Saturday 17 October 2015

கல்யாணமே வைபோகமே



சென்னை வட பழனி ஆபிஸில் வேலைக்காக காத்திருக்கும் போது தான் ராஜீ அறிமுகம் ஆனாள். எங்களுடன் இருந்ததில் வயது குறைந்தவளும் கூட.

என்னோடு இருந்த நான்கு நாளில் நல்லா பழக்கம் ஆயிட்டாள். டிப்ளமோ நர்ஸிங் முடித்தவள். வீட்டில் அம்மாவும் அக்கா முனியம்மா மட்டுமே. அப்பா இல்லை.

முனிமாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவர் விட்டுட்டு போயிட்டார். மீண்டும் வேறு ஒரு வருக்கு இவள் தான் முன் நின்று திருமணம் முடித்து கொடுத்திருக்காள். ராஜீயின் ஊர் கோவில் பட்டியில் சிறு கிராமம். அக்காள் முனிமாவின் மறுமணத்தால் உறவுக் காரங்க எல்லாம் விலகிட்டாங்க. குடும்ப பொருப்பு ராஜீயின் மீது. அக்காவின் கல்யாணக் கடன் நோயாளி அம்மா .

அப்பல்லோவில் எனக்கான வேலைக்கு ராஜீயை அனுப்பி வைத்தேன். பேஷண்ட் கவனிக்க.போனில் அப்ப அப்ப பேசுவாள். எதாவது சந்தேகம் கேட்கனும்னா கேட்பாள். கடைசியா ஆபிஸில் என்னோடு இருக்கும் போது பார்த்தது.

நான் தற்சமயம் கோவையில் இருக்கிறேன். ஐந்து ஆறு மாதங்கள் இருக்கும் ராஜீட்ட இருந்து போன். எப்பவும் போனில் பேசுவாள் ஆனா அன்னைக்கி கொஞ்சம் தயக்கமாவே சொன்னாள்.

"நான் ஒரு பையனை காதலிக்கிறேன் அக்கா. பேஸ் புக்கில் பழக்கம். நீங்க அவன்ட பேசுறீங்களா"னு கேட்டாள். எனக்கோ செமக் கோவம். முன்ன பின்னத் தெரியாத பார்க்காத பையனை எப்படி நம்பி லவ் பண்றேனு கோவப்பட்டேன்.

ஒரு நாள் அந்த பையனே போன் போட்டு என்னிடம் பேசினான். தன் வீட்டு சூழ்நிலை தன்னோட வேலை குறித்து எல்லாம் பேசினான். எனக்கு சந்தோசமா இருந்தது. என்னை அம்மா என்று தான் கூப்பிடுவான்.

நல்லதொரு நாளில் முறைப் படி பொண் கேட்டு திருமண நாள் குறித்தாச்சி. இத்தனைக்கும் மணப் பெண்ணின் போட்டோவை மட்டுமே தன் தாய் தகப்பனிடம் காட்டி உள்ளான். தன் பையனின் ஆசைக்கு மதிப்பு கொடுத்து கல்யாணத்திற்கு சம்மதித்தனர்.

என்னையும் தன் தாயாய் மதித்து கல்யாண பத்திரிக்கை மாடல் முதல் மூகூர்த்தப் பட்டு வரை வாட்ஸப்பில் அனுப்பி எனக்கு பிடித்ததையே தேர்வு செய்தார்கள்.

இருவருமே ஒரு வாரத்திற்கு முன்பே கல்யாணத்திற்கு வரச்சொல்லி அழைப்பு வைத்தார்கள். 28 ல் கல்யாணம் .ராஜீ 15ம் தேதி வரை சென்னையில் தான் இருந்தாள்.

கல்யாணத்திற்கு முதல் நாள் முன்னதாக போனேன் ராஜீயின் வீட்டுக்கு. சின்னதாய் ஒரே ரூம் மட்டுமே கொண்ட வீடு. அம்மா அக்கா அத்தான்னு நான்கு பேர் மட்டுமே கல்யாண வீட்டில்.

எத்தனையோ கல்யாணத்திற்கு என் கணவரோடு போய் இருக்கேன். இந்த கல்யாணம் கொஞ்சம் வித்தியாசமா தெரிந்தது எனக்கு.

முதல் நாள் பொண் அழைப்பு

எல்லாருமா சேர்ந்து சமையல் செய்தோம். பெண்ணுக்கு புடவை கட்டுவது முதல் சிகை அலங்காரம் வரை எல்லாம் முன் நின்று செய்தேன். என் கணவர் இறந்த பிறகு கலந்து கொண்ட முதல் விசேஷம் இது.

அந்த ஊரில் ஒரு பழக்கம் எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் பெண் அழைப்பு அன்று வீட்டின் முன் முற்றத்தில் ஊர் பெரியவர்களை இருக்க வைத்து மாப்பிள்ளை வீட்டில் இருந்து கொண்டு வந்த சீர் நிச்சயப்பட்டு பூ பழங்கள், அரிசி பெட்டி. பொதுவா பெண் வீட்டில் இருந்து தான் அரிசி பெட்டி கொடுப்பார்கள். சீர்களை பெரியவர்கள் சம்மதத்தில் ஊர் முன்னிலையில் மணப் பெண் விழுந்து கும்பிட்டு சீரைப் பெறுகிறாள். தலையாரி மணி ஓசையோடு மூகூர்த்த ஓலை வாசித்தார்கள்.

போட்டோவில் மட்டுமே பார்த்த மணமகனை முதல் முறையா நேரில் பார்த்ததும் சந்தோஷம்.

நல்லபடியா திருமணம் நடந்தேறியது. சந்தோஷமா இருந்தது. என்னை அவர்கள் வீட்டில் ஒருத்தியாய் நினைத்து அன்பு காட்டினார்கள்.

ஊர் ஊராய் தேடி பெண் பார்த்து கல்யாணம் செய்து வைத்த என் வீட்டில் கூட இந்த சந்தோஷத்தை நான் அனுபவிக்கவில்லை.

வாழ்த்துகள் ராஜ் கண்ணன். என்றும் என் அன்பும் ஆசியும் உங்களுக்கு உண்டு.

.

No comments:

Post a Comment