Sunday, 12 July 2015

இரண்டாம் பிரசவம்






வாழ்க்கை நிறைய நியாபகங்களைத் தனக்குள் புதைச்சு வச்சிருக்கு. ஏழும் பொண்ணா பிறந்தவீட்டில் ஏழாவது பொண்ணாகப் பிறந்த எனக்கு மூத்த பிள்ளையும் பொண்ணாகப் பிறந்தது.

அக்காள்களின் அளவுமிகுந்த கண்டிப்பில் வார்த்தைகள் கூட அதிர்ந்து பேசாத என்னை பரிவோட தாங்கிய மனிதர்களை.நினைக்கும் போது கண்ணீர்முட்டுது. என்னைப் பிள்ளையாய் வளர்த்து, என் பிள்ளைக்கும் அன்பு செய்த பெரியைய்யா!
அக்காள்கள்.தராத அன்பை அளவில்லாமல் என்மேல் கொட்டின சிங்கு அம்மா. இங்கே நான் கார்த்திக் அம்மா மாதிரி அவங்க எனக்கு சிங்கு அம்மா.

*
ஒளவை ஆசிரமம் (1988)
அங்கே தான் கொஞ்ச நாள் டைப்பிஸ்ட்டா வேலைப் பாத்துக்கிட்டு இருந்தேன்.
பத்தாங்கிளாஸ் படிக்கும் போதே. பெரிய ஐயா உதவியோடு டைப்பிங் படிச்சது பின்னாளில் உதவியா இருந்தது. ஐந்தாறு கிலோ மீட்டர் நடந்தே வேலைக்குச் செல்வேன்.

பஸ் வசதி கிடையாது. வழி நெடுக பனை மரத்தில் கள் இறக்கிக் கொண்டும் சில இடங்களில் தோட்டத்தில் பெண்களும் வேலைப் பாத்துக்கிட்டு இருப்பாங்க. சுத்தி காடு தான். ஊரை மறைக்க பொத்தை (குன்று) வேற என்ன நடந்தாலும் தெரியாது. தைரியம் மட்டும் தான் என்னோடு.

வயிற்றில் இரண்டு மாதக் குழந்தை. இரண்டாம் முறைக் கருவுற்றிருந்தேன். எல்லோரும் ஏன் என் மாமியார் கூட இந்தா குழந்த வேண்டாம்மா இப்போன்னு அழிக்கச் சொல்லி ஆஸ்பத்திரிக்கெல்லாம் கூட்டிட்டு போனாங்க. நானும் போனேன்.இரண்டு ஊசியப் போட்டு கை நிறைய மாத்திரையும் கொடுத்தாங்க.

"ஏம்மா மூத்தது பொண்ணு தானெ இந்த குழந்தைய பெத்துக்கிட வேண்டியது தானே"ன்னாங்க. "சூழ்நிலைமா எனக்கு ஒரு குழந்தையே போதும்னு அழுதேன்".அப்புறம் இரண்டு நாள் மாத்திரைய சாப்பிட்டேன். எங்கூட வேலைப் பாக்கிறவங்க. ஏம்பா இந்த குழந்தைய பெத்துக்கப்பா.மூத்த பிள்ளைய அக்காட்ட விட்டுட்ட. இதாவது உனக்கு துணையா இருக்கட்டுமேனாங்க. உனக்கு நாங்க இருக்கோம் ஏன் பயப்பிடுதேனு ஆறுதல் சொன்னாங்க. மனசுக்கு சரினுபட்டுச்சி.என்ன ஆனாலும் சரி இந்த பிள்ளைய நல்லப் படியா பெத்துக்கிடனும்னு மாத்திரையெல்லாம் தூக்கி விசிட்டேன்.

எப்போதும் போல வேலைக்கு நடந்தே போனென். வயிற்றுப் பிள்ளைக்காரி காட்டு வழியா தனியாப் போறாளேனு பக்கத்தில எல்லாரும் வருத்தப் படுவாங்க. எல்லாம் கடவுள் பாத்துக்கிடுவார்னு தைரியமாயிருந்தேன். எப்போதும் என்னோட கஷ்டத்த யார்கிட்டேயும் அவ்வளவு சிக்கிரத்தில் சொல்லிப் பழக்கமில்லை.

*
ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளின் முகத்தைப் பார்த்ததுமே என் கவலையெல்லாம் பறந்து போகும். பேறுகாலத்திற்கு ஒரு வாரம் இருக்கும் போதே லீவுக் கேட்டு தனியளாகப் பிறந்த ஊருக்கு வந்தேன். அக்கம்பக்கம் எல்லாரும் என்னைப்பாக்க வந்தாங்க சந்தோஷ்சமாயிருந்திச்சி. போகும் போது மூத்த பிள்ள ரொம்ப கஷ்டப்பட்டு பிறந்தது. இது என்னப் பண்ணப்போதோன்னாங்க.

அப்ப எனக்கு தைரியமும் ஆறுதலும் கொடுத்து பாத்தவங்க என்னோட பெரிய ஐயாவும், சிங்கு அம்மாவும் தான்.
என் அம்மா பாவம், என்ன செய்வாங்க அதிகாரத்தை எல்லாம் தன் பெரிய மகள் கையில் கொடுத்திட்டு வாயில்லா பூச்சியாய் ஆனால் பேரன் தான் பிறக்கனும்னு மனசால வேண்டிக்கிடந்தது. ஏழும் பொண்ணாய் பெத்த ஆத்தா சத்தமில்லாத கண்ணீரில் நனைந்தாள்.
*
தை 10 பனி ஊரையே உறைய வைத்திருந்தது. வலி எடுக்காமலே சாயங்காலம் இருட்டிப்போச்சு. (ஜனவரி 22 )

என் அக்காட்ட சிங்கு அம்மா தான் பக்கத்துல இருக்கிற ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய் காட்டச் சொன்னாங்க. அங்க போனா டாக்டர் இல்லை.எனக்கு மனதில் சந்தோஷம். ஏன்னா என்ன கஷ்டப்பட்டாலும் வீட்டுல தான் பெத்துக்கனும்னு நினைச்சேன்.
அம்மாட்ட மெதுவாச் சொன்னேன். அப்ப அம்மாவுக்கே பேறுகாலம் பாத்த பாப்பக்கான்ற மருத்துவச்சி ஆச்சியின் வீடுட்ட தேடிப்பிடிச்சிப் போய் வரச் சொன்னாங்க.

பாப்பாக்கா அருமையான கைராசிக்காரினு பேர் வாங்கினவங்க. சரியா ராத்திரி 8.30க்கு வந்தாங்க.

"என்னம்மா எப்படியிருக்க
மூத்த பிள்ளைக்குதான் என்ன கூப்பிடல. சரி கவலைப்படாதே சந்தோஷமா இரு நல்லா சாப்பிடு காலைல பிறந்திடும்".

"எங்க ஆச்சி சாப்பிட வலியேயில்ல".

வலிவர்ரதுகு ஒரு ஊசியப் போட்டு.
சரி நான் கொஞ்ச நேரம் தூங்குறேன்.வலி வந்ததும் எழுப்புன்னு படுத்துட்டாங்க. எனக்கு அழுகை தான் வந்தது.

கடவுளே நான் என்ன பாவம் பண்ணுனேன்.மூத்தப் பிள்ளைக்கும் வலிவராம தான் கஷ்டப்பட்டேன். இந்த பிள்ளைக்கும் கஷ்டத்தக் கொடுத்துடாதப்பானு அழுதேன்.

அக்கா,அம்மா,சிங்கு அம்மா,பெரியக்கா மகள் எல்லாரும் விடிய விடிய தூங்கல.பாவம் சிங்கு அம்மா என் கூடவேயிருந்து ஆறுதல் சொல்லிக்கிட்டே இருந்தாங்க. ஜனவரி 23 விடியக் காலை மணி 5.அப்ப தான் பாப்பக்கா தூங்கி எந்திஞ்சாங்க.
" என்னடி யாரும் தூங்கலையா. நான் தான் சொன்னனடி காலைல பிறக்கும்னு. அப்ப ஏன் அழுதுக்கிட்டு இருக்க அக்கா தந்த காபியக்குடிச்சிக்கிட்டே பயப்படாதே .ஒரு ஊசி போட்டுடுவோம்னாங்க."

*

ஊசி போட்டதும் யாருமே எதிர்ப் பாக்காத நேரத்தில சரியா 6.30க்கு பிறந்தார்
எங்க ஏழை வீட்டு இளவரசன். ஆஹா என்னவோர் அழகு .வட்ட நிலா முகத்தில் துளசிப்பூ விழிகள்.குவளைப்பூ. வாய்மொழியில் .எல்லாரையும் விட எங்க அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம்.இருக்காதா பின்ன. ஒரு தலைமுறைக்குப் பின்னே எங்க வீட்டின் இரண்டாவது ஆண் வாரிசு.

கூட விளையாட தம்பி கிடைத்த சந்தோஷத்தில் மகள். பேறுகாலத்தை திறம்பட கையாண்டு முழு உயிரைக் கையில் அள்ளித்தந்த
பாப்பக்கா திறமைய கண்டிப்பா பாராட்டனும். பூ ,பழம்,பணமெல்லாம் கொடுத்து சந்தோஷமா அனுப்பி வைச்சாச்சி.

*
அடுத்த நிமிஷம் பாத்தா பெரிய ஐயா என் தகப்பன் ஸ்தானத்து உணர்வோட என்னைப் பார்க்க வந்திருந்தாங்க. இந்த இடத்தில் கண்டிப்பா அவரைப் பற்றிச் சொல்லியே ஆகனும். ஐயா ஒரு Retd. Head Master. வலதுகை தெரியாமல் உதவி செய்வதில் அதிலும் எனக்கு கர்ணரை விட உயர்ந்தவர்.

என்னை நல்ல ஒரு வேலையில் வைச்சிப்பாக்க ஆசைப்பட்டவரும் கூட.அவரோட அறையில் புத்தகமா இறைந்து "நிறைந்து" கிடக்கும். அடிக்கி வைச்சா அது என்ன அழகுக்கா வைச்சிருக்கும்பாங்க. எனக்கு வாசிக்கிறப் பழக்கமும் அவர்டயிருந்து தான் வந்தது.

என் வீட்டில யாருக்கும் வாசிப்போ புத்தக வாசனையோ கிடையாது.

நிறைய நல்ல காரியம்மெல்லாம் கற்று தந்ததும் அவர் தான். நான் பேறுகாலத்தின் ஒவ்வொருநாளும் என்னைப் பாக்க வந்திருவாங்க. அப்படித் தான் அன்னைக்கும் வந்திருந்தாங்க.

குழந்தையேப் பிறந்திட்டுனு தெரிஞ்சதும் அவ்வளவு சந்தோஷம்.நெற்றியில் சிலுவைப் போட்டு ஆசிர்வாதம் பண்ணினாங்க. சிங்கு அம்மா தான் சந்தோஷத்தில ஐயா அப்படியே பிள்ளைக்கு செனத்தண்ணி "சீனித்தண்ணி" வைச்சிருங்கன்னு சொல்லி சர்க்கரைப் பாகு கரைசல் கொடுத்தாங்க.

அப்பெல்லாம் குழந்தை பிறந்ததும் நாக்கில் தேன் தொட்டுவைப்பாங்க. உடனே அந்த ஐயா எனக்காக வாங்கி வந்த பேனாவை எடுத்து சீனித்தண்ணியத் தொட்டு குழந்தையின் வாயில் வைச்சி விட்டாங்க. எல்லோருக்கும் ஒரே சந்தோஷம். காளிதாசன் நாக்கில் சக்தி எழுதினதுபோல உணர்ந்தேன்.

கோத இவன் இந்த ஐயாவ மாதி படிச்சி பெரிய ஆளா வருவான் பாருனு சிங்கு அம்மா சொன்னாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்திச்சி.

*
குழந்த பிறந்து ஒரு வாரம் ஆயிட்டு பேர் வைக்கனுமே. இரண்டாவது பிள்ளை தானேனு கொஞ்சப் பேர மட்டும் கூப்பிட்டு இருந்தோம். என்னப் பேர் வைக்கனு யாருமே முடிவு பண்ணல.
மூத்த பொண்ணுக்கு பிறக்கிறதுக்கு முன்னாலயே பேர் வைச்சாச்சி. மஹேஸ்வரி. மகனுக்கு என்னப் பேர் வைக்கப் போறாங்களோ எனக்கு கொஞ்சம் கவலையா தான் இருந்துச்சி.

எங்க அக்கா "செந்தில்ன்னு" வைக்கச் சொன்னாங்க.அம்மாவுக்கு "ஐயப்பன்" அல்லது "மணிகண்டன்னு" வைக்கச் சொன்னாங்க. மணி எங்க வீடுகளில் பலருக்கும் அழைக்கும் பெயர். சிங்கு அம்மா தான் எல்லாரும் அவுங்களுக்கு பிடிச்ச பெயரை துண்டுச் சீட்டில் எழுதி குடத்தில் போடச் சொன்னாங்க. என்ன தவிர எல்லாரும் எழுதினாங்க. அப்பவும் சிங்கு அம்மா தான் பிள்ளையப் பெத்தவ நீயும் எழுதுன்னாங்க.

சந்தோஷத்தில கார்த்திகேயன மனசுல வச்சிக்கிட்டு "கார்த்த்க்னு" எழுதினேன். எல்லா சீட்டயும் விளக்கு முன்னால் போட்டு சாமியக் கூம்பிட்டு சிங்கோட தங்கை இரண்டு வயது குழந்தைய எடுக்க சொன்னாங்க. எடுத்தது பாருங்க ஒரு சீட்ட எல்லாருக்கும் ஒரே ஆவல் என்னப் பெயருனு தெரிஞ்சிக்கத் தான்.

அந்தக் குட்டிப் பொண்ணு என்னடானா சீட்ட எடுத்துக்கிட்டு ஓரே ஓட்டம் அவுங்க வீட்டுலப் போய் ஒழிஞ்சிக்கிடுச்சி. அப்புறம் ஒரு வழியா தாஜாப் பண்ணி வாங்கிப் பாத்தா வந்திருந்த பெயர் "கார்த்திக்"ன்னு. என் சந்தோஷத்திற்கு கேட்கவா வேணும். அன்னைக்கு முதல் தடவையா என் பெரிய சந்தோசத்திற்கு காரணமான பிள்ளை இன்றைக்கு எல்லா சந்தோசத்திற்கும் காரணமா இருக்கார்.

இந்த பிள்ளை தான் இன்னைக்கு உங்களோடு உங்கப் புகழையெல்லாம் ஏந்தி நிற்கும் கார்த்திக் புகழேந்தி.

பெரியைய்யா போல் படிக்கலை. ஆனா அறிவும் குணமும் பெரியமனுசனாவே நிமிர்ந்து நிற்கிறார். வரும் வெள்ளிக் கிழமை "23ம் தேதி" இவரோடப் பிறந்த நாளை நானும் உங்களோடு வாழ்த்துகிறேன். வாழ்த்துகள் ம்மா. .....

இதையெல்லாம் இப்படி எழுதுவேன் நான் என்றே எனக்குத் தெரியாது. எழுதச் செய்த காலத்துக்கும் உனக்கும் நன்றிம்மா!

°°°பூங்கோதை°°°

- January 21 2015

3 comments:

  1. கண்களில் அன்பு நீர் சுரக்கும். காலம் எத்தனை மாறிப்போயிருந்தது அம்மா!
    ஒரு சொட்டு மழையில் தொடங்கி, நதிகள் போல எங்கெங்கோ வளைந்து சென்று, இறுதியில் கழிமுகத்தில் கடலைச் சேர்வது போல நினைத்துப் பார்க்கிறேன் எல்லாவற்றையும்.

    ReplyDelete
    Replies
    1. அன்பும் பிரியமும் கார்த்திக்

      Delete
  2. அருமை அருமை ... தங்கள் குடும்பம் நீடூழி வாழ்க !!!

    ReplyDelete