Monday, 27 July 2015

மருதமலை முருகனும் மயிலப்பனும்



மயிலப்பா........

நான் கோயமுத்தூர் வந்து கிட்ட தட்ட மூன்று மாதம் ஆகப்போகுது. இங்கு வந்ததும் எனக்கு கிடைத்த முதல் ப்ரண்ட். தான் இந்த மயிலப்பன். விடியற் காலை 5.30க்கு குளிச்சிட்டு. மொட்ட மாடில துணிக் காயப் போடப் போகும் போது தான் அவனைப் பார்த்தேன்.

பாடப் புத்தகத்திலும், zooலயும் தள்ளி இருந்தே பார்த்த எனக்கு சொல்ல முடியாத பயமும், சந்தோஷமும். கிடு கிடுனு மாடிப் படியில விழாதக் குறையா இறங்கி வந்து இல்ல இல்ல ஓடிப் போய் செல்போனை எடுத்து படக் படக்னு ரெண்டு போட்டோ எடுத்தேன்.

அப்புறம் தான் தெரிஞ்சது பக்கத்தில மருத மலையும் மலை மேல இருக்கிற முருகன் கோயிலும். மருத மலை முருகன் கோயில் மயில் தான் என்னையப் பாக்க வந்திருக்குனு எனக்கு ரொம்ப சந்தோஷம். என்ன...விழுந்து கும்பிடாதது தான் குறையே.

அழகானத் தோகை தரையைத் தொடக் கைப்பிடிச் சுவரில் உட்கார்ந்து இருந்தான். எனக்கோ தொட்டுப் பார்க்க ஆசை தான். ஆனா அவனோட ரெண்டு கால பார்த்ததும் எனக்கு பயம். அவ்வளவு உறுதியான கால்கள். எங்க நம்மல அப்படியே தூக்கிட்டு போயிடுவானோனு பயம் இருக்க தான் செஞ்சது.

பொதுவா எனக்கு பறவைகள்னா ரொம்ப பிடிக்கும் .அதிலையும் மயில் யாருக்கு தான் பிடிக்காது.

சரி....ய்.முதல் முதலா நம்மளப் பார்க்க வந்தவனுக்கு எதாவது கொடுக்கனுமே. என்னக் கொடுக்க ......கை வசம் தண்ணீ தான் இருந்திச்சி. அங்க இருந்த ஒரு கப்புல தண்ணீய பிடிச்சி வைச்சிட்டு கீழ இறங்கி வந்துட்டேன். தண்ணீயக் குடிச்சிச்சா என்னனு தெரியாது.கொஞ்ச நேரத்தில் பறந்து போனதை ஜன்னல்லோடு பார்த்தேன்.

எப்படியும் திரும்பி வருவான்கிற நட்பாசை எனக்கு இருந்திச்சி.

வேகமா என்னோட பேஷண்ட கவனிச்சிட்டு எனக்கு தந்த சாப்பாட்டை எடுத்துக்கிட்டு மாடிக்கு போனா அவனக் காணும். வந்தா சாப்பிடட்டும்னு ரெண்டு இட்லிய ஒரு தட்டில் வைச்சிட்டு வந்தேன்.

காயப் போட்ட துணிய எடுக்கும் போது தான் பார்த்தேன். தட்டுக் காலியா கிடந்தது. பக்கத்தில தெரியும் வெள்ளை மாடி வீடு தான் அவன் வீடு. வீட்டுக்கு சொந்தக்காரர் வீட்டை மயிலப்பன் கவனிப்பில் விட்டுட்டு வெளியூர் போயிருக்காராம். கொடுத்து வைத்தவன் மயிலப்பன். வாடகை இல்லாமல் இவ்வளவு பெரிய வீட்டில் குடும்பத்தோடு தங்க கொடுத்து தான் வைச்சிருக்கனும்.

இப்போ நானும் மயிலப்பனும் நல்லா ப்ரண்ட் ஆயிட்டோம். தினமும் நான் கொடுக்கிற சாப்பாட்டை சாப்பிட்டுட்டு பக்கத்து வீட்டு மாடியில போய் நின்னுக்கிட்டு தன்னோடத் தோகையை விரித்து ஆட்டுவான். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்.

பக்கத்தில பச்சைப் பசேல்னு தெரியுத தோட்டம் தான் அவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் பொழுது போக்கு இடம். பகல் முழுவதும் அங்க தான் இருப்பான். ஒன்ன ஒன்ன வெரட்டிக்கிட்டு தோகையை விரிச்சி ஆட்டிக்கிட்டு அதிலும் மயிலப்பன் லவ்ஸ் பண்ணுர அழகே தனி தான்.

சில நேரத்தில குடும்பமா வந்து நிற்பான். அன்னைக்கி ஒரு பொழுது நான் விரதம்.

இப்போல்லாம் காலையில என்னைய எழுப்பி விடுறதே மயிலப்பன் தான். நான் இருக்கிற பக்கத்து ஜன்னல்ல இருந்துக்கிட்டு க்......யா...வ். க்......யா.....வ்னு சத்தம் கொடுப்பான்.

மயிலப்பனுக்கு போட்டியா இப்போ குயில், மைனா,தவிட்டு குருவி, காக்கா எல்லாம் வர ஆரம்பிச்சிட்டாங்க. பக்கத்துல வேப்ப மரமும், மா மரமும், செண்பக மரமும் இருக்கு கிளிகளுக்கும் பஞ்சம் இல்லை. இன்னும் பெயர் தெரியாத பறவைகளும் உண்டு.

எல்லாத்தையும் படம் பிடிக்க என் செல்போன்ல கேமரா ஒர்க் ஆகமாட்டுக்கே.

தற்போது என் உலகம் பறவைகள் சூழ்ந்த சரணாலயம்.

ஒரு நாள் மயிலப்பன் அனுமதியோடு அவன் தோகையை தொட்டுப் பார்க்கனும்.

1 comment: