Wednesday, 30 September 2015

ராக்கோழிகள்


"ஏய் ...எய் கழுத என்னப் பண்ணுற. அதுக்குள்ள என்ன தூக்கம் வேண்டிக் கிடக்கு. எந்திருடி"

ஒவ்..அவ்னு கொட்டாவி விட்டப்படி எழுந்த விமலாவுக்கு எரிச்சலுடன் கோவமும் வந்தது. பின்ன தூங்கிட்டு இருந்தவளை எழுப்பி என்னப் பண்ணுறேன்னு கேட்டா.

இப்ப என்னச் செய்யனும் எதுக்கு எழுப்பினாள்னு தெரியாமலே எழுந்து போய் முகம் கழுவிட்டு வந்து கையில் புக்கோடு கட்டிலில் அமர்ந்தாள் விமலா.

"ஏய் என்ன பண்ற"னு கேட்ட அக்காவின் கேள்விக்கு ஒரு மிரண்ட பார்வையோடு என்ன என்பதுப் போல் பார்த்தாள் ஒன்னும் புரியாமல். 

"புக்கை தூக்கிப் போட்டுட்டு கிளம்பு சீக்கிரமா படம் போட்டுருவான்"

"படத்துக்கா ...நா வரலை. எனக்கு படிக்க வேண்டியது நிறைய இருக்கு. நா படிக்கனும்.நீங்க போயிட்டு வாங்க"

"உன்னைய தனியா விட்டுட்டு நாங்க மட்டும் எப்படி போக. கிளம்புடீய். போயிட்டு வந்து படிச்சா போதும். இப்ப படிச்சி கலெக்டர் வேலைக்கு போகப் போற மாதிரி தான்"

அக்காவுக்கு ஒத்து ஊதுவது போல் பார்வதி அக்காவின் சிரிப்பு விமலாவை ஆத்திரப் படுத்தியது. பாவம் விமலாவால் அழ மட்டுமே முடியும். வாய் திறந்தால் வீட்டுக்குள்ளே ஒரு படம் ஓடிவிடும் . எதற்கு வம்பு. அமைதியாவே இருப்பது நல்லதுனு இருந்து கொண்டாள்.

அம்மா தான் விமலாவுக்கு எப்பவும் சப்போட்டு. 

"சரி சரி... அவா தான் படிக்கனும்ங்கிறால்லா. படிக்கிறப் பிள்ளை ரொம்ப படம் பார்க்க வேண்டாம். வா நாம போவோம். படம் போட்டுறப் போறான்". அம்மா அக்காவை கிளப்புவதில் குறியா  இருந்தாள்.

அம்மாவுக்கு விமலா மேல் எப்பவும் பாசம் அதிகம்.எப்படியாவது நல்லா படிக்க வைச்சி நல்ல ஒரு வேலைக்கு அனுப்பனும்னு நினைப்பாள். நம்ம படும் கஷ்டத்தை மகளும் படக் கூடாதுனு நினைப்பவள்.

அம்மா பொன்னுத்தாயி. பெரிய குடும்பத்தில் சகல வசதியோடு பிறந்தவள். ஒரே அண்ணன். பாசமலர் சிவாஜியையும் மிஞ்சியவர்.

அம்மாவின் பிறந்த வீட்டில் எல்லாருமே நல்லா படித்து பதவியில் இருப்பவர்கள். ஆனா அம்மா மட்டும் கையெழுத்துக் கூட போடத் தெரியாத செல்லப் பிள்ளையா வளர்ந்துட்டாள்.

படிக்கா விட்டாலும் அவளிடம் இருந்த அந்த மிடுக்கும் தைரியமும் வீர நடையும் என் ரத்தத்தில் ஏட்டையா ரத்தம்மில்ல ஓடுது என்பாள்.

ஆம். அம்மாவின் குடுப்பத்தில் வீட்டுக்கு ஒருத்தர் ஏன் ரெண்டு பேர் நாட்டுக்காக பாடுபடுபவர்கள்.

வசதியாகவே பிறந்து வசதியாகவே வாழ்ந்த அம்மாவுக்கு அப்பாவின் திடீர் மரணம் அவளை திக்கு முக்காடப் பண்ணிட்டு. ஆனாலும் யார் கையையும் எதிர்ப் பார்க்காமல் விமலாவையும் வளர்த்து ரெண்டு அக்காக்கள் கொடுத்த கஷ்டத்தையும் சகிச்சி தன் சொந்த காலில் வைராக்கியமா இருப்பவள்.

என்னைக்கு சின்ன அக்கா வீட்டோடு வந்து தங்கினாளோ அன்னைக்கே அம்மாவின் மன வேதனையும், வேலை பளுவும், ஏன் அவளிடம் இருந்த ஒட்டு மொத்த சுதந்திரமும் பறி போனது. அம்மாவைப் பார்க்க விமலாவுக்கு  பாவமா தான் இருக்கும்.

விடியற்காலை எழுந்து ரெண்டு மூணு வீடுகளில் வேலைப் பார்ப்பாள். மதியம் பதினொரு மணியை சூரியன் பட்டு மறைந்த நிழலை வைத்து கணக்கெடுத்து நார் பெட்டியைத் தூக்கி கிட்டு வீடு வீடாப் போய் சாப்பாட்டு கேரியரை வாங்கி ஒவ்வொரு ஆபிஸா போய் சாப்பாடு கொடுக்க மைல் கணக்கில் நடப்பாள்.

விமலா  படிக்கும் ஸ்கூல் மெயின் ரோட்டில் இருப்பதால் மாடி வகுப்பில் இருந்து பார்த்தால் பத்துக்கும் மேல் பட்ட கேரியரைத் அம்மா தலை சுமையா தூக்கி செல்வதைப் பார்க்கும் போது அழுகையா வரும்.

எப்பவும் அதிகாரம் பண்ணும் அக்காவை பார்க்கையில் கோவமா வரும். அம்மா தான் பொறுமையா இருக்கச் சொல்லி கண்ணைக் காட்டுவாள். இப்பக் கூட விமலாவுக்காக தான் அவளோடு இரவு காட்சி படத்திற்கு போயிருக்காள்.

வீட்டு பக்கத்தில் தியேட்டர்.இரண்டு நாளைக்கு ஒரு படம் போடுவது அக்காவுக்கு கொண்டாட்டம் தான். பாவம் அம்மா அங்க போய் உட்கார்ந்து தூங்கிட்டு வருவாள்.

"ஆஹா மணி ஒன்னாயிட்டே. இப்ப படம் விட்டு வந்துடுவாங்கலே. உங்க கிட்ட பேசிக்கிட்டு இருந்ததுல மணியப் பார்க்கலை. எப்படியோ பேசிக்கிட்டே சயின்ஸ் காம்போசிஷன் நோட்ல மனிதனின் வயிற்றுப் பகுதியை வரைஞ்சிட்டா.

அக்காவும், அம்மாவும் வர்றதுக்குள்ள லைட்ட ஆப் பண்ணிட்டு தூங்க போறா. வரும் போது முழிச்சி இருந்தா அதுக்கும் திட்டு விழும். 

"இவ்வளவு நேரம் லைடப் போட்டுட்டு ஒரு வயசுப் பிள்ள முழிச்சி இருந்தா பக்கத்து வீட்டுல என்ன பேசுவாங்க. தப்பா பேச மாட்டாக"

ஆமாம். வயசுப் பிள்ளைய தனியா விட்டுட்டு நைட் ஸோ படத்துக்கு போறது தப்பில்லை. வயசுப் பிள்ளை முழிச்சி இருந்து படிச்சா தப்பா. எதுக்கு வம்பு லைட்ட ஆப் பண்ணிட்டு தூங்குவது போல் நடிப்போம். நீங்களும் தூங்குங்க.

குட் நைட்.

2 comments: