- படம்: இணையம்
எல்லாரும் ஒன்னா ஒரே
குடும்பமா இருந்த பூரணிய கல்யாணம் ஆகி சரியா ஒரு மாசம் கூட ஆகலை அதுக்குள்ள
தனிக்குடித்தனம் கூட்டிட்டு வந்துட்டான் பூரணியின் கணவன் மூக்கன். மூக்கன் சரியான
சோம்பேறி. சோறுக் கண்ட இடம் சொர்க்கம். இதில் பெண் சவகாசம் வேற. இதல்லெல்லாம்
தெரியாமலே பூரணி அவனுக்கு பொண்டாட்டி ஆனாள். எல்லாம் கல்யாணம் ஆன மறுநாளே மாமியார்
சொல்லி தெரிந்துக் கொண்டாள். தெரிந்து என்ன செய்ய. சித்தி கொடுமையில் இருந்து
தப்பித்ததே பெரிய பாக்கியமா நினைத்தாள்.
முதல் கோணல் முற்றும்
கோணல் என்பார்கள். அப்படி
தான் அமைந்தது பூரணி வாழ்க்கை. தனிக்குடித்தனம் வந்தாலாவது நம்ம புருஷன்
திருந்திடுவான்னு நினைத்து தான் சம்மதித்தாள். மூக்கன் தனிக்குடித்தனம் வர
பூரணிக்கு சொன்ன கதையே வேற.
“ஊருக்குள்ள நமக்கு ஒரு
வீடு இருக்கு. இவ்வளவு நாள் ஒத்தியில் இருந்தது. இன்னையோடு ஒத்தி முடியுது. வீட்டை
திருப்பனும். நீ மனசு வைச்சா திருப்பிடலாம்” – மூக்கன்
“நான் என்ன செய்யனும்”
“ஒன்னுமில்ல உன்
நெக்லஸைக் கொஞ்சம் கொடுத்தினா அதை வச்சி வீட்டை திருப்பிடலாம். வீட்டை ஓம்
பேருக்கு எழுதி வைச்சிடுதேன்”
பெரிய போராட்டாத்துடன்
நெக்லஸ் கை மாறியது. வீட்டைப் பற்றி எந்த தகவலும் தெரியாது. போய் பார்த்ததும்
கிடையாது. சாமன்கள்
எல்லாம் எடுத்துட்டு புது வீட்டுக்கு வந்தாச்சி.
பத்துக்கு பத்து
சதுரடியில் ஓலை குடிசை. அங்கும் இங்கும் ஓலைகள் தொங்கிக் கொண்டு. மண் தரை குண்டும்
குழியுமா நாயும், பூனையும்
விளையாடிய வீடு. பூரணியோ பட்டணத்தில் படித்தவள். இந்த வீட்டில் எப்படி? பக்கத்து
வீட்டில் பூரணியைப் பார்த்த பார்வையே சரியில்லை.
“வீட்டையாவது சரி
பண்ணிட்டு கூட்டிட்டு வந்திருக்கலாம்ல” முணுத்துக்கொண்டே கொண்டு போன சாமான்களை
எல்லாம் வீட்டுக்கு வெளியில வைச்சிட்டு தரையை பெருக்கி தண்ணீயை தொளித்து வாசலில்
கிடந்த முள்ளை எடுத்துப் போட்டு சாமான்களை எல்லாம் அடுக்கும் போது இரவு மணி எட்டு.
பூரணிக்கு பசி வயிற்றைக் கிள்ள “இதோ இதை எல்லாம் சரி பண்ணி சாமான்களை எடுத்து
வைச்சிட்டு இரு. நான் போய் சாப்பாடு வாங்கிட்டு வந்துடுறேன்”ன்னு போனவன் போனவன்
தான். திரும்பி வந்தப்பாடு இல்ல. கப்கப்னு நாலு டம்பளர் தண்ணியக் குடிச்சிட்டு
படுத்தாள் பூரணி.
வேலை செய்த களைப்பில்
படுத்தது தான் தெரியும் அடிச்சிப் போட்ட மாதிரி அரை மணி நேரம் தூங்கிருப்பாள்.
தூக்கத்தில் கண்ட சொப்பனத்தில் திடுக்கிட்டு முழித்துப் பார்த்தால் மணி பத்து
முப்பது. புது இடம். புது வீடு. பசியோடு தனிமை வேறு. மீண்டும்
பூரணிக்கு தூக்கம் வரவில்லை. ஊரே தூக்கத்தில் அமைதியா இருக்கும் போது பூரணி
மட்டும் காவல்காரன் மாதிரி விழித்திருந்தாள். கரண்டு வேறக் கிடையாது.
குத்து விளக்கில் நிறைய எண்ணெய் ஊற்றி வைத்தாள். விடிகிற வரை எரியணுமே.
தலைமாட்டில் கந்த சஷ்டி கவசமும், டிரான்சிஸ்டர் ரேடியோவை
சத்தம் குறைத்து வைத்து கடிகாரத்தைப் பார்த்த வண்ணமாய் படுத்திருந்தாள்.
ப...ற...ட்....ப....ற.....ட்...கொ.....க்......ஒ...கொ......க்...ஒ... இது
என்ன சத்தம் தெரியலையே. எங்கோ பூனை ஒன்று அபயக் குரலில் கத்தியது.
“கடவுளே, என்னைய காப்பாத்து”
வாய் தனிச்சையாய் ஜெபிக்கத் துவங்க, கண்ணெல்லாம்
ஓரே எரிச்சல். கண்ணை கசக்கி விழித்துப் பார்த்தால் மணி நாலு. பக்கத்து வீடுகளில்
கேட்ட பேச்சுக் குரல் சத்தத்தில் கொஞ்சம் நிம்மதியா தூங்கினாள். ஆறு மணிக்கு
எழுந்து, வாசல் தொளித்து கோலம் போட்டு அடுப்பில் முள்ளை வைத்து கொண்டு வந்திருந்த
அரிசி மூட்டையை பிரித்து கொஞ்சம் கஞ்சி வைத்தாள். பசிக்கு இதமா கஞ்சியும் மாங்கா
ஊறுகாயும் சாப்பிட்டு மறுபடியும் கொஞ்ச நேரம் தூங்கினாள்.
பக்கத்து வீட்டு ராமாயி
பாட்டி மெதுவா எட்டிப் பார்த்தாள்.
“தாயி, ஏ, தாயி, என்ன
செய்த?”
“வாங்க பாட்டி. சும்மா
படுத்திருந்தேன்” சோம்பல் முறித்தவாறு எழுந்து உக்கார்ந்தாள்.
“இதுல எப்படிமா படுத்தே?”
“ஏம் பாட்டி”
“இந்த வீடு ரொம்ப நாளா
பூட்டியே கிடந்தது”
“அப்ப இதுல யாருமே
குடியிருக்கலையா”
“எப்படி இருப்பாக. இல்ல
எப்படி இருப்பாக. ஓம்
மைனிக்காரி இதுல தானே தூக்குப் போட்டு நின்னா. அவ அவி இங்க தான் சுத்திக்கிட்டு கிடக்கு”
“என்னது ஆவியாஆஆஆ”
“ஆமா. துள்ள
துடிக்கயெல்லா செத்திருக்கா”
காலையிலே இதச் சொல்லிப்
பயம் காட்டவா மெனக்கிட்டு இந்த பாட்டி வந்தது. பூரணிக்கு பயம் பிடித்துக் கொண்டது.
“போச்சா, இன்னைக்கும் சிவராத்திரி தானா. ஒன்னா இருந்தாலாவது
மாமியார்,
மாமனார், சம்மந்தினு
கூட இருப்பாங்க. இங்க தனியா. தரையப் பார்த்தா தம்பி ஊருக்கு புதுசா படத்தில் உள்ள
மாதிரி எப்ப என்ன வருமோ?” மனதுக்குள்ளயே பினாத்த ஆரம்பித்தாள் பூரணி. அப்படியே
உறைந்திருந்தவள், “இப்படியே பயந்தா ஒன்னும் ஆகப்போறதில்லை. ஆனது ஆகட்டும். இனி
களத்தில் இறங்க வேண்டியது தான்”னு முடிவு செய்து வீட்டுக்கு பக்கத்தில் காலி
இடத்தில் ஒரு குழித் தோண்டி, மண் அள்ளி அடுப்பை சரிப் பண்ணி, தரையில் சின்ன சின்ன
கல் போட்டு குழியை அடைத்து தளம் போட்டாள். வாசலுக்கு வெளியே ஒரு ஆள் படுக்கும்
அளவுக்கு திண்ணைக் கட்டி காய விட்டாள்.
மெதுவே சுத்தும்
முத்தும் எட்டிப் பாக்க, பக்கத்து வீட்டு ராமாயிப் பாட்டி இரும்பு உரலில் வெற்றிலை
பாக்கைப் போட்டு இடித்துக் கொண்டிருந்தாள்.
“பாட்டிய்”
“வாமா. உட்கார்”
பக்கத்தில் விரித்துக் கிடந்த பாயில் உட்கார்ந்தாள்.
“சாப்பிட்டியா மா”
“சாப்பிட்டேன் பாட்டி”
“மூக்காண்டி வந்தானாமா”
“இல்லை பாட்டி. இன்னும்
வரலை” பூரணியின் வாய் அனிச்சையாய் பதில் சொல்லிக் கொண்டிருந்தாலும் எப்படியாவது
ஆவியைப் பற்றிக் கேட்டுடனும்ன்னு மனசு தவித்தது.
“பாட்...டி...ய். இந்த
ஆவினு எதோ சொன்னிங்களே அதைப் பற்றி சொல்லுங்களேன்”
இடித்த வெற்றிலையை
வாயில் ஒதிக்கிக் கொண்டே ராமாயிப் பாட்டி ஆவியைப் பற்றி சொல்ல ஆரம்பித்தா.
“தங்கம் பெயருக்கு ஏத்த
மாதிரி தங்கமானப் பிள்ளை. பாக்க லெட்சனமா அழகா
இருப்பா. நாலு பேர் பாக்கிற வேலைய ஒத்த ஆளா செய்வாள். என்ன, சூது வாது தெரியாத
பிள்ளை. குழந்தை மனசு. யார் என்னச் சொன்னாலும் தட்டாமச் செய்வாள்.
கல கலனு சிரிச்ச முகமா
சீதேவியா இருப்பாள். ஒம் மாமியா வயிற்றுல தப்பி பிறந்தவனு தான் சொல்லனும்” பாட்டி
ஒரு பெரும் மூச்சியை இழுத்து விட்டுக் கொண்டாள்.
“காலையில நாலு மணிக்கு
எந்திச்சி தொழுவம் கூட்டி, சாணி
அள்ளி, மாட்டுக்கு
தண்ணி வைச்சி, பாத்திரம் கழுவி, துணி துவைச்சினு நாள்
பூரா வேலைச் செஞ்சிக்கிட்டே இருப்பா. பாதவத்தி இப்படி அற்ப ஆயுசுல போய் ஆவியா
சுத்துவானு யார் கண்டா” தங்கத்தைப் பற்றி சொல்லும் போதே பாட்டி அழ ஆரம்பிச்சிட்டா. பூரணிக்கும்
பாட்டியப் பார்க்க பாவமா இருந்துச்சி.
“அப்புறம் சொல்லுங்கப்
பாட்டி”
“ஊரை விட்டு ஒதிக்கி
வைச்ச குடும்பத்தில ஒம் மாமியாக்காரி மூத்த மொவளுக்கு சம்பந்தம் வைச்சிக்கிட்டா.
அதனால ஊர்க் கூட்டம் போட்டு ஒம் மாமியாக் குடுப்பத்தையும் ஊரை விட்டு தள்ளி
வைச்சிட்டாங்க. நல்லது, கெட்டதுல
கலந்துக்க கூடாது. யாரும் பேசவும் கூடாதுனு பஞ்சாயத்தில சொல்லிட்டாங்க. அதில
இருந்து யாரும் அந்த குடும்பத்து ஆட்கள் கிட்ட பேச மாட்டோம். தங்கத்தால யார்டையும்
பேசாம இருக்க முடியல. அப்பப்ப வீட்டுக்கு தெரியாம எங்க
கிட்டயெல்லாம் பேசுவா.
ஒரு நாள் அவ
அண்ணங்காரன் எங்ககிட்ட பேசுறதப் பாத்துட்டான்.
அன்னைக்கு அடிச்சாம் பாரு அடி. ஒன் வீட்டடி என் வீட்டடி இல்ல. தங்கமும் பதிலுக்கு
பதில் கொடுத்து வாக்கு வாதம் பண்ணினா. அதுக்கு அவ அண்ணங்காரன் என்ன பண்ணினான்
தெரியுமா? கொலைகாரப்
பாவி, அவன் விளங்குவானா. நாசமா போக” அதுக்கு மேல
பாட்டியால் பேச
முடியாம மீண்டும் அழ ஆரம்பிச்சுட்டா.
.
“பாவி அந்தப் பிள்ளையப்
போட்டு அந்த அடி அடிச்சானே அதோடு விட்டுருக்கலாம்மில்ல.எதுத்து பேசினான்னுச்
சொல்லி கம்பியக் காய வைச்சி பிள்ளையோட ரெண்டுக் கன்னத்துலேயும் இழுத்து சூடு
வைச்சிட்டான். பாவி மகா, அவமானம் தாங்க முடியாம வீட்டுல யாரும் இல்லாத நேரமாப்
பாத்து நாண்டுக்கிட்டு நின்னுட்டா. கூம். என்னத்த
சொல்லுவேன் அல்ப ஆயுசுலப்
போய் இப்ப பேயா சுத்திக் கிட்டு இருக்கா, பாவம்”
கதைக் கேட்ட பூரணி கண்ணுலேயும்
கண்ணீர் வந்துட்டு. கொஞ்ச நேர மெளனத்துக்குப் பிறகு பூமணிக்கு ஒரு சந்தேகம்
வந்துச்சி. அதை உடனே பாட்டிட்டக் கேட்டாள்.
“பாட்டிய். வந்து நா
ஒன்னு கேட்டா கோவப்படாமச் சொல்லுவிங்களா”
“நீ என்னக் கேட்கப்
போறேனு எனக்கு தெரியும். அவ அண்ணங்காரன் யாருனு தானே. அவன் தான் ஓம் புருஷன்”
பூரணி அப்படியே.
அதிர்ச்சியில் “எ.ன்.ன...ச் சொல்லுதீகப் பாட்டி...ய்”
“ஆமாம்மா. இந்தப் பய
மூக்கனால தான் அவ செத்தா”
பூரணிக்கு என்னச்
சொல்லுவதுனேத் தெரியலை. அப்படியே சமித்துப் போய்
இருந்தாள். பூரணியின் மனசுப் பூரா முகத்தைக் கூடப் பார்த்திடாத மைனி தங்கத்துக்காக
வருந்தியது.
“ஒரு பொட்டப் பிள்ளைய
அடிச்சதே தப்பு. இதில முகத்தில வேற சூடு வைச்சிருக்கான். ச்சே என்ன கொடுரமான
புத்தி. இவன் எல்லாம் ஒரு மனுஷன்.
பாவம் தங்கம். உடம்பாலயும்
மனசாலயும் எவ்வளவு வேதனைப்பட்டுருப்பாள். அவளுக்காக நான் எதாவது செய்யனும். என்ன
செய்யலாம்? ம்ம்ம். அவளோட ஆத்மா சாந்தி அடையாமத் தானே ஆவியா சுத்திக்கிட்டு
இருக்கு. முதல்ல
ஆத்மாவுக்கு சாந்திக் கொடுப்போம்” மனசுக்குள்ள வேதனையோட நினைத்துக் கொண்டாள்.
“என்ன தான் தங்கத்த
நினைச்சி பாவப்பட்டாலும் ஒரு பக்கம் அவளை நினைச்சி பூரணிக்கு பயமா தான் இருந்தது. ஒருவேளை
அவ அண்ணனைப் பழிவாங்கிறேன்னு சொல்லி என்னை எதாவது பண்ணிட்டா? எதுக்கும் கொஞ்ச
நாளைக்கி வீட்டுக்குள்ளப் படுக்கக் கூடாது. வெளியில கட்டினத் திண்ணை கொஞ்சம் ஈரமா
தான் இருக்கு. ஆனாலும் பரவாயில்லை. வீட்டுக்குள்ளப் படுத்து நமக்கு ஏதாவதுனா யார்
காப்பாத்துவா. வெளியிலனா
சத்தம் கொடுத்தா யாராவது வருவாங்க” என்ற தைரியத்தில் திண்ணையில் பாயை விரித்து
மறக்காமல் கந்த சஷ்டி கவசத்தையும் குடிக்க ஒரு செம்பில் தண்ணியும் எடுத்து
வைச்சிக்கிட்டு கதவைப் பூட்டிட்டு திண்ணையில் போர்வைய தலை வரைக்கும் இழுத்து மூடிப்
படுத்துக் கொண்டாள்.
“இந்தா வாறேன்னுட்டுப்
போனவர் எங்கப் போனார்னேத் தெரியலையே. இப்படி அனாதையா பயந்து பயந்து இங்க
இருக்கிறதுக்கு மாமனார் மாமியார் கூட நிம்மதியா இருந்திருக்கலாம். அதையும்
சண்டையப் போட்டுக் கூட்டிட்டு வந்துட்டாரு. அவருக்குத் தேவைப் பணம். இனி யாரு
எப்படிப் போனா அவருக்கென்ன. அவரை நம்பி வந்தேன் பாரு என்னையச் சொல்லனும்” தனக்குத்
தானே பேசிக் கொண்டே தூங்க நினைக்கும் போது தான் நாய் ஒன்று பெரும்
குரல் எடுத்து ஊளையிட்டது.
ஊ.......ஊஊ..... பூரணி
பயத்தில் ஆடாம அசையாம படுத்துக் கொண்டாள். நாய் கண்ணுக்கு பேய் தெரியுமாமே.
மறுபடியும் ஒரு சத்தம் “ஓஒ...
ஊஊஊஉ... பறட்.... பறட்... சர்ர்ர்ர்ர்ர்ர்ர்... டொக்” வித விதாமான சத்தம். கொஞ்ச
நேரத்தில் ஒரு அழு குரல். மூடியப் போர்வைக்குள்
பூரணி தன் காதை கூர்மையாக்கி கவனமாகக் கேட்டாள். பூட்டிய அவள் வீட்டுக்குள்
இருந்து தான் அந்த அழுகுரல். சந்தேகமே இல்லை. இது தங்கத்தோட ஆவியே தான்.
“அடப் பாவிய், என்னைய
ஏம்மெல அடிக்க. ஒம் பொண்டாட்டியப் போய் அடிக்க வேண்டியது தானே” மறுபடியும்
அழுகைச் சத்தம்.
கொஞ்ச நேரத்தில் “ஆஆஆஆ...
காந்துதே... காந்துதே... ஐ...ய்...யோ காப்பாத்துங்களேன்... காப்பாத்துங்களேன்”
என்ற அலறல் காது கிழித்தது. பூரணி பயத்தில் நடு நடுங்கியே தூங்கிப் போனாள்.
மறுநாள் காலை
விடிந்ததுக் கூடத் தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தவளை ராமாயி பாட்டி சத்தம்
கொடுத்து எழுப்பி விட்டாள்.
“ஏன் தாயி, இராவெல்லாம்
இங்கயா படுத்திருந்தே”
“ஆமா பாட்டிய்.
வீட்டுக்குள்ள ஒரே புழுக்கமா இருந்திச்சி அதான்”
“இருந்தாலும் ஊர்
கெட்டுப் போய் கிடக்கு. பொட்டப் புள்ள இப்படி தனியா வெளியில எல்லாம் படுக்கக்
கூடாது”
“அதுக்கு தான்
பக்கத்தில் நீங்கயெல்லாம் இருக்கிங்கல்லா பாட்டி. நான் ஏன் பயப்படனும்”
“நீ பட்டணத்துப் பிள்ள.
அப்படி தான் பேசுவ. இங்க இருட்ட ஆரம்பிச்சிட்டாலே போதும் நல்லதுகளும் கெட்டதுகளும்
அலைய ஆரம்பிச்சிடும்”
“கொஞ்சம் இருங்கப்
பாட்டி. முகத்தை கழுவிட்டு வந்துடுகிறேன்” பல் தேய்த்து முகம் கழுவிட்டு வந்து
பாய் தலையணையை எடுத்து வைச்சிட்டு குடிக்க தண்ணி வைத்திருந்த செம்பை எடுக்கும்
போது தான் கவனித்தாள். செம்பில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை.
‘செம்பில் வைத்த தண்ணீய
யார் குடிச்சிருப்பா. நானும் குடிக்கலை. பாட்டியும் குடிக்க வாய்ப்பில்லை’
யோசிச்சவாறே பாட்டியிடம் திரும்பினாள்.
“பாட்டிய்”
“வாம்மா. உக்கார்” பாட்டி
காட்டின இடத்தில் பூரணி உட்கார்ந்துக் கொண்டாள்.
ராமாயி பாட்டி வெற்றிலை
இடிக்கும் அழகே தனி தான். எப்பவும் பாட்டிக்கு வெற்றிலை கை வசம் இருக்கனும். சாப்பாடு
கூட வேண்டாம். நாள் பூராம் வெற்றிலைய அசைப் போட்டுக்கிட்டே இருந்துக்கிடும். பாட்டிக்கி
ரெண்டு பையன். ஒருத்தர் வெளியூரிலும் ஒருத்தர் உள்ளூரிலும் இருக்காங்க. ஊருக்குள்ள
என்ன நடந்தாலும் பாட்டி தான் நியூஸ் பேப்பர். ராமாயி பாட்டி வெற்றிலையை எடுத்து
காம்பு கிள்ளி அளவா சுண்ணாம்பு தடவி மடித்து உரலில் போட்டு இடிக்க ஆரம்பிக்கும்
போது மெல்ல தங்கத்தைப் பற்றியப் பேச்சை ஆரம்பித்தாள் பூரணி.
“பாட்டிய், தங்கம்
பெயருக்கு ஏத்த மாதிரி தங்கம்னு சொன்னிங்க. அப்போ ஏன் பேயா அதாவது ஆவியா அலயுறா.
அவளோட ஆத்மாவ யாரும் சாந்தி பண்ணலையா பாட்டி”
“அவளுக்கு யார் என்ன
செய்தாக. செத்ததையே ஆள வைச்சி மறச்சி மண்ணப் போட்டு மூடிட்டாவமா”
“என்னப் பாட்டி இது.
கட்டுப்பாடான இந்த கிராமத்திலக் கூடவா இப்படி எல்லாம் நடக்குது”
“ஆமாம்மா. ஊருக்குள்ள
பெரியப் பெரிய ஆட்கள கைக்குள்ள வைச்சிக்கிட்டு இப்படி நடக்குமா”
“சரி பாட்டி, இந்த
தங்கத்தைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்”
“தங்கம் ரொம்ப நல்லப்
பொண்ணுமா. இன்னைக்கு ஆவியா சுத்துனாலும் யாருக்கும் எந்த தொந்திரவும் கொடுக்க
மாட்டா. அவப் பாட்டுக்கு வருவா போவா”
“உங்க கண்ணுக்கு
தெரியுமா பாட்டி”
“ஏன் தெரியாம. நான்
அவள்ட பேச்சிக் கொடுப்பேன்”
“அடியேய், சக்களத்தி, என்ன,
நீ பாட்டுக்கு வாரப் போற. இந்த கிழவி இருக்குறது ஒங் கண்ணுக்குத் தெரியலையானு
கேட்பேன். அவ ஓஓஓனு அழுவா. அவ அழுகிறதப் பார்த்து
நானும் அழுதுடுவேன். சிறுக்கி இதுவரைக்கும்
வாயத்திறந்து ஒரு வார்த்தைப் பேசட்டுமே. எப்ப வந்தாலும் ஒரே அழுகை தான்”
“அப்போ நேற்று
வந்தாங்களாப் பாட்டி”
“அவ எங்கப் போவா. இங்க
தானே ராவு தங்குதா. நான் பார்த்துக்கிட்டு தானே இருக்கேன்”
“தங்கம் என்னைய எதாவது
பண்ணிருவாளாப் பாட்டி”
“அப்படி பண்ணனும்னா நீ
வந்த அன்னைக்கே பண்ணிருக்கனும். அவ மனசுல என்ன இருக்கோ யாருக்கு தெரியும். அவளக்
கையெடுத்துக் கும்பிடு. உன்னைய நல்லா வைப்பா”
“அப்படியே செய்தேன் பாட்டி”
அப்படியே தங்கத்துக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்பதையும் கேட்டுத்
தெரிந்துக் கொண்டாள் பூரணி.
வீட்டைச் சுற்றி இருந்த
முள்ளை எல்லாம் வெட்டி கம்பு தனியா முள்ளுத் தனியா பிரிச்சிப் போட்டு கம்பில் உள்ள
முள்ளை இழைச்சி வீட்டைச் சுற்றி வேலிப் போட்டாள். முள்ளு முளைத்து இருந்த
இடத்தில் தோட்டம் போட்டு ஊரில் இருந்து கொண்டு வந்த செடிகளை நட்டு வீட்டைச் சுற்றி
நந்தவனம் போல் ஆக்கினாள்.
வந்த கொஞ்ச நாள்களில்
பக்கத்தில் உள்ள எல்லாரிடமும் நல்லா பழக ஆரம்பித்தாள். இடையியே தங்கத்துக்கு
பிடித்த பூ பழம் பலகாரம் எல்லாம் வைத்து கும்பிட்டாள். தங்கத்தோட மனதில் கொஞ்சம்
கொஞ்சமா பூரணி இடம் பிடித்தாள். தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை தெரு தெருவா
கொண்டு விற்று அனைவரிடமும் நட்பாகினாள். வீட்டுப் பக்கம் கூட
வரப் பயந்தவர்கள் எல்லாம் வீட்டுக்கே வர ஆரம்பித்தார்கள்.
திடீர் என்று ஒரு நாள்
பயங்கரமான காற்று. பேய் காற்றுனுச் சொல்லுவாங்கல அது மாதிரி. வீட்டு மேல்
ஓலையெல்லாம் தூக்கி வீசியது. வேலியெல்லாம் அப்படியே சாய்ந்து விழுந்தது. பூரணிக்கு
என்ன செய்வது என்றே தெரியாமல் நிற்கும் போது தான் அவள் கணவன் மூக்கன் வந்தான். இந்தா
சாப்பாடு வாங்கிட்டு வாறேன்னு போனவன் இரண்டு மாதம் கழிச்சி வந்து நிற்கிறான். ஆசை
அறுபது நாள். மோகம் முப்பது நாள். சரியா தான் சொல்லிருக்காங்க. காற்றில் மேல் கூரை
தூக்கியதில் வீட்டுக்குள் வானம் தெரிந்தது. எல்லாரும் மூக்கனை பிடித்து
திட்டினார்கள்.
இப்ப என்ன மோட்டு ஓலை
பறந்துட்டு அவ்வளவு தானே. சரிப் பண்ணிட்டாப் போச்சி அதுக்குப் போய் ஏன்
கத்திக்கிட்டு இருக்கிங்கன்னு எங்கிருந்தோ கொண்டு
வந்த பனங்கம்பை வச்சு கூரைய சரிப் பண்ணினான். ரொம்ப நாள் கழித்து வந்த கணவனுக்கு ஆசை ஆசையா
சேறு பொங்கி குழம்பு வைத்து சாப்பிடக் கொடுத்தாள் பூரணி. என்ன தான் தன்னை தவிக்க
விட்டுச் சென்றாலும் தன்னை தேடி வந்துட்டானு ரொம்ப தான் ஆடினா. இதுக்கு தான் கல்லானாலும்
கணவன். புல்லானாலும் புருஷன்னு சொன்னாங்கப் போல.
சாப்பிட்டு வெளித்
திண்ணையில் படுத்திருந்த மூக்கன் இருட்ட ஆரம்பித்ததும் பக்கத்தில் யாரையோ
பார்த்திட்டு வாரேன்னு சொல்லி போனவன் தான் இரவு வரவே இல்லை. போனக் கணவர் வருவார்னு
எதிர்ப்பார்த்து வெளித் திண்ணையில் காத்திருந்த பூரணி அப்படியே தூங்கிப் போனாள்.
நடு இரவில் மீண்டும் தங்கத்தின் அழுகுரல். அப்போது தான் நினைத்துப் பார்த்தாள்
பூரணி திடீர் என்று அடித்த காற்றைப் பற்றி.
விடிந்ததும் சரிந்து
கிடந்த வேலியை சரிப் பண்ணும் போது தான் பக்கத்து வீட்டு கனகா சொன்னாள் பூரணியின்
கணவன் கோயில் மரத்தடியில் படுத்து தூங்குவதை.
அப்போ தங்கச்சியப்
பற்றியப் பயம் மனசுக்குள்ள இருக்கு. இது போதுமே அவர திருத்துவற்கு.
வழக்கம் போல் தங்கத்திற்கு
பூஜை செய்து அவளுக்கு பிடித்த வளையல், பூ, பாசி, துணி எல்லாம் வைத்து தங்கத்தை
நினைத்து அவள் வயது பிள்ளைக்கு கொடுத்தாள்.
ஊருக்குள் இருக்கும் சொள்ளமாட
சாமிக்கு வருகிற வாரம் கொடையாம். கொடை அன்னைக்கு தான் ஊருக்குள்ள சுற்றிக்கிட்டு
இருக்கிற பேயை எல்லாம் அடித்து ஆற்றுக்குள் கல் போடச் சொல்லுவாங்களாம்.
இதுவரைக்கும் தங்கம் யாருக்கும் எந்த கஷ்டமும் கொடுத்தது இல்லை. ஆனா மூக்கன்
எப்படியாவது தங்கத்தோட
ஆவியை கட்டிப் போட பூசாரியின் உதவியை நாடினான்.
பூரணியோ தங்கத்தோட
ஆத்மாவுக்கு சாந்தி கொடுத்து அவளை சாமி ஆக்க நினைத்தாள். ஊரே சொள்ள மாட சாமிக்கு
விரதம் இருக்கும் போது பூரணி மட்டும் ராமாயி பாட்டி
துணையோடு தங்கத்துக்காக விரதம் இருந்து சாமி கும்பிட்டாள்.
அன்று கோயில் கொடை. ஊரே ஜாமக்
கொடைப் பார்க்க கோயில்ல இருக்கும் போது பூரணி மட்டும் வீட்டையே கோயில் ஆக்கி
தங்கத்துக்கு காவல் இருந்தாள்.
நடு ஜாமத்தில்
வேட்டைக்கு போக கனகாவின் அப்பா தான் சொள்ள மாட சாமியாக தெருக்குள் சுற்றி வந்தார்.
அக்கம் பக்கத்தில் யாருமே இல்லாத நேரத்தில் பெரும் குரல் எடுத்து வேகமா ஒடி வந்த
சொள்ள மாட சாமி நாக்கை துருத்திக்கிட்டு கையில் வேல் கம்பும்
அரிவாளும், அக்கினி
சட்டியுமா ஜல் ஜல்லுனு சலங்கை சத்தத்தோடு பூரணியின் வீட்டு முன்னால் நின்னா எப்படி
இருக்கும்?
பூரணி அப்படியே ஒரு
நிமிஷம் ஆடித்தான் போனாள். முழு தைரியத்தையும்
வரவழைத்து வீட்டுக்குள் சென்று கட்டி வைத்திருந்த மாலையை சொள்ள மாட சாமிக்கு
காணிக்கையா கொடுத்து வணங்கினாள். கை நிறைய திருநீரை அள்ளி வீட்டை நோக்கி வீசி
சத்தமா நீ இங்கேயே இருனு சொல்லிட்டுப் போய்ட்டுச்சு சொள்ள மாட சாமி.
மறுநாள் காலையில்
ராமாயி பாட்டியோடு கோயிலுக்கு போனதும் தான் தெரிந்தது பூரணிக்கு தங்கத்தின் ஆத்மா
சாந்தி ஆனது. தங்கம்
இருக்கும் வீட்டை மூக்கன் கையாலே கோயில் கட்டி பூஜை செய்து வருகிறாள் பூரணி. ஊருக்கே
குல தெய்வமா இருந்து வருகிறாள் தங்கம்மாள். மாமியார் மாமனார்
நாத்தனார் உறவுகளோடு ஊர்காரர்களும் சேர்ந்து தங்கம்மனுக்கு கொடைக் கொடுக்குறாங்க.
அனைவரும் வருக. அம்மன் அருள் பெறுக.
°°°பூங்கோதை°°°
- July 12 2015
***********************
No comments:
Post a Comment