Saturday 3 October 2015

நவராத்திரி கொலு (தசரா) - பாகம் 1



“என்ன மீனா ஏன் என்னவோப் போல் இருக்க. உடம்புக்கு எதுவும் முடியலையா . முகம் எல்லாம் வாடிப் போய் இருக்கு”. கடை வியாரத்தை கவனித்துக் கொண்டே மனைவியைப் பார்த்துக் கேட்டான் சொக்கன்.

“இல்லங்க. இந்த குமார் ஆசாரிய நேற்றே வரச் சொன்னேன். இன்னும் வரலை. அதான்”

“குமாரையா ஏன் எதுக்கு? என்ன வேலையா வரச்சொன்னே?”

“இன்னைக்கு தேதி ரெண்டாயிட்டு இன்னும் ஒன்பது நாள் தான் இருக்கு நவராத்திரிக்கு. போன வருஷம் செய்த கொலுப் படியை மழையில் நனைய விட்டு மரப் பலகையெல்லாம் வீணாயிட்டு. அதான் புதுசா செய்ய சொல்லிருந்தேன்”

“குமார் காலையிலே வந்தார். எதாவது வேலை இருக்கானு கேட்டதுக்கு நான் தான் இப்ப ஒரு வேலையும் இல்ல. இருந்தா கூப்பிடுதேனு சொல்லி அனுப்பிட்டேன்”

“ஏங்க இப்படி பண்ணுனிங்க. எங்கிட்ட ஒரு வார்த்தைக் கேட்டு இருக்கலாம்மில்ல. அவர்ட போன் கூடக் கிடையாதே. எப்படி கூப்பிட?”

“ஏன் மீனா இந்த வருஷம் கண்டிப்பா கொலு வைக்கனுமா. நீ தனியா இருந்து எப்படி எல்லா வேலையும் செய்வே. இந்த வருஷம் வேண்டாமே. பிள்ளைகள் எல்லாம் இருந்தா உனக்கு உதவியா கொஞ்சம் வேலையப் பார்ப்பாங்க. நீ தனியா இருந்து வீட்டக் கழுவி விளக்கு தேய்த்து படி அலங்காரம் செய்யனும். அது போக தினமும் வருகிறப் பிள்ளைகளுக்கு சுண்டல், பூ, பருப்புனு கொடுக்கனும். எதுக்கு நீ தனியா கிடந்து கஷ்டப்படனும். இது காணாதற்கு நான் இல்லாதப்ப கடையையும் கவனிக்கனும். வேண்டாம் மக்கா. கொலு அது இதுனு கஷ்டப் படாதே”

“இல்லைங்க. கொலு வைக்கிறது எனக்கு ரொப்ப பிடிக்கும்ங்க. தயவு செய்து வேண்டாம்னு சொல்லாதிங்க. கொலு வைக்கிறது வீட்டுக்கும், மனசுக்கும் சந்தோஷமா இருக்கும்ங்க”

“நான் சொல்லுரதை சொல்லிட்டேன். அப்புறம் உன் இஷ்டம். சரி சரி..... கொஞ்சம் கடையப் பார்த்துக்கோ. நான் போய் கடைக்கு வேண்டிய சாமான்களை வாங்கிட்டு வாறேன். என்னவெல்லாம் வாங்கணும்னு பார்த்து எழுதி வை. நான் இப்போ வாறேன்”னு சொல்லிட்டு வண்டியை எடுக்கப் போனான் சொக்கன்.

கடைக்கு தேவையான சாமான்களை ஒரு பேப்பரில் எழுதி இருந்த பணத்தையும் சில்லரையும் எண்ணி பையில் போட்டு சொக்கனிடம் கொடுத்து அனுப்பினாள் மீனா.

மீனா கொடுத்த பையை வாங்கி கொண்டு வண்டியை ஸ்டாட் செய்து மொத்தக் கடையை நோக்கி பயணித்தான்.

சின்ன வயசில் இருந்தே கொலு வைப்பது மீனாவுக்கு ரொம்ப பிடிக்கும். அப்பா இறந்த பிறகு பொங்கல், தீபாவளினு எந்த பண்டிகையும் அம்மா கொண்டாட மாட்டாள். ஆனா எல்லாரும் பொங்கலுக்கு வீட்டை வெள்ளை அடித்தால் அம்மா நவராத்திரிக்கு வீட்டை வெள்ளை அடிப்பாள். கோயில்ல கால் நட்டிட்டா வீட்டில் எந்த வித அசைவ உணவும் செய்ய மாட்டாள். ஊரில் இருக்கும் கொழுந்தன் பிள்ளைகளை வரவழைத்து வித விதமா ஜடை அலங்காரம் செய்து அழகு பார்ப்பாள். பட்டு பாவாடைக் கட்டி நீண்ட முடியில் குஞ்சம் வைத்து தாழம்பு தைத்து அழகு செய்வாள்.

சாயங்காலம் ஆயிட்டா போதும் பிள்ளைகள் எல்லாம் வீடு வீடுக்கு கொலு பார்க்க கிளம்பி விடுவார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் பிள்ளைகள் அலங்காரமா செல்வார்கள். கிருஷ்ணர், ராதைனு பக்க கொண்டை வைத்து மீனாட்சி அலங்காரம் மீனாவுக்கு ரொப்ப பிடிக்கும். அம்மா போட்டு விடும் கொண்டையில் பாசி மணிகள் தொங்க கண்ணக் கண்ணை உருட்டிக்கிட்டு போய் நிற்பார்கள்.

ஒவ்வொரு வீட்டிலும் அழகழகா படி வைச்சி பொம்மைகளை அடிக்கி வித விதமா கலர் பேப்பரில் தோரணைகள் கட்டி பச்சை புல்லில் பாத்திக் கட்டி நடுவில் பொம்மைகளை வைத்திருக்கும் அழகைப் பார்க்கும் போது மீனாவுக்கும் நம்ம வீட்டில் கொலு வைக்கனும்னு ஆசையா இருக்கும்.

சின்ன வயசிலே அம்மன் பாட்டு, கிருஷ்ணர் பாட்டுனா ரொம்ப பிடிக்கும். அதிலும் கற்பக வல்லியின் பொற்பதங்கள் பிடித்தேன், நற் கவி அருள்வாய் அம்மா...பாட்டு அப்பவே அருமையா பாடுறியேனு அவளை பாத்து சொல்லுவாங்க.

"ஏன் இந்த மெளனம் அம்மா ஏழை எனக் அருள நான் இந்த மானிலத்தில் நாடுவ தாரிடமோ" இந்த வரியை படிக்கும் போது அப்படியே சாட்சாத் அம்மனிடம் உரிமையா கேட்பது போல் உணர்வு மீனாவுக்குள் இருக்கும்.

கொஞ்சம் பெரியவளா வளர்ந்ததும் கொலு வைக்கும் வீட்டில் எப்படி கொலு வைக்கனும். அதுக்கு என்னவெல்லாம் செய்யனும்னு கேட்டு வைத்தாள். கிடைக்கிற காசை எல்லாம் சேர்த்து வைச்சி கொலு பொம்மைகள் வாங்கி அம்மாவுக்கு தெரியாமல் ரெங்கு பெட்டிக்குள் மறைத்து வைப்பாள். நவராத்திரி நாள் வரும் போது அம்மாட்ட கேட்டு அலமாரியில் வைத்து பூஜை செய்வாள். அப்படியே கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வைத்த பொம்மைகளை எல்லாம் கல்யாணம் ஆனதும் புகுந்த வீட்டுக்கு கொண்டு வந்துட்டாள்.

மீனாவின் கணவருக்கு அவள் மேல் பாசம் அதிகம். அதனால் கொலு வைப்பதில் எந்த கஷ்டமும் இல்லாமல் இத்தனை வருஷம் வைச்சிட்டு வந்தாள். என்னவோ தெரியலை இந்த முறை வைக்க வேண்டாணு சொல்லுறார். எல்லாம் அவள் மேல் உள்ள அக்கறைனு தெரியுது. ஆனா அது தான் சந்தோஷம்னு தெரியலையேனு கொஞ்சம் வருத்தமா தான் இருக்கு.

கடைக்கு போய்ட்டு வந்த சொக்கன் வாங்கி சாமான்களை எடுத்து வைத்துக் கொண்டே மீனாவை வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்கச் சொன்னான்.

வீடு ஒன்னும் அவ்வளவு தூரத்தில் இல்லை. கடையோடு சேர்ந்தே தான் வீடு . வீட்டுக்கு வந்த மீனா விளக்கு ஏற்றி சாமியைக் கும்பிட்டாள். எப்படியாவது கொலு வைத்து உன்னை கும்பிட நீ தான் அம்மா அருள் செய்யனும்னு சொல்லி கும்பிட்டு கட்டிலில் இருந்தவள் அப்படியே உறங்கிப் போனாள்.

மீனாவை வீட்டுக்கு அனுப்பி வைத்த சொக்கன் மீனாவை நினைத்து வருத்தப் பட்டான். கல்யாணம் ஆகி இத்தனை வருஷத்தில் மீனா தனக்குனு எதையுமே கேட்டதில்லை. கேட்கும் படி வைச்சதும் இல்லை. ஆனா இன்னைக்கு அவள் கேட்டதற்கு நாம மறுப்பு சொன்னது அவளுக்கு வருத்தம் இருக்கும். நான் எனக்காகச் சொல்லவில்லை. மகள் பூமா இருக்கும் வரை எதோ கொஞ்சம் உதவி செய்வாள். அவளையும் இந்த வருஷம் தான் கட்டிக் கொடுத்தேன். பெரியவன் சுரேஷ் எப்பவும் அம்மா பிள்ளை. நவராத்திரி வந்துட்டாப் போதும் இருக்கிற ஸ்பீக்கர் ஸ்செட்டை எல்லாம் ஜன்னல் கம்பி, வாசல்னு கட்டி விடுவான். கலர் பேப்பரில் வித விதமா தோரணைகளை கட்டி தொங்க விடுவான். வெளியில் எங்கு போனாலும் பார்க்கிற பொம்மைகளை வாங்கிட்டு வந்து அலங்கரிப்பான். சின்னவன் ரமேஷ் எப்பவும் எதிலும் ஒட்டுவதில்லை. ஆனா தேங்காய் துருவி கொடுப்பதில் இருந்து கொழுக்கட்டைக்கு பூரணம் வைத்து பிடித்து கொடுப்பது வரை எல்லாம் செய்வான். தெருவில் உள்ள அத்தனை குழந்தைகளும் நம்ம வீட்டில் தான் இருப்பார்கள். வீடே அமர்க்களமா இருக்கும். எனக்கும் கொலு வைப்பதில் சந்தோஷம் தான் . ஆனா இன்னைக்கு பெரியவன் வேலைக்காக வெளியூர் போயிட்டான். சின்னவனுக்கோ ஒரு நாள் விட்டு ஒரு நாள் டூட்டி. மீனா தனியா இருந்து கஷ்டப்படக் கூடாதேனு நினைச்சேன். ஆனா இப்போ கவலைப் பட வைச்சிட்டேனேனு சொக்கன் தனக்கு தானே வருத்தப் பட்டான்.

தூங்கிக் கொண்டு இருந்த மீனா எதோ டம் டம்னு சத்தம் கேட்டு விழித்தாள். எங்க இருந்து சத்தம் கேட்கு? எல்லாம் கடையில் இருந்து தான் சத்தம் வ்ருது. இவ்வளவு நேரத்திற்கு பிறகு என்ன செய்றார்னு கடைக்கு போய் பார்த்தா குமார் ஆசாரி தான் எதையோ அடித்துக் கொண்டிருந்தார்.



- தொடரும் 

4 comments:

  1. நல்லா இருக்கு. முன்கூட்டிய நவராத்ரி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. எப்படியோ கொலு வைக்க ஆரம்பிச்சாச்சு போல! அருமையான கதை!

    ReplyDelete
    Replies
    1. ஆமாமா, ரொம்ப கஷ்டப்பட்டு கொலு ரெடி ஆகிடுச்சு. அடுத்த பாகம் படிங்க இன்னும் தொடருது

      Delete