Saturday 22 August 2015

அத்தைப் பையன்



நான் பிறந்ததுமே என்னோட அத்தை மகன் தான் எனக்கு புருஷன்னு பெரியவங்கல்லாம் முடிவு பண்ணிட்டாங்க. என்னோட அத்தை மகனை சின்ன வயசில் இருந்தே நான் பார்த்தது கிடையாது. ஆனா அவர் தான் என்னோட வருங்காலப் புருஷன் என்கிற நினைப்பில் என்னை ஒரு தலையா காதலித்தவர்களை எல்லாம் அலைய விட்டுட்டேன். 

அன்னைக்கி என் அக்கா மகளுக்கு கல்யாணம். நான் பட்டு பாவாடைக் கட்டி,ரெட்டை சடைப்போட்டு தலை நிறைய பூவோடும்,கை நிறைய வளையல், ஜிமிக்கியோடு, காலில் கொலுசு போட்டு சும்மா.... ஒரு ஹிரோயின் மாதிரி இருந்தேனு நினைச்சிக்கோங்க. அப்ப தான் நம்ம ஹீரோ அதான் என் அத்தை பையன் அவரோட நண்பர்களை கூட்டிகிட்டு வந்தார். 

யாருனு தெரியாத பையன்கள் எல்லாம் கல்யாண வீட்டில இருக்கும் போது சும்மா இருந்த என் அக்கா என்னைக் கட்டிக்க போகிறவர் வந்திருக்கார்னு தெரிஞ்சதும் என்னை ரூம்ல வைச்சி பூட்டாதக் குறையா பூட்டிட்டாங்க. 

எனக்கு மட்டும் பார்க்க ஆவல் இருக்காதா. சரி பார்க்கிரப்ப பாத்துக்கிடலாம்னு இருந்துட்டேன். அவரோட நண்பர்கள் வந்தும் என் அக்காட்ட எங்க நண்பனோட வருங்கால மனைவியப் பார்க்கத் தான் வந்திருக்கோம்னு சொல்லி இருக்காங்க. 

சின்ன வயசில் கூடப் பார்க்காத அத்தை மகன் அன்று தான் என்னை பார்க்க வந்திருக்கார். அன்னைக்கே கல்யாண மண்டபத்தில் வைச்சே பெண் பார்க்கும் படலம். அவராவது பராயில்லை என்னை பெண் என்ற முறையில் என்னை பார்த்தார். 

ஆனால் என் நிலையோ வேறு. ஐந்தாறு பையன்களில் ஒருவராக. 

எல்லா பையன்களும் என்னிடம் என்ன படிச்சிருக்கிங்க. உங்களுக்கு என்ன பிடிக்கும் இப்பிடி நிறையக் கேள்விகள் வேறு. இதில் யாரு என்னைக் கட்டிக்க போறவர். யார்ட்ட கேட்க.... 

அப்பல்லாம் நான் சரியா யாரிடமும் பேச மாட்டேன். கேட்டதுக்கு பதில் அவ்வளவு தான் எனக்கு சுதந்திரம். 

ஒரு வழியா வரும் தை மாதம் கடைசி வெள்ளி அன்று திருமணம் முடிவாயிட்டு. கல்யாண வீட்டில் ஒரே என் அண்ணன் படத்தில் உள்ள பாடல் சலக்கு சலக்கு சிங்காரி...... அன்னக்கிளி படப் பாடல்னு தன்னோட விருப்பத்தை பாடல் மூலமா எனக்கு தூது விட்ட என் அத்தை மகனோடு நேரடியா நானும் அவரும் பேசியதே இல்லை.

அப்புறம் சொத்து பிரச்சனையில் என் அத்தை நிறைய எதிர்பாத்தாங்க. எங்க அப்பா தான் எல்லாருக்கும் ஐந்து தம்பிகளுக்கும், மூன்று தங்கைகளுக்கும் மூத்தவர். எல்லாத்தையும் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் கொடுத்திட்டு எங்களை விட்டு இறந்துட்டார். 

சொத்தில்லா அண்ணன் மகளைக் கட்டிக்க இஷ்டமில்லாத அத்தை கல்யாணத்தை தள்ளிப் போட்டு அம்மாவை அவமானப் படுத்தினாங்க. 

இது எதுவுமே அத்தைப் பையனுக்கு தெரியாது. அவர் வெளியூரில் இருந்தார். 

அவமானம் தாங்க முடியாத அம்மா எனக்கு வேறு இடத்தில் கல்யாணம் பேசினாங்க. கேள்வி பட்ட அத்தை பையன் சொத்துக்காக மாமா பொண்ணை கட்டித் தராத உன்னிடம் இனி நான் பேச மாட்டேனு சொல்லி அவர் வேலை பார்க்கும் இடத்தில் எந்த ஒரு நகையும் இல்லாத ஒரு பெண்ணைக் கட்டிக்கிட்டார்.

இப்படி  தான் ஒரு அத்தைபையன் அத்தியாயம் முடிஞ்சி போச்சு. 

1 comment:

  1. சுவாரசியமான அனுபவங்கள்! இதைப் படிக்கும்போது இன்றைய பெண்களின் நிலை பரவாயில்லை என்று தோன்றுகிறது. திருமணத்திற்கு முன் பேசி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றது. ஆனால் அளவின்றி அதிகம் பேசுவதால் சில நேரங்களில் அந்தத் திருமணமே நின்றுவிடும் சூழலும் உருவாகிறது.

    ReplyDelete