Thursday, 15 October 2015

நான் பார்த்த பிரசவம்


நாங்க இருப்பது மாடி வீடு. வெளியில என்ன நடந்தாலும் தெரியாது கேட்காது. ஏன்னா எங்க வீட்டு டீவி அவ்வளவு சத்தமா ஓடிக்கிட்டு இருக்கும்.

இரவு ஏழு மணிக்கெல்லாம் சாப்பாடு முடிஞ்சிடும். நான் சாப்ட்டு கொஞ்ச நேரம் மொட்ட மாடியில் நடப்பேன். அப்படி நடந்துக் கிட்டு இருக்கும் போது வெளி யில் ஒரே சத்தமா அங்கிட்டும் இங்கிட்டுமா கீழ் வீட்டு அக்கா பதட்டமா  ஓடிக்கிட்டு இருந்தாங்க.

மேலே இருந்து பார்த்த நான் "என்னக்கா என்ன விசயம் எதுக்கு எல்லாரும் பதட்டமா ஓடிக்கிட்டு இருக்கிங்க"னு கேட்டதற்கு அப்பறம் தான் தெரிந்தது பக்கத்து வீட்டு பொண்ணுக்கு இடுப்புவலி எடுத்திருக்குனு.

போன வாரம் தான் வளைகாப்பு வைச்சிருக்காங்க. இன்னும் பத்து நாள்ல டெலிவரி இருக்கும்னு டாக்டர் சொல்லிருக்காங்க.

ஆனா இன்னைக்கி திடீர்னு வலி வந்துட்டு. நான் போய் பார்க்கும் போது பொண்ணோட கணவ்ர் அவசர வேலையா டெல்லி போயிருக்கார். அந்த பொண்ணோட வயசான அம்மா மட்டும் தான் கூட இருக்காங்க.

பக்கத்து வீட்டுக்காரங்க ஆஸ்பிட்டலுக்கு போன் பண்ணியிருக்காங்க. ஆம்புலன்ஸ்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கும் போதே அந்த பொண்ணுக்கு ரொம்ப வலி வர ஆரம்பிச்சிட்டு.

நான் அவுங்க வீட்டுக்குள்ள போய் பார்க்க போனா அந்த பொண்ணு மாடியில இருக்கு. எல்லாரும் அங்க தான் இருந்தாங்க.அந்த பொண்ண கீழக் கூட்டிட்டு வர முடியலை.

வலியில் துடிச்சிக்கிட்டு இருந்துச்சி. உடனே அவுங்க அம்மாட்ட அடுப்படி எங்கம்மா இருக்குனு கேட்டு மசாலா பெட்டியக் கேட்டு வாங்கி கொஞ்சம் கிராம்பு, சீரகம், சோம்பு, மிளகு தட்டிப் போட்டு ஒரு கஷாயம் வைச்சி குடிக்கச் சொன்னேன்.

கஷாயம் குடிச்ச கொஞ்ச நிமிஷத்தில் அங்க இருந்தவங்களை வெந்நீர் வைக்கச் சொன்னேன். அடுத்த ஐந்தாவது நிமிஷம் தாய்கிட்ட இருந்து பிள்ளைய வாங்கி தொப்புள்  கொடி வெட்டி குளிப்பாட்டி துடைச்சி பாட்டி கையில் கொடுக்கும் போது தான் ஆம்பலன்ஸ் வந்தது.

எல்லாருக்கும் ஒரே சந்தோஷம். அப்பறம் எல்லாருமா சேர்ந்து ஆஸ்பிட்டலுக்கு அனுப்பி வைச்சோம்.

குழந்தை கொஞ்சம் எடை கம்மியா மஞ்சள் காமாலை இருக்குனு சொல்லி கண்ணாடி பெட்டியில் வைச்சிருக்காங்களாம்.

பாட்டி ஒரே அழுகை. சந்தோஷத்தில் தான். ரெண்டு உயிரையும் காப்பாத்திட்டேனு ஒரே பாராட்டு எனக்கு.

கல்யாணம் ஆகி ஆறேழு வருஷத்திற்கு பிறகு எங்கயோ மருந்து சாப்பிட்டு தறிச்ச குழந்தையாம். 

நல்லா இருக்கனும். இருக்கும். வாழ்த்துகள் பையா.

2 comments:

  1. வாழ்த்துக்கள்! தாயும் சேயும் சுகமாய் வாழட்டும்!

    ReplyDelete
  2. செமமா. இந்த மாதிரியான அனுபவங்கள் தான் நம்மள துணிச்சலோட நடந்துக்க வழி காட்டுது. அந்த குட்டிப் பையன் ரொம்ப நல்லா வருவான். என்னோட வாழ்த்துகள்

    ReplyDelete