Tuesday 14 July 2015

முள்ளுக் காடு


அப்ப எனக்கு கல்யாணம் ஆனப் புதுசு. வெளில சலசலன்னு சத்தம் கேட்டு வெளில வந்தேன்.

உச்சி வெயில் மண்டையப் பொழக்குது. இந்த வேனா வெயிலுல இந்தப் பிள்ளய எங்க கிளம்புதுக.

“ஏய் சரஸு எங்கப் போறீக அருவாளும், கயிறுமா?”

சரஸு என்ற சரஸ்வதி என் புருஷன் கூடப் பிறந்தவள். பார்க்க கருப்பா இருந்தாலும் களையாயிருப்பா. நான்னா அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். எனக்கும் தான்.

எம் புருஷன் கூடப் பிறந்தது மூணுப் பொண்ணுங்க. மூத்தவள் நல்ல கலரா என் மாமனார் மாதி இருப்பாங்க. கொஞ்சம் குழந்தைக் குணம். கல்யாணமே பண்ணல.

ரெண்டாவது தங்கைய உள்ளுர்ல தான் கட்டிக் கொடுத்துருக்கு. அவளுக்கு மூன்று பையன்கள்.

சரஸு தான் கடைக் குட்டி. சுருட்டை முடியும் அதுவுமா நல்லா இருப்பா. வேலையில கெட்டிக்காரி. மாட்டுக்கு தண்ணி எடுக்குரது வைக்கோல் வைக்கிறது எல்லாமே அவ தான்.

பக்கத்து ஆற்றுல தான் தண்ணீ கோரப் போகனும். ரவண ஆற்றுத் தண்ணி. மற்ற ஆற்றப் போல ஆழமெல்லாம் இருக்காது. ஆற்றுல நடந்தா நம்ம கால் தெரியும். தண்ணியக் கிண்ணியில கோருனாலே மண்ணும் தண்ணியுமா தான் வரும்.

மாடுனா நாலைந்து எருமைகள். அத்தனைக்கும் நாங்க ஒன்னா இருக்கிறப்ப ரெண்டுப் பேரும் தான் தண்ணிச் சுமப்போம். தொழுவ சுத்தம் பண்ணிப் பாத்திரம் கழுவி வீட்ட தினமும் சாணிப் போட்டு மொழுகனும். எனக்கு சுத்தமா மொழுக வராது. ஆனா சரஸு பத்து நிமிஷத்தில கடகடனு முடிச்சிட்டு பீடி சுற்ற உக்காந்திடுவா.

சரஸு எனக்கு நிறையக் கிராமத்தில நடந்தக் கதையெல்லாம் சொல்லுவா. நேரம் போவதே தெரியாது. ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஆனா அதுக்குள்ள சின்னப் பிரச்சனையால தனிக்குடித்தனம் போக வேண்டியதாயிற்று.

பிரச்சனை என்னனா கல்யாணத்துக்கு முன்னால என் புருஷன் ரெண்டாவது தங்கச்சிக்கிட்ட தன்னோடக் கல்யாணத்திற்கு கொஞ்சம் கடன் வாங்கிருக்கார். வயல்ல அறுப்பு முடிச்சி பணம் தாரேன்னு சொல்லிருக்கார். அறுப்பு முடிஞ்சி நெல்லையும் வித்தாயிற்று. பணம் கொடுக்கலை. அதான் பிரச்சனை.

தனிக்குடித்தனம் வந்தாச்சி. யாரும் யாரிடமும் பேசக் கூடாதுனு உத்தரவு. ஆனா நானும் சரஸும் யாருக்கும் தெரியாம அப்ப அப்ப பேசிக்கொள்வோம்.

சரி......கதைக்கு வருவோம்.

“நாங்கல்லாம் முள்ளுப் பெறக்க போறோம் மைணி”. இது சரஸு.

“இந்த மத்தியான வெயில்லையா? யாரெல்லாம் போறீக.?”

“ஏங்கூட வேலம்மா, சுப்பு, தங்கம்,வள்ளி எல்லாருமா போறோம் மைணி”

“நானும் உங்கக் கூட வரட்டா?”

“வேண்டாம் மைணி. அண்ண பாத்தா திட்டும்”

“ஆமாம் அண்ண திட்டுதாவ. அவரு வீட்டுக்கு வந்தே பத்து நாளு ஆவுது. எங்கப் போயிருக்காருனே தெரியாது இதுல திட்டு வாராமில்ல”

“என்ன மைணி சொல்லுதிக. அண்ண வீட்டுக்கே வரலையா?”

“சரி அதல்லாம் விடு. எனக்கு வீட்டுக்குள்ளயே இருக்க கஷ்டமாயிருக்கு. நானும் உங்கக் கூட வாறேன்”

“சரி வாங்க போவோம். வந்து பிடிக் கொடுக்கனும்”

அம்மா வீட்டுல இருந்து கொண்டு வந்த கொஞ்சப் பலகாரத்துடன் குடிக்க தண்ணியும் எடுத்துக்கிட்டு பிறப்பிட்டாச்சி.

வழி நெடுக ஒரே கேலியும், கிண்டலுமா பேசிக்கிட்டே போனோம். பச்சை பசேல்னு வயல்வெளியில் ஒரே ஜாலி தான். கொண்டு போன பலகாரத்த ஆளுக்கு கொஞ்சமா சாப்பிட்டு தண்ணியக் குடிச்சிட்டு நடந்தோம்.

“இன்னும் எவ்வளவு தூரம் போகனும். இப்பிடி போய்க்கிட்டே இருக்கீங்க” ஆர்வம் தாங்காம கேட்டுட்டேன்

“காவக்காரன் நின்னுக்கிட்டு இருக்கான் மைணி இப்ப முள்ள இழுத்தா வைவான். அதான் இப்பிடியே கொஞ்ச தூரம் போனா ஆள் இருக்க மாட்டாங்க”

“அப்ப நாம முள்ள எடுத்தா திட்டுவாங்களா?”

“பின்ன வேலிக்கு போட்ட முள்ள எடுத்தா திட்டமாட்டாங்களா?”

“அடப்பாவிகளா இந்த வயல்ல ஊளுந்து நல்ல காய் பிடிச்சிக் கிடக்கு. இப்ப போய் வேலில உள்ள முள்ள எடுத்தா ஆடு, மாடு வயல்ல இறங்கி பயிர நாசம் பண்ணிருமே”

“அதயெல்லாம் பார்த்தா இன்னைக்கி கஞ்சி வைக்க முள்ளுக்கு எங்கப் போறது”

“அப்படிப் பாத்தா வேலியே பயிர மேஞ்ச கதையால இருக்கு. பாவம் வயக்காரன் எவ்வளவு கஷ்டப்பட்டு பாதுகாப்பா இத வளர்த்திருப்பார். இதை நம்பி என்னக் கனவெல்லாம் கண்டிருப்பார். பாவம்பா. ஆளுக்கு பத்து ரூபாய்க்கு விறகு வாங்கி கஞ்சி வைங்கப்பா” நானும் வருத்தத்தோட தான் சொன்னேன்.

எல்லாரும் என்னையப் பாத்து ஒரே கேலியும் கிண்டலுமா சிரிச்சாங்க. நான் சொல்லுரத யாரும் கேக்கிற மாதிரி இல்ல.

“சரிப்பா உங்க இஷ்டம் போல செய்யுங்க”

ஆளாளுக்கு பர பரனு முள்ள இழுக்க ஆரம்பிச்சாங்க. நான் ஒரு ஒரமா நின்னு வேடிக்கைப் பாத்துக்கிட்டு இருந்தேன். எவ்வளவு நேரம் வேடிக்கை பார்க்கிறது. சரி நாமளும் கொஞ்சம் இழுத்துப் பாப்போமே. எங்க நம்ம இழுப்புக்கு முள்ளு என்ன ஒரு குச்சியக் கூட இழுக்க முடியல.

கருவ மரத்துக் கொப்பை கவர் கவரா வெட்டி ஒன்னு மேல ஒன்னாப் போட்டு வேலிப் போட்டுருந்தாங்க.

நமக்கு தான் இழுக்க முடியல ஆனா சரஸும் தங்கமும் மலை மாதிரி இழுத்து குமிச்சிட்டாங்க. சரி போதும். போகலாமானா யார் கேட்கா. தினமும் இங்க வர முடியாது. வயக்காரன் பாத்தா அவ்வளவு தான்.

அப்பிடி இப்பிடினு நானும் ரெண்டு கவரு முள்ள எடுத்துட்டேன். அங்கங்க முள்ளுக் குத்தினதெல்லாம் வேறு கதைங்க.

“ஓய்..... யார் அங்க வேலிய இழுக்கிறது. நாம வெட்டிப் போடனும் ............இதுக நோவாமா இழுத்துட்டுப் போயிருதுக”. வேற யாரு காவல்காரமும் ஆகிய வயல்காரர் தான்.

இனி அவர் வாயில் இருந்து வரும் வார்த்தைக்கு அளவுண்டா. கேட்கவே வேண்டாம். செந்தமிழ் வார்த்தைகள்.

நான் பின்னால திரும்பி பாத்தா யாராவது பக்கத்தில நிக்கட்டுமே. எல்லாம் எஸ்கேப். மாட்டிக் கொண்டது நான் மட்டும் தான்.

கனநேரத்தில் பக்கத்தில வந்துட்டார். கையும் களவுமா நான் மாட்டிகிட்டேன். வயல்காரர் என்னைய ஒரு பார்வ பாத்தாருப் பாருங்க. இன்னைக்கும் என்னால் மறக்க முடியாது.

“ஆமா நீ யாருமா புதுசா இருக்க”

நான் “சின்னத் தம்பி மருமக”

“ஓ நீ தான் அந்த பட்டணத்து பிள்ளயா. சரி சரி .... இங்க எங்கமா வந்த”

“என் சம்பந்தி சரஸுக் கூட முள்ளு எடுக்க வந்தேன்”

“உன்னைய முள்ளுக்கு விட்டுட்டு அந்த பைய என்ன செய்தான்?”

“நா வந்தது யாருக்கும் தெரியாது”

“ஏம்மா நீ படிச்ச பிள்ள தானே வேலிக்கு போட்ட முள்ள எடுத்தா ஆடு மாடு மேஞ்ச்சிடாது. அதப் போய் எடுத்து என் வயித்துல அடிக்கப் பார்க்கிறேயமா”

“சாரி அண்ணா இனி எடுக்க மாட்டோம் இந்த ஒரு தடவ மன்னிச்சிக்கோங்க அண்ணே”

“சரி சரி நம்ம ஊர் மருமகளாயிட்ட என்னத்தச் சொல்ல நான் சின்னத் தம்பிக்கிட்ட பேசிக்கிறேன்மா. நீ போமா”னுட்டார்.

“அண்ணே வேர வினையே வேண்டாம் மாமாக் கிட்டயெல்லாம் சொல்லிடாதிங்கண்ணே. ப்ளிஸ் .......

அப்புறம் ண்ணே இந்த முள்ளுயெல்லாம் என்னது..... இல்லண்ணே இவ்வளவு கஷ்டப்பட்டு........ “

“சரி சரி எடுத்திட்டுப் போங்க. ஆமா ஓங் கூட வந்ததுக ஒன்னையும் காணும்”

“உங்களுக்குப் பயந்து ஓளிஞ்சிருக்காங்க ண்ணே”

“ஓய் சரஸு எல்லாம் ஓ..வ்வேலையா? உனக்கு தெரியாது. உன்னோடச் சேர்த்து ஒன் மைணியயும் கெடுக்கிறீயா ?ம்ம்...”

“ஆமாம் கெடுக்கிறவ அடப் போய்யா ரொம்ப தான் வாத்தியாரு பாடம் நடத்துராரு.... அட வாங்க மைணி அவர்ட போய் கெஞ்சிக்கிட்டு”

இவ்வளவு நேரம் ஒளிஞ்சிருந்தவக எல்லாம் வீரமா வசனம் பேசிக்கிட்டு பர பரனு ஒத்த முள்ள விடாம இழுத்துக்கிட்டு ஒட்டமும் நடையுமா வீடு வந்து சேர்ந்தோம்.

என்ன தான் தப்பு செய்தாலும் (திருடினா) சொந்த ஊர் பிள்ளைகள்னா தனி ப்ரியம் தான்.

இப்பவும் இத நினச்சா மனசு சிரிப்பா சிரிக்குது.



*** பூங்கோதை****

No comments:

Post a Comment