Wednesday 21 October 2015

சரஸ்வதி பூஜை


"மங்கள ரூபிணி மதியணி சூலிணி மன்மத பாணியளே
சங்கடம் நீங்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி செளந்தரியே
கங்கண பாணியள் களிமுகங் கண்ட நல் கற்பக காமினியே
ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி....."

மனசு கவலைப் பட்டு கிடக்கும் போது இப்படி தான் முணுமுணுத்துக்கிட்டு இருப்பேன்.

ரெண்டு வரி பாடும் போதே மனப் பாரம் எல்லாம் பறந்த மாதிரி இருக்கும். இப்பல்லாம் பாடுறதையே விட்டுட்டேன். சூழ்நிலை அப்படி ஆயிட்டு.

பாடுறதை விட்டாலும் என் பக்கத்தில் எப்பவும் எப் எம் ஓடிக்கிட்டே தான் இருக்கும். எனக்கு டீவி பார்ப்பதை விட பாட்டுக் கேட்பது ரொம்ப பிடிக்கும்.

நவராத்திரி ஆரம்பிச்சிட்டா முதலில வீட்டை சுற்றி ஸ்பீக்கர் கட்டுற வேலை தான் மும்முரமா நடக்கும்.

இங்க பக்கத்தில் ரெண்டு மூணு வீடுகளில் நவராத்திரி கொலு வைச்சிருக்காங்க. கொலு வைக்கிறதுக்கு முன்பே வீட்டுக்கு கூப்பிட்டாங்க. ஆனா நான் போகலை மனசு பூரா பாரமா இருந்தது.

கோயிலுக்கு போனாலே என்னை அறியாமல் அழுகை வந்துடும். சாமிகிட்டயே மனசால் சண்டை போடுவேன். ஒரு வீட்டுக்கு போய் அங்கு இருக்க கொலுவில் போய் சண்டை போட வேண்டாம்னு போகலை. நேற்று கட்டாயப் படுத்தி கூப்பிட்டதால் வாறேன்னு சொல்லியிருந்தேன்.

கொலு பார்க்க போகும் போது எப்படி சும்மா போகனு ரெண்டு காமதேனு பொம்மையும், ரெண்டு விளக்கு பொம்மையும் வாங்கிட்டு போனேன்.

எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம். அவுங்க வீட்டில் இல்லாத பொம்மை என்றதும் கூடுதல் சந்தோஷம்.

வீட்டில் கொலு வைக்கும் போது பிள்ளைகள் நிறையப் பேர் வருவாங்க. எல்லார் கையிலும் பாட்டு புக் கொடுத்து பாட வைப்பேன். போட்டிப் போட்டு பாடுவாங்க. தினமும் கொலுவில் பூஜை செய்யும் போது தான் நான் பாடுவேன்.

நேற்று கொலு வைத்திருந்த வீடுகளில் அப்படி ஒரு அமைதி. எந்த ஆடம்பரமும் இல்லாமல் சிம்பிளா கொஞ்ச பொம்மைகள் மட்டுமே வைத்து வந்தவங்களுக்கு தாம்பூலம் கொடுத்து அனுப்பினாங்க. எனக்கு என்னோட வீட்டு ஞாபகம் வந்து கஷ்டமா இருந்தது. ரெண்டு வீட்டில் அமைதியா கொலுவைப் பார்த்துட்டு மூணாவதா ஒரு வீட்டுக்கு போனால் அலமாரியில் சின்ன சின்ன பொம்மைகளை வைத்து சீரியல் பல்பு மாட்டி தோரணைகளை கட்டி தொங்க விட்டுருந்தாங்க. ஒரு பாட்டிமா கையில் அம்மன் பாட்டு புக்கோடு கண்ணாடி போட்டு விரலால் வார்த்தைகளை தடவி மனதால் பாடிக்கிட்டு இருந்தாங்க.

எனக்கோ பாட ஆசை. மெதுவா பேச்சிக் கொடுத்து அம்மா கொஞ்சம் சத்தமா பாடினா கொலுவில் இருக்கும் அம்மனுக்கும் எங்களுக்கும் கேட்குமே. ஏன் மனசுக்குள்ளே பாடுதிங்கனு கேட்டேன்.

என்னோடு பாட ஆள் இல்லைமா. நான் பாடினா கேட்கவும் ஆள் இல்லைனாங்க. எனக்கு கஷ்டமா போயிட்டு.கவலை படாதிங்கம்மா எனக்கு பாட்டுனா ரொம்ப பிடிக்கும். நீங்க பாடுங்க நான் கேட்கிறேனு சொல்லி பாட வைச்சேன்

அந்த அம்மாவின் குரலில் மயங்கியது கொலுவில் உள்ள பொம்மைகள் மட்டுமல்ல நானும் தான். என்னை மறந்து பாட ஆரம்பிச்சிட்டேன்.

"தண தண தந்தன தவிலொளி முழங்கிட தன் மணி நீ வருவாய்
கண கண கங்கண கதிரொளி வீசிடக் கண்மணி நீ வருவாய்
பண பண பம்பண பறையொளி கூவிட கண்மணி நீ வருவாய்
ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி......."

பாடும் போதே என்னை அறியாமல அழுதுட்டேன். பின்னாடி திரும்பி பார்த்தால் தெருக் குழந்தைகளும் பெண்களும் அமைதியா நிற்கிறாங்க. பாட்டிக்கி ரொம்ப சந்தோஷம். வந்தவங்களுக்கு வெற்றிலை பாக்கும் பூவும் கொடுத்தாங்க. சுண்டல் எதுவும் பண்ணலை. நாளைக்கி கண்டிப்பா சுண்டல் செய்றேனு சொன்னாங்க.

இனி இருக்கும் கொலு நாளில் பாட சந்தர்பம் கொடுத்த பாட்டியின் ஆசிர்வாதத்தோடு மனசு பாராம் குறைந்ததுனு நான் சொல்லனுமா என்ன.

பாட்டிக்கி ரெண்டு பசங்க. யூ எஸ்ல இருக்காங்களாம். இங்க பாட்டி தனியா தான் இருக்காங்க. கேட்டு தெரிந்து கொண்டேன். இனி பாட்டிக்கு துணையா ரெண்டு வார்தை தினமும் பேசனும்னு முடிவு செய்திருக்கேன். சரிதானே.


.

No comments:

Post a Comment