Tuesday 13 October 2015

நவராத்திரி கொலு (தசரா) - பாகம் 7



கொலு வைக்கும் முதல் நாள் கும்ப பூஜை செய்வார்கள். மரப் பலகையில் மஞ்சளால் மொழுகி கோலம் இட்டு நடுவில் பால் குடம் எடுக்கும் போது வைத்திருப்பார்களே சின்னக் குடம் அதில் மஞ்சளில் நனைத்த நூலால் சுற்றி சந்தனம் குங்குமம் வைத்து குடத்தின் உள்ளே பச்சரிசி, வெல்லம், வெற்றிலை பாக்கு வைத்து குடத்தின் மேல் ஒற்றைப் படையா மாவிலை வைத்து அதன் மேல் குடுமியோடு உள்ள தேங்காயை வைத்து கொஞ்சம் பூ போட்டு பூஜை செய்ய வேண்டும். கலசத்தில் அம்மன் இருப்பதாக நினைத்து மேல் படியான ஒன்பதாவது படியில் வைத்து படி பூஜை செய்ய வேண்டும்.

நாவராத்திரியின் முதல் நாள் கீழ் படியில் இருந்து பொம்மைகளை வைக்க வேண்டும்.

“திருவிளக்கை ஏற்றி வைத்தோம் திருமகளே வருக குலம் விளங்க எங்கள் வீட்டில் கொலு இருக்க வருக அலை மகளே வருக் ஐஸ்வர்யம் தருக.....”

“ராமக்கா வீட்டுக் கொலு எப்பவும் விசேஷமா தான் இருக்கும். இந்த வருஷம் கூட வெளியூருக்கு போனவள் வித விதமா கொலு பொம்மைகளை வாங்கிட்டு வந்திருக்காளாம். எல்லாம் சைனா பொம்மைகளாம். நேற்று மார்கெட்டில் பார்த்தவள் கொலு பார்க்க வரச் சொல்லி கூப்பிட்டாள். மறக்காம உன்னையும் கூட்டிட்டு வரச் சொன்னாள்” என்றபடி வந்தாள் சரசு.

“அடியே சரசு. அவுக வீட்டுக் கொலுவப் பற்றி சொல்லுதியே அதுல எதாவது உனக்கு விளங்குதா. நம்ம புவனா வீட்டு கொலுவை நீ பார்க்கனுமே என்ன அழகு. இன்னைக்கெல்லாம் பார்த்துக்கிட்டே இருக்கலாம். அம்புட்டு அழகு. அந்த ராதை கிருஷ்ணன் பொம்மையப் பார்க்கனுமே நிஜத்துல ரெண்டு பேரும் கொஞ்சுகிற மாதிரி இருக்கும் அப்படி இயற்கையா அலங்கரிச்சி வைச்சிருப்பா. அது மட்டுமா மலையும், அதில இருந்து வழிந்தோடும் அருவியும் குற்றாலத்தை வீட்டுக்குள்ளேயே கொண்டு வந்திருப்பாள். மண்ணுல புல்லை முளைக்க வைச்சி அதுக்கு நடுவில பார்க்கை உருவாக்கி பிள்ளைகளை விளையாட விட்டு இருப்பா பாரு, நிஜத்துல கூட பார்க்க முடியாத விளையாட்டை எல்லாம் பார்க்கலாம். அந்த காலத்துல நீயும் நானும் விளையாண்ட விளையாட்டை இப்ப உள்ள பிள்ளைகளுக்கு புவனா வீட்டு கொலுவில தான் காட்ட முடியும். அப்படி அழகா வைச்சிருப்பா. சைனா பொம்மையாம் பெரிய சைனா பொம்மை. நம்ம வீட்டு பிள்ளைக குளத்துக் கரையில போய் மண்ணெடுத்து அதுக கையால செஞ்சி வைச்சிருக்கிற பொம்மைக்கு உண்டான அழகு அதுல இருக்குமா? சைனா பொம்மை பார்க்க மினு மினுப்பா அழகா கண்ணாடி மாதிரி மின்னினாலும் எனக்கென்னவோ மண்ணில் செய்த பொம்மைகளில் தான் ஒரு ஒற்றுதல் இருக்கு. நீ வேணுனா புவனா வீட்டு கொலுவுக்கு வந்து பாறேன். உனக்கே தெரியும்” என்றாள் மீனா.

“சரிக்கா நீ இவ்வளவு தூரம் செல்லுற . நீ கொலு பார்க்க போகும் போது மறக்காம என்னையும் புவனா வீட்டுக்கு எங்களையும் கூட்டிட்டுப் போக்கா” என்றவள் வசந்தி. இவர்கள் உரையாடலில் கலந்துக் கொண்டவள்.

சரி வசந்தி, இன்னைக்கி தான் கொலு வைக்கும் நாள். கண்டிப்பா உங்களையும் கூட்டிட்டுப் போறேன்.

புவனா வீடு. காலையில் அமாவாசை மூத்தோருக்கு திதிக் கொடுக்கும் நாள். மூத்தோரை வணங்கி கும்பிட்டு மதியத்திற்கு மேல் பிள்ளைகளின் வரவுக்காக காத்திருந்தாள்.

மதியம் மூன்று மணிக்கெல்லாம் தெருப் பிள்ளைகள் வர ஆரம்பிச்சிட்டாங்க. சரவணன் வரும் போதே பக்கத்து பள்ளி வாசல் காமெளண்டில் நிற்கும் மா மரத்தில் கொஞ்சம் கிளைகளை வெட்டி கொண்டு வந்திருந்தான். வாசலில் நூல் கட்டி, மா இலைகளை தோரணமா கட்டி தொங்க விட்டாச்சி. மா இலை தோரணம் மங்களத்தின் அடையாளமா காற்றில் ஆடுவதே ஒர் அழகு தான்.

இனி கலசப் பூஜை. சின்ன குடத்தில் அல்லது சொம்பில் மஞ்சளில் நனைத்த நூலைச் சுற்றி சந்தண பொட்டு வைச்சி மரப் பலகையில் கோலமிட்டு கலச சொம்பின் உள்ளே பச்சரிசி, வெல்லம், வெற்றிலை, பாக்கு, பழம், போட்டு அதன் வாய் பகுதியில் மாவிலையை ஐந்து அல்லது ஏழாக ஒற்றைப் படையா வருவதுப் போல் வைத்து அதன் மீது குடும்மியோடு உள்ள தேங்காயை கழுவி வைத்து சந்தணம் குங்கும பொட்டிட்டு மரப் பலகையில் வாசலில் வைத்து பூஜை செய்தாள்.

அம்மனை தன் வீட்டில் கொலு இருக்க வரவழைப்பதற்கே கலசப் பூஜை வைப்பதாய் புவனா பிள்ளைகளுக்கு சொல்லிக் கொண்டு இருக்கும் போதே மறக்காமல் வசந்தியையும், சரசையும் புவனா வீட்டு கொலுப் பார்க்க கூட்டிட்டு வந்தாள் மீனா.

வந்திருந்த அனைவருக்கும் சந்தணம் குங்குமம் கொடுத்து வீட்டுக்குள் அம்மனோடு எல்லாரையும் வரவேற்று உட்கார செய்து இனிப்பு வழங்கினாள்.

பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பூ கொடுக்கும் போது தான் குமார் கேட்டான், “ஏன் அத்தை எங்களுக்கெல்லாம் பூ கொடுக்க மாட்டிங்களா. எங்க அம்மா பூவைச்சி நா பார்த்ததே இல்லத்தே. நீங்க கொடுத்திங்கன்னா எங்க அம்மாவுக்கு கொண்டு கொடுப்பேன்த்தே”

குழந்தையா அவன் கேட்டாலும் புவனாவின் மனதை ஏதோ செய்தது. “உனக்கு இல்லாத்தாடா இந்தா வாங்கிக்கோ. கொண்டு போய் அம்மாவுக்கு கொடு. சரியா”

அடுத்து எனக்கு எனக்குனு கேட்ட எல்லாருக்கும் பூ கொடுத்து சந்தோஷப் பட்டாள்.

கலசத்தை மேல் படியான ஒன்பதாவது படியின் நடுவில் வைத்து படி பூஜை செய்தாள். இனி கொலுப் படியில் பொம்மைகளை வரிசைப் படி அடுக்க வேண்டியது தான். பொதுவா புவனா எல்லாவற்றையும் தானே செய்யனும்னு நினைக்க மாட்டாள். வந்திருக்கும் எல்லாரையும் பொம்மைகளை வைக்க சொல்லி அழகு பார்ப்பதோடு மறக்காமல் புகைப்படமும் எடுத்து வைத்தாள்.

கீழ் இருந்து மேலாக முதல் படியில் ஒர் அறிவு உயிரினமான புல், தாவரம், செடி, கொடிகளை வைக்க சொன்னாள். எதுக்கு அத்தை இதெல்லாம்னு கேட்டப் பிள்ளைகளுக்கு பொறுமையா பதில் சொன்னாள்.

“மண் தன்னில் விழுந்த விதையை உயிர்ப்பித்து விளைந்து விருட்சமாக்கி விதைகளாக விருத்தி செய்யும் ஈரத் தன்மை மண்ணிற்கு உண்டு. மண்ணில் விழுந்த எல்லா விதைகளுக்கும் முளைக்கும் சக்தியைக் கொடுத்தவள் இந்த மகா சக்தி. அதை நினைவு கூறவே முதலில் மண்ணில் விளைந்த தாவரங்களை முதல் படியில் வைக்கிறோம். மனிதனுக்கு மிகவும் முக்கியமான உணவும் தானியங்களும், தாவரமும் எனபதை உணர்த்தும்”.

ரெண்டாம் படியில் ஈறறிவு உயிரினமான சங்கு, நத்தை, சோளி முத்து, சிற்பிகளை வைக்கச் சொன்னாள். “இது எதற்கு”னு கேட்ட ராமுவுக்கு “நா சொல்லட்டுமா அத்தை”னு கேட்ட குழந்தை பார்வதியை பார்த்து “ம் சொல்லு” என்றாள் புவனா. “மனிதனுக்கு மிகவும் முக்கியமான தேவை என்றால் உணவும், தண்ணீரும். உணவு இல்லாமல் கூட இருந்து விடுவான். ஆனால் தண்ணீர் இல்லாமல் இருக்க முடியது. நமக்கு தேவையான தண்ணீரையும் கொடுத்து அதில் வாழும் உயிரினங்களையும் படைத்த அம்மைக்கு காணிக்கையாய் சங்கையும், மணி மாலைகளையும் வைக்கிறோம்”.

புவனாவே அசந்து போனாள். அது மட்டுமில்லாமல் கொலுவில் இருக்கும் அம்மன் விளையாடுவதற்காக பல்லாங்குழியும், சோளி முத்துக்களையும் வைப்பதாகச் சொன்னாள்.

மூன்றாம் படியில் மூன்றறிவு உயிரினமான எறும்பு, புற்று பொம்மைகளையும், நான்காம் படியில் நான்கறிவு உயிரினமான வண்டு போன்ற பறக்கும் பொம்மைகளை வைக்கச் சொன்னாள். எறும்பும், வண்டுகளும் யார் உதவியும் நாடாமல் தனக்கு தேவையான உணவை தானே தேடிக் கொள்ளும். தங்குவதற்கு தேவையான இருப்பிடத்தையும் தாங்களாகவே அமைத்துக் கொள்ளும் திறனை கொடுத்தவள் மகாசக்தி.

“ஐந்தாம் படியில் ஐந்தறிவான விலங்கு பொம்மைகள் சரி தானே அத்தை?”. செல்விக்கு தான் என்ன அறிவு. “ஆமாம் செல்வி நீ சொல்லுவது சரி தான்”.

“அப்போ ஏழாவது படியில் நாம தானே அத்தை”

“டேய் என்னடா சொல்லுற” நாம எப்படிடா?” வெகுளியா கேட்ட மாரியை பார்த்து எல்லாரும் சிரித்தனர்.

“அடேய் கடவுள் நமக்கு ஆறறிவு கொடுத்திருக்கார்டா”

“அப்படியா எனக்கு தெரியாதே”

ஹ்ஹ்ஹாஹா... புவனாவுக்கு சிரிப்பு வந்தது.

“மாரி.. புல்லுக்கும், சிற்பிக்கும் ஏன் விலங்குக்கும் கொடுக்காத சக்தியை கடவுள் நமக்கு கொடுத்திருக்கார்டா. அது தான் நாம பேசும் சக்தி”

“ஓவ் ஆமால்ல”

“இங்க பாரு ஆமாவா இல்லையா. ஒழுங்கா சொல்லு”

“டேய் ஆமாம் டா” வேடிக்கையும் சிரிப்புமாய் ஆறாம் படியில் மனிதப் பொம்மைகள் வைச்சாச்சி.

இனி ஏழாவது படி. மனிதனாகப் பிறந்து தெய்வீக நிலையை அடைந்த மகான்களின் பொம்மைகளை வைக்கனும்.

“அப்போ முனிவர்கள் பொம்மையை தானே வைக்கனும் அத்தை”

“ஆமாம் டா”

எட்டாம் படியில் தேவர்கள். நவகிரக பொம்மைகளை வைக்கனும். ஒன்பதாவது படியில் அம்மன், சிவன் பார்வதினு மும்மூர்த்திகள் அவர்களின் தேவியரோடு இருக்கும் பொம்மைகளை வைக்கனும். ஒன்பது படியிலும் ஒன்பது விதமான பொம்மைகளையும் வைத்தாச்சி. இனி மரப் பாச்சி பொம்மை, செட்டியார் பொம்மைகளை வைக்கனும்.

பொம்மைகளை எல்லாம் படியில் அடிக்கிக் கொண்டே அது ஏன் அப்படி வைக்கனும் எதுக்கு வைக்கிறோம்னு ஒவ்வொன்னுக்கும் ஒரு அர்த்தம் சொல்லி வைப்பதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த சரசுக்கு ராமக்கா வீட்டு கொலு ஞாபகத்தில் வந்து போனது.

ராமக்கா வீட்டில் கொலு பார்க்க நல்லா அழகா தான் இருக்கும். ஆனா அலங்கார கொலுவா தான் தெரியும். புவனா வைக்கிற கொலுவில் எத்தனை நேர்த்தி, அன்பு, பாசம் எல்லாம் கலந்துல்ல இருக்கு. ராமக்கா எதையும் தொட விட மாடாள். அதாவது பரவாயில்லை. பொம்மைகளுக்கு எதாவது ஆயிடும்னு நினைக்கலாம். கொலு பார்க்க வருகிறவங்க கிட்ட சிரிச்சிக் கூட பேச மாட்டாளே. அப்படியே பேசினாலும் அதில பணக்காரத்தனம்மில்ல இருக்கும்.

“ஆமாம்டீ வசந்தி கொலு வைக்கிறதே இவ்வளவு அழகா இருக்கே”

கொலு படியின் ரெண்டு பக்கங்களிலும் குத்து விளக்கை வைத்து திரிப் போட்டு எண்ணெய் ஊற்றி விளக்கேற்றினாள் புவனா.

செட்டியார் பொம்மைகளை வித விதமா எடுத்து வைத்து அவர்களின் முன் வியாபார கடையை விரித்து வைத்தாள். செய்யும் தொழிலே தெய்வம் என்பதை சொல்லாமல் சொல்லியது அவர்களின் கடைகள். மண் பாண்டம் செய்பவர்கள் முதல் கம்யூட்டர் வரை தொழிலாகக் கொண்ட தொழிலார்கள் பொம்மைகளை அதற்கு என்று ஏற்ற இடத்தில் அழகா வைத்தார்கள்.

மனிதனாகப் பிறந்த நமக்கு உடல் வலிமை, (சக்தி) செல்வம், கல்வி, அவசியம். சக்தி கொடுக்கும் துர்க்கையையும், செல்வத்திற்கு லெட்சுமியையும், அறிவு ஆற்றலுக்கு சரஸ்வதியையும் வணங்குவோம்.

இனி வரும் ஒன்பது நாட்களும் எல்லாரும் கொலுப் பார்க்க வாங்கனுச் சொல்லி வெற்றிலைப் பாக்குடன் மஞ்சள் குங்குமம் கொடுத்து சந்தோஷமாக அனுப்பி வைத்தாள் புவனா.

தயவு செய்து உங்கள் வீட்டுக் கொலுவுக்கு எல்லாரையும் பார்க்க வர விடுங்கள். வருவோரிடம் அன்பாய் இன் முகத்தோடு பேசுங்கள். எல்லாருமே அம்மனின் அம்சமே.


- முற்றும்

நவராத்திரி கொலு (தசரா) - பாகம் 1

1 comment:

  1. அருமையான விளக்கப்பகிர்வு.

    ReplyDelete