Saturday, 22 August 2015

கீர்த்தனாவும் மகாவும்



கொஞ்ச நாளாவே கீர்த்தனாவுக்கு வீட்டில் இருப்பு கொள்ளவில்லை. எங்கயாவது கொஞ்ச நாளைக்கி போயிட்டு வந்தா நல்லா இருக்கும்.

க்கும்...எங்க போக. ....எங்க போனாலும் மனசு பாரம் என்ன குறையவா போகுது - அலுத்துக் கொண்டாள்.

"ஆசை ஆசையா வளர்த்த பிள்ளை. பெத்த பிள்ளைக்கு மேல் பாலும் சோறுமா கொடுத்து மடியிலயே போட்டு வளர்த்தேனே. இதுகளுக்கு என்ன குறை வச்சேன். ஆசைப் பட்டதெல்லாம் செஞ்சிப் போட்டேனே எதுக்கு இப்படி அற்ப ஆயிசுல போறதுக்கா. எனக்கு கொடுத்து வைக்கலை அவ்வளவு தான் யாரைச் சொல்லி என்ன செய்ய" வாய் ஓயாம புலம்பிட்டே இருந்தா.

பின்ன, ஒன்னா ரெண்டா இதோட நாலு பேர் ஆச்சி. ஒவ்வொன்னையா குழிக்குள்ள போட்டாச்சி. யாரு கண்ணுப் பட்டதோ தெரியலையே... 

"மேலத் தெரு கருப்பாயி சொன்னா புள்ளைய வெளியில விடாதேனு.  வீட்டுல நம்ம பேச்சை யாரு கேட்கா... வெளியில போய்டு வந்தா தான் ஆரோக்கியமா இருக்குமாம். இப்படி வெளில விட்டு அவா சொன்னதுப் போலேயே ஆயிட்டு.
இந்தா போச்சா மொத்தமா அள்ளிக் கொடுத்தாச்சி இல்ல". புருஷனுக்கு ரெண்டு திட்டு. பிள்ளைக்கி பிள்ளையா வளர்த்த கதிர் செத்ததில் இருந்தே இப்படி புலம்பிக்கிட்டு இருக்கா.

கதிர் எப்படி செத்தான். யாருக்கு தெரியும். எதோ புட் பாய்ஸனாம்.. கீர்த்தனா ஆக்கிப் போட்டதை தின்னுக்கிட்டு அவ முந்தானையப் பிடிச்சிக்கிட்டே திரிவான். வெளியில போய் கண்டதையும் தின்னு புட் பாய்ஸன்ல போய்ட்டான்.

"சரி....சரி... இப்படியே புலம்பிக்கிட்டு இருக்காம நடக்குர வேலையப் பாரு. போனதுகப் போயிட்டு. புலம்பினா மட்டும் வந்துடவா போகுதுக" சொன்ன புருஷன் மேல கேவமா தான் வந்தது. கோவப் பட்டு என்ன செய்ய.

நாட்கள் ஒடிட்டு. செத்தவங்களுக்கு தான் எவ்வளவு வேகமா நாட்கள் போகுது.
*********

"கீர்த்தி....கீர்த்தி....."

"யாரு.... சேலைக்கார அக்காவா. என்னக்கா...ஆளையே காணும். எப்படி இருக்கிக"

"எனக்கு என்ன.... நான் நல்லா இருக்கேன். எம் மகா தான் ரெட்டைப் புள்ளைய பெத்து போட்டு இருக்கா. அதுகள பார்த்துக்கிடுறது தான் பெரிய வேலையா இருக்கு"

"என்ன...ரெட்டைப் புள்ளயா.ஆணா பொண்ணாக்கா" கீர்த்தனா குரல்ல உற்சாகம் தெரிச்சிச்சி.

"ஆண் ஒன்னு பொண்ணொன்னு . ஏன் கேட்கிற"

"இல்ல.... அதில ஒரு பிள்ளய எனக்கு தருவியாக்கா. நான் நல்லா பார்த்துப்பேன்". கொஞ்சம் யோசனையோடே போனாள் சேலைக்காரக்கா.

ரெண்டு நாளா சேலைக்காரக்கா தெருவுக்குள் வரவில்லை. மூனாவது நாள் ரெண்டு மாத குழந்தைய யாருக்கும் தெரியாம கொண்டு வந்து கொடுத்தாள். பத்திரமா பார்த்து கொள் என்று.

மான் நிறத்தில் பொசு பொசுனு முடியோடு கண்ண உருட்டிக்கிட்டு அழகான பெண் பிள்ளை.

மகா என்ற மகாலட்சுமி. ஒரு மகாராணி மாதிரி வளர்ந்தாள். பிடிச்சதெல்லாம் செஞ்சிக் கொடுத்து வீட்டுக்குள்ளே யார் கண்ணும் பட்டு விடாமல் மாடியில் தனி ரூம் கொடுத்து சகல வசதியோடு தள தளனு வளர்ந்து நிக்கிற மகாவுக்கு வரிசையா மாப்பிள்ளை வீட்டார் வந்த வண்ணமா இருக்க. மகா அவளுக்கு பிடிச்ச மாப்பிள்ளைய அவளே தேர்வு செய்து இன்று நிறை மாத கர்ப்பிணியாய் நிற்கிறாள்.

****************

ரெண்டு நாளாவே மகா முகத்தில் ஒரு கலவரம். சரியா சாப்பிடாம தூங்காம உளத்திக் கொண்டு இருந்தாள்.

மகாவை விட கீர்த்தனா தான் ரொம்ப பயமாய் இருந்தது. அப்ப அப்போ வயிற்றை தடவிக் கொடுத்து ஆறுதல் சொன்னாள்.

இரவு மணி சரியா ஏழு இருபதுக்கு மகா ரெட்டைப் பிள்ளகளைப் பெற்றெடுத்தாள். அவா அம்மா மாதிரியே ஆண் ஒன்னு பொண்ணென்னாய்.

கீர்த்தனா சந்தோஷத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தாள். ஒன்றுக்கு ரெண்டாய் கிடைத்த மகாவின் குட்டிகளை தன் மடியில் வைத்து கொஞ்சினாள்.

அடக் கெரகமே....ஒரு நாய்க்கு வந்த வாழ்வைப் பாருங்க. பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளிக் குதிச்சானாம் அந்த கதையால்லா இருக்கு . ஊருக்குள் மாமியாகாரி புலம்பி தீர்த்தாள்.

*************

பிள்ளைகள் வளர ஆரம்பிக்கும் போது வீட்டுக்குள்ளயே வளர்ந்த மகா கீர்த்தனாவுக்கு தெரியாம வீட்டை விட்டு வெளியில் போனாள்.

வந்தது வினை. வெளியில போயிட்டு வந்த மகா ஒரே வாந்தி . கண்ண சொருக்கி கிட்டு ஒரு மாதிரியா வந்தாள். ஏன் எதுக்குனு தெரியலையே . ஆட்டோ பிடிச்சி டாக்டர்ட போய் காட்டினா புட் பாய்ஸனாம்.

வீட்டுக்குள் இருக்கும் போது வராத நோய். வீட்டை விட்டு வெளியில போனா எப்படி வருது . அதுவும் கொஞ்ச நேரத்தில்.

"அட கடவுளே .....இது என்ன கொடுமை. எம் மகாவுக்கு எதுவும் ஆகக்கூடாது. குட்டிகளைக் கொடுத்துட்டு பெத்தவளைப் பிரிச்சிடாதே. எப்படியாவது மகாவைக் காப்பாற்று"

"மகா யார் எதைக் கொடுத்தாலும் சாப்பிட மாட்டாள். அப்ப எப்படி புட் பாய்ஸன் ஆச்சி". எப்படி கேள்வி கேட்டாலும் பதில் மட்டும் கிடைக்கவே இல்லை. 

உடனடியா கொடுத்த ட்ரிட்மெண்டில் மகா எழுந்து நடமாட ஆரம்பித்தாள். கீர்த்தனாவைப் பார்த்த பார்வையில் இனி வீட்டை விட்டு போக மாட்டேன் மா என்பது போல்.

கீர்த்தனாவுக்கும் எப்படியோ நிம்மதியும் சந்தோசமும். பின்ன இருக்காது. எமன் கிட்ட இருந்து தப்பி வளர்ந்தவள் இல்ல இந்த மகா என்ற மகாலட்சுமி.

********************

ஒரு வாரம் போயிருக்கும்.

"பக்கத்து வீட்டு முருங்கைக்காய் எவ்வளவு காய் காய்ச்சிருக்கு பார்த்தியா. ஒரு ஆள் உயரத்துக்கு நீளமா. எப்படி ?"

மீரா மாமி தான் சொன்னாள்,  அவுங்க வீட்டுப் பக்கம் போகும் நாய்களுக்கு சாப்பாட்டில் பாய்ஸனைக் கலந்து கொடுத்து பிறகு மரத்துக்கு உரமாக வைப்பதை. அப்படி வச்சா மரம் தளதளன்னு வளர்ந்து நிறைய காய் காய்க்குமாம். 

இப்படி தான் என் கதிரும் மற்ற பிள்ளைகளையும் இழந்தேனா. நினைக்கவே கொடுமையான செயலை செய்பவர்களும் நம்ம நாட்டுல இருக்க தான் செய்றாங்க. அவர்களை அந்த கடவுள் தான் கேட்கனும் .


1 comment:

  1. நாய் குட்டிங்கள விஷம் வச்சு கொன்னு முருங்க மரத்துக்கு உரமா வச்சாங்களா?

    எவ்வளவு கொடுமையான விஷயம்மா :(

    ReplyDelete