனுமே. சைவ சாமிகள் எல்லாம் வேடிக்கைப் பார்க்க அசைவ சாமிகள் எல்லாம் சூரனை வதம் செய்வார்கள். சூரனைக் கொன்ற களைப்பில் அவர் அவர் வீடுகளுக்கு சென்று கையில் குடதோடு ஆற்றில் குளிக்க புறப்பிட்டு விடுவார்கள். தங்கை பேராச்சிக்கு அக்கா ஆயிரத்தாள் ஐஞ்சி வகை கட்டுச் சோறுக் கட்டி அனுப்பி பின்னாலே தானும் உடன் சென்று ஆற்றில் நீராடி தங்கை பேராச்சி வீட்டில் எல்லா தங்கைகளும் பகல் முழுதும் தங்கி இரவில் வீடு திரும்புவார்கள். கையில் குடத்து நீருடன் கூந்தலை விரித்தவண்ணம் வீடு திரும்பும் அழகோ அழகு. அன்று இரவு சூரனை வென்ற சந்தோஷத்தில் பூம் பல்லாக்கில் ஊர்வலம் .பிறகு என்ன சந்தோஷக் களிப்பில் இனி வரும் நாள்கள் ஊஞ்சல் திருவிழா தான்.

என்ன தான் குலசேகரப் பட்டணத்தில் தசரா கொண்டாடினாலும் எனக்கு என்னவோ பாளையங்கோட்டை தசரா தான் பிடிக்கும். தசரா வந்துட்டாலே சாதி மதம் இல்லாமல் திருவிழாக்களை கண்டு மகிழ்வார்கள். கடை கடைக்கு செய்திருக்கும் லைட் அலங்காரத்தைப் பார்க்கவே ஒரு கூட்டம் கூடும். ஊருக்கு மத்தியில் சப்பரம் நிற்பதற்காக பெரிய பந்தல் போட்டு அதில் பெரிய போர்டு போட்டு இருப்பாங்க. எந்த கோயிலில் என்ன ஸ்பெஷல் அதாவது கும்மி, கோலாட்டம், பாட்டுக் கச்சேரி, கரகாட்டம், வில்லுனு எழுதிப் போட்டுருப்பாங்க. யாருக்கு எதுப் பிடிக்குமோ அதை விரும்பி ரசிப்பார்கள்.

தசரா அன்று மொத்தம் பதினொரு சப்ரம் பேராச்சியையும் சேர்த்து புறப்படும். தங்கைகளை முன் விட்டு பின்னால் பெரிய அக்கா ஆயிரத்தாள் வரும் அழகே அழகு.

(அம்மன் வருதப் பாருங்கடி. அவா அசைந்து வர்றதப் பாருங்கடி)





ஒரு மனிதனுக்கு தேவையான கல்வி, செல்வம், வீரம் அனைத்தையும் தர வல்ல அம்மனை வணங்குவோம்.




- தொடரும் 




நவராத்திரி கொலு (தசரா) - பாகம் 1
நவராத்திரி கொலு (தசரா) - பாகம் 2
நவராத்திரி கொலு (தசரா) - பாகம் 3

2 comments:

  1. தசரா நினைவுகள் அற்புதம்! தொடர்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க. தொடருங்கள்

      Delete