Saturday 10 October 2015

நவராத்திரி கொலு (தசரா) - பாகம் 6



"பல்லுயிரும் படைத்த பரமனுக்கே சக்தி கொடுத்ததெல்லாம் உந்தன் செயல் அல்லவோ"

எல்லா உயிர்களையும் படைத்த பரமனுக்கே சக்தி கொடுத்தவள் பராசக்தி. மண்ணுக்கும், கல்லுக்கும் உயிர் கொடுத்து நம்மையெல்லாம் ஆள்பவளும் அவளே.

ஐயப்பாவும், மாரியும் மண்வெட்டியும் கூடையுமா ஆற்றங்கரைக்கு போய் ஆற்று மணலும், கரையில் உள்ள புற்களையும் வட்ட வட்டமா வெட்டி கொண்டு வந்தார்கள்.

“எதுக்கு அத்த ஆற்று மணல். இதை வைச்சி என்ன செய்யப் போறீங்க?” அப்பாவியா கேட்ட ஐயப்பனைப் பார்த்து மாரி “ஏலே இன்னைக்கு அத்த கொலு வைக்கப் போறாங்கல அதான். இது கூடத் தெரியாம தான் மண் அள்ள வந்தியா?” என்றான்.

“அது தெரியும்ல. ஆனா மண்ணும், புல்லும் எதுக்குனுக் கேட்டேன்?”

“இந்த மண்ணுல தான் சின்னப் பொம்மைகளை அழகா அடுக்கி வைப்பாங்கடா”

“அதுக்கு தான் படி வைச்சிருங்காங்கல. அதுல தானே பொம்மைய வைக்கனும்”

“உனக்கு ஒன்னும்மே தெரியலை, அத்தைட்டக் கேளு எல்லாம் சொல்லுவாங்க பாரு” என்றான் மாரி.

மண். இந்த மண்ணில் தான் புல் பூண்டு, நத்தை, புழு, ஊர்வன, பறப்பன, நடப்பனனு எல்லா உயிர்களும் பிறக்கிறது. பிறந்த உயிர்களுக்கு எல்லாம் சக்தி கொடுத்து காப்பவள் தாய் என்பதை உணர்த்துவதற்கே கொலு வைக்கிறோம்.

ஐயப்பன் கொலுவைப் பற்றி அறியாதவன். மாரிக்கு நல்ல சிநேகிதன். மாமாவின் மகனும் கூட. ஸ்கூல் லீவில் வந்த நண்பனை கொலு பார்க்க கூட்டிட்டு வந்தான். வந்தவனுக்கோ ஏமாற்றம்.

“என்னடா கொலு வைப்பாங்கனே ஆனா ஒன்னையும் காணும்?”

“இருடா அவசரப் படாதே. இனி தான் கொலு வைக்க ஆரம்பிப்பாங்க”

இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போதே ரவி, சரண்யா, மீனா, சுடலை, கோவிந்தன், பானு, சுந்தரி, செல்வி, கலா, ஆறுமுகம் எல்லாருமாக வருவதைப் பார்த்ததும் மாரி முகத்தில் சந்தோஷம். எல்லாரிடமும் தன் நண்பன் ஐயப்பனை அறிமுகப் படுத்தினான்.

மாரியை மட்டும் நண்பனா கொண்ட ஐயப்பனுக்கு இன்று புதியதாய் கிடைத்த நண்பர்களை பார்த்து சந்தோஷப்பட்டான். எல்லாருமாக சந்தோஷமா பேசி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

வீட்டைக் கழுவி சுத்தம் செய்து வீட்டு வேலைகளை முடித்த ராதை விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகளிடம் வந்தாள். அதுவரை அமைதியா விளையாடியவர்கள் ஓஓஒனு ஒரே சத்தம் சந்தோஷத்தில்.

“அத்தை எப்போ கொலு வைப்பிங்க”னு கேள்வி மேல் கேள்விக்கு பதில் சொல்லியவாறு அவர்களை அழைத்தாள்.

“வாங்க கொலுவுக்கு எல்லாதையும் ரெடி பண்ணுவோம்”

முதலில் கொலுப் படியை ராமுவும், பீட்டரும் தான் தூக்கி கொண்டு வந்தார்கள். ராதை கை காட்டிய இடத்தில் வடக்கு நோக்கி கொலு படியை வைத்தார்கள். சரண்யாவும், மீனாவும் கலர் பேப்பர்களை எடுத்துக் கொடுக்க கோவிந்தனும் ஆறுமுகமும் ஸ்டூல் மேல் ஏறி நின்று கொண்டு கொலு வைக்கும் ஹாலை அலங்கரித்தனர். செல்வியும், கலாவும் சுவரின் ஓரங்களில் ப்ளாஸ்டிக் பேப்பரை விரித்தார்கள். எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த ஐயப்பன் “எதுக்கு ப்ளாஸ்டிக் தாளை இங்க விரிக்கிங்க”னு கேட்டதும் “இதுக்கு மேல தான் ஆற்று மணலைக் கொட்டனும். அப்ப தான் தரை வம்பா போகாது”னு பெரிய மனுஷி போல் சொன்னாள் சுந்தரி.

கலர் பேப்பரில் பூக்கள் செய்து சுவரின் பக்கத்திற்கு ஒன்றாக ரவியும், மீனாவும் அலங்கரித்தனர். வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ஐயப்பனுக்கோ தானும் எதாவது செய்யனும்னு ஆசை வரவே ரவியிடம் “டேய் எனக்கும் சொல்லி தாடா நானும் செய்றே”னு சொல்லி அவனும் அழகான பூ கூடை செய்து அசத்தினான்.

கோவிந்தனும் ,சுடலையும் ஸ்பீக்கர் செட்டை ஜன்னலில் அங்கும் இங்குமா கட்டினார்கள். ஊற வைத்த கேழ்வரகு விதையை பார்க் அமைக்க மணலில் அழகா வரிசையா போட்டு மணலில் மூடி வைத்தாச்சி. இன்னும் ரெண்டு நாளில் முளைத்து விடும். அடுத்ததா கொலு படி. படியில் சுத்தமான வெள்ளைத் துணியை விரித்து வைத்து படி தெரியாமல் முடி பின் பண்ணியாச்சி. கலர் பேப்பராலும், ஜிகினா பேப்பராலும் அலங்காரம் செய்து சீரியல் லைட்டும் மாட்டியாச்சி.

படிக்கு ரெண்டு பக்கமும் குத்து விளக்கையும் எடுத்து வைச்சாச்சி. “எப்போ பொம்மைகளை எடுத்து வைப்பிங்க அத்தை” . கேட்ட ஐயப்பனிடம் “இன்னும் ரெண்டு நாளில் அமாவாசை . அன்னைக்கு தான் பொம்மைகளை வைக்கனும்” என்றாள்.

“ஏன் அன்னைக்கு வைக்கனும் இன்னைக்கு வைக்கக் கூடாதா?”

“அமாவாசை அன்று வளர் பிறை நாள். அன்னைக்கி தான் அபிராமி பட்டருக்கு அம்மன் முழு நிலவா காட்சி கொடுத்த நாள்”

“அமாவாசையில் முழு நிலவா?”

“நம்பிக்கை வைத்தால் நிலவு மட்டும் என்ன அந்த அம்மனே வருவாள்”

“இன்னும் ரெண்டு நாள் இருக்கு கொலுப் படியில் பொம்மைகளை வைக்க. எல்லாரும் மறந்துடாம வந்துடுங்க. சரியா?”



“ஓகே அத்தை” உற்சாகத்தோடு குதித்தோடும் குழந்தைகளை பார்த்துக் கொண்டே நின்றாள்.

No comments:

Post a Comment