Wednesday, 26 August 2015

லெட்சுமி



"ஏ.....ய்.....ராதா. உள்ள என்னடிப் பண்ணுதே. அத்தான் வந்திருக்கிறது தெரியாம. நல்லா....கொழுப்பு வைச்சிப் போச்சி" குரல் கேட்டு  எட்டிப் பார்த்தாள் வள்ளி.

என்ன? என்பது போல் கைகளை நீட்டித் தலையிட்டவளைப் பார்த்து

"இந்த பார் வள்ளியக்கா.....எங் குடும்ப விஷயத்தில தலையிடக் கூடாது. சொல்லிப்புட்டேன்" என்றவாறே மறுபடியும்

"ராதா.....ராதா....."

"உனக்கு என்ன வேணும். அவா படிச்சிக்கிட்டு இருக்கா. பேசாமா போ அங்க"

"எம் பொண்டாட்டிப் படிச்சா எனக்கு தானே பெருமை அவ படிக்கட்டும். வேண்டாங்கல. ஆனா என்னைக்கு ஆனாலும் அவ தான் என் பொண்டாட்டி"

"ஆமா பொண்டாட்டியாம் பொண்டாட்டி" இவள் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்த  ராதா தாவாக்கட்டையில் இடித்துக் கொண்டாள்.

"பின்னே இல்லையா?"

"ஐயோ கிட்ட வந்தாலே சிகரெட் நாத்தம் தாங்கல"

"அத்தானப் பார்த்து அப்படி சொல்லாத செல்லம். சத்தியமா...உன் தலையில அடிக்க நான் சிகரெட் குடிக்கல. மத்தவங்களுக்கு வாங்கியாந்து கொடுத்தேன் அதான் இந்த  நாத்தம்"

"முதல்ல போய் குளி"

"இன்னைக்கி லோடு அவ்வளவா வரலை. அதான் சீக்கிரமா உன்னையப் பார்த்துட்டு போகலாமேனு வந்தேன்" கொஞ்சலோடு குரல் ஒலித்தது.

"சரி...சாப்பிடுதியா....?" வள்ளி இருவருக்கும் இடையில் வந்தாள்.

"என்ன சாப்பாடு. எம் பொண்டாட்டி வைச்சதா?"

"இங்க பாரு அவளை பொண்டாட்டி பொண்டாட்டினு சொல்லிக்கிட்டு திரிஞ்ச. அப்புறம் அவளை யாருமே கட்டிக்க மாட்டாங்க பார்த்துக்கோ"

"நான் கட்டிக்கிறேன். நீ ஏன் கவலைப் படுதே வள்ளி"

"அடி வாங்கப் போற"

"நீ அடிக்கா. எவ்வளவு வேணுனாலும் அடிக்கா. யாரும் கேட்பா உன்னைய"

"சரி, சரி..... இன்னைக்காவது சீக்கிரமா வீட்டுக்கு போ" விரட்டுவதில் வள்ளி குறியாய் இருக்க,

"வீட்டுல போய் என்ன செய்ய. இங்கையாவது கொஞ்ச நேரம் சந்தோஷமா இருந்துட்டு போறேனே" என்றபடி கால் மடித்து உக்கார்ந்தாள் லெட்சுமி,

பாவம்.....இந்த பிள்ள. இவ்வளவு சின்ன வயசில் எவ்வளவு பெரிய பொறுப்பை ஏத்துருக்கு. பார்க்கிறவங்க எல்லாருடைய அனுதாபத்துக்கும் சொந்தக்காரி இந்த லெட்சுமி.

லெட்சுமியோட  பதிமூன்று வயதில்  நிறைய கடனை மட்டும் வைச்சிட்டு அவள் அப்பா டிபி நோயில் இறந்துட்டார்.

அம்மா வீட்டு வேலைச் செய்தாங்க. மூணு  பேருக்கு சாப்பாட்டுக்கே காணாது. கல்யாண வயதில் இருக்கும் அக்காவ  கட்டிக் கொடுக்கனும். கடனை அடைக்கனும்.

லெட்சுமி பார்க்க பையன் மாதிரி தான் இருப்பாள். இடுப்பில் பாவாடையும் ,மேல் சட்டையுமா. மெல்லிய உடல்வாகு. கம்பெனி வேலைக்கு காலையில் போனா சாயங்காலம் வரைக்கும் வேலை இருக்கும். சம்பளம் தினக்கூலி ஐஞ்சி அல்லது ஆறு ரூபாய்.

அதை வைச்சி என்ன செய்ய.

அப்ப தான் மூடைத் தூக்கிறவங்களுக்கு ஒரு சங்கம் வைச்சாங்க. சங்கத்து மூலமா தான் மூடை இறக்கவோ ஏற்றவோ செய்யனும்.

லெட்சுமி அங்கு தான் வேலைக்கு சென்றாள். சங்கத்து ஆட்களுக்கு டீ, காபி வாங்கி கொடுக்க. யாரு கேட்டாலும்  சிகரெட் ,பீடி வாங்கி கொடுக்கனும். கை நிறைய சம்பளம் . ஆண்களுடன் உண்டான வேலை. அதனால் தன்னையும் ஒரு ஆணாகவே நினைத்து கொள்வாள்.

பக்கத்தில் தான் ராதாவின் வீடு . சில நேரம் தண்ணீர் குடிக்க பாத்ரூம் போக என வரும் போது ராதையையும், அவள் அக்காவிடமும் கேலிக் கிண்டல் பேசுவாள்.

வேலைக்கு  சேர்ந்த கொஞ்ச நாள்லயே மூடை தூக்கவும் பழகிட்டாள். இவ்வளவு சின்ன வயசில் அதுவும் பொம்பளப் பிள்ள எப்படி மூடை தூக்குவாள்?

அது தான் அதிசயமே.

ஆச்சரியமா பார்த்த கண்கள் கொஞ்ச நாளில் சந்தேக பார்வை பார்க்க ஆரம்பிச்சிடுச்சி.

லெட்சுமி ஆணா, பொண்ணா. ஆளாளுக்கு நேராவே கேட்டுட்டாங்க.

"ஏண்டி... இன்னும் வயசுக்கு வரலையா?

"இப்ப என்ன உங்களுக்கு தெரியனும். நான் ஆணா பெண்ணானு தானே. கவலைப் பட வேண்டியவங்களே படலை. நீங்கப் பட்டு என்ன ஆகப் போகுது. உங்க வேலையப் பார்த்துட்டு போங்கம்மா"

நடக்குறத எல்லாம் லெட்சுமி ராதை வீட்டில் சொல்லி அழும் போது பாவமா இருக்கும். ராதையை அவளுக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா ராதை அவளிடம் அதிகம் பேசுவது கிடையாது. எப்பவும் அவள் மீது அடிக்கும் சிகரெட் நாற்றம் தான் காரணம்.

இந்த நாற்றத்தில் இவ்வளவு கதை இருக்கானு ரொம்ப நாளைக்கு அப்புறம் தான் ராதை தெரிந்து கொண்டாள். காலம் அதுபாட்டுக்கு ஓடிடுச்சு.

இப்ப ராதைக்கு கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தைக்கு தாய் . மூத்தப் பிள்ளையை ஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போகும் போது தான் அவளைப் பார்த்தாள்.

தன்னை இடிக்கிற மாதிரி வந்து நின்ற பைக்கின் பின் ஸீட்டில் இருந்து கையில் குழந்தையுடன். அட...நம்ம லெட்சுமி.

"ஏ...ய்.. ரா...தா...எப்படி இருக்கே. இது நம்ம பிள்ளையா. அப்படியே என்னைப் போலவே இருக்கு" சொன்னதோடு கண்சிமிட்டினாள்.

"உ...ன்...னை...ய..கொல்லப் போறேன் பாரு" அடிக்க ராதை கை ஓங்க, இருவரும் கலகலவென்று சிரித்தனர்.

அவள் புருஷன் பக்கத்தில்....ஞே என்று நடப்பது என்ன என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தான்.

No comments:

Post a Comment