Monday, 7 September 2015

கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்.



கல்யாண சமையல் சாதம். காய்கறிகளும் பிரமாதம்... படத்த பாத்தீங்கள்ல, பெண் அழைப்பு சாப்பாடு தயார் ஆகுது.

இப்படி சமையல் செய்து ரொம்ப நாட்கள் ஆயிட்டு. வீட்டுல அவுங்க இருக்கும் போது இப்படி தான். எந்த ஒரு விசேஷம்னாலும் முன்னாடி போய் நிற்பேன். நா போகாட்டாலும் தேடி வந்து அழைத்துட்டு போவாங்க.


கோலம் போடுவதில் இருந்து ஆரம்பிக்கும் என் வேலை. எல்லாத்தையும் ரசித்து ரசித்து செய்வேன்.

வீட்டில் நல்லா திட்டு வாங்குவேன் . "இவ்வளவு பெரிய கோலம் போடனுமா. சின்னதா போட்டா போதாதா"ன்னு. எல்லாம் அக்கறையுடன் அன்பால் வாங்கும் திட்டுக்கள்.

சமையலா - காய்கறி நறுக்குவதில் இருந்து அப்பளம் பொறிக்கும் வரை பக்கத்திலே இருந்து ஒவ்வொன்னா ரசனையோடு கவனிப்பேன். சமையல் எனக்கு பிடித்தமான ஒன்று.

பொண்ணுக்கு சேலைக் கட்டுவதில் இருந்து சிகை அலங்காரம் என்னுடையதாகவே இருக்கும். அதில் எனக்கும் மற்றவர்களுக்கும் ஒரு திருப்தி.

ஒரு முறை அப்படி தான் என்னோட நாத்தனார் மகன் கல்யாண விருந்து சாப்பாட்டுக்கு கூப்பிட்டாங்க. என்னிடம் யாரும் அப்போ சரியா பேச மாட்டாங்க. ஏன்னா எங்க கல்யாணம் அவுங்களுக்கு பிடிக்கலை.

கட்டாயத்தின் பேர்ல தான் அந்த விருந்துக்கு போனேன். அங்க எல்லாருமா என்னோட நாத்தனார்கள் வட்டமா உட்கார்ந்து கூடை கூடையா வெங்காயத்தை உறிச்சிக்கிட்டு இருந்தாங்க.

நமக்கு ஏன் வம்புனு தனியா ஒரு இடத்தில உக்காந்துகிட்டேன்.
விருந்துனா எல்லாருமா சேர்ந்து பணம் சேகரித்து மொத்தமா மாப்பிள்ளை பொண்ணுக்கு விருந்து கொடுக்கிறது. அதுல நாங்களும் சாப்பிடுவோம்.

கொஞ்ச பேர் தான்னு சொல்லி நம்மளே சமைக்கலாம்னு முடிவு பண்ணி முழு ஆட்டையும் வெட்டி வைச்சிருக்காங்க. ஒரு குடிகாரப் பெரியவரை நம்பி.

நான் சும்மா இருந்தாலும் என்னவர் சும்மா இருக்கனுமே. மெதுவா அடுப்பு பக்கம் போனது தான் தாமதம் எடுத்தாங்க பாருங்க ஓட்டம் எல்லாம் யாரு என் நாத்தனார்கள் தான்.

எதோ விரோதியக் கண்ட மாதிரி எல்லாத்தையும் போட்டுட்டு ஓடிட்டாங்க. அவ்வளவு தான் பிள்ளைகள் வீட்டில் ஒரே கெஞ்சல். நாம சமைப்பதில் எந்த பிரச்சனையும் இல்ல. ஆனா சமைத்ததை எல்லாரும் சாப்பிடனுமே. அதானே பிரச்சனை.

யாரைப் பற்றியும் கவலப் படாதே. எல்லாரும் சாப்பிடுவாங்கனு ஒரே அட்வைஸ். ஆத்துக்காரர் சொன்னா அடுத்தப் பேச்சி ம்கூம்.

பெரிய அண்டாவில் நிறைய தண்ணீரில் பருப்பு வேகப் போட்டுருக்கு. எதுக்குனா எலும்பு குழம்புக்காம். பெரியவர் சொன்னார். பெரியவர் சமையல்காரர் அல்ல சொந்தக்காரர்.

பெரியவரை ஒரு இடத்தில் உட்கார வைத்துட்டு ஆரம்பிச்சோம் பாருங்க நம்ம சமையல. கறி துவட்டல், சால்னா, சுக்கா வறுவல், குடல் பிரட்டல், தலைக் கறி குழம்பு, கத்தரிக்கா எலும்பு கறி, ரசம், பாயாசத்தோடு விருந்து தடபுடல்.

ஓடியவர்கள் எல்லாம் ஒட்டிக் கொண்டது நம் சமையலில் தான்னு சொல்லிக்க பெருமைப்படுகிறேன்.

No comments:

Post a Comment