Monday, 31 August 2015

கொச்சின் அனுபவம் - பாகம் 5




இரண்டு நாளா தூங்கலை. எங்க பாம்பு வந்திருமோனு பயம். விடிஞ்சா காலையில சித்திரை மாதப் பிறப்பு. கோயில்ல பஜனையும் பாட்டுமா அமர்களம் பண்ணினாங்க.

"அம்மா ....இன்னைக்கு மாதப் பிறப்பு . வாங்க கோயிலுக்கு போவோம்"

"கோயிலுக்கா... நான் வரலை"

எங்க வெளியில போனா பாம்பு வந்திருமோனு பயம்.


மறு நாள் காலை விஷு வருடமாம். பக்கத்து ஊரில் இருந்து நிறையப் பேர் வந்திருந்தாங்க. அவுங்களுக்கு எல்லாம் கொடுக்க வண்டி வண்டியா நர்சரியில் இருந்து மரக் கன்றுகள் வந்திருந்தது.


நான் அப்ப தான் அடுப்பில் சூப் வைச்சிக்கிட்டு இருந்தேன். ஜன்னல் பக்கம் ஒரே கசமுசானு சின்ன சத்தம்.

என்னனுக் கேட்டதுக்கு பாம்பு....

மறுபடியும் முதல்ல இருந்தா....

"என்ன சத்தமாம்?"

"ஒன்னும் இல்லை. இப்ப வர்ரே"னு கதவை சாத்திட்டு பாம்பு இருக்கும் இடத்துக்கு போனேன்.

"எங்க பாம்பு இருக்கு?

"இதுக்குள்ள தான்"

கோயில்ல பஜனை நடப்ப தால் கொஞ்ச பேர் தான் நின்னுக்கிட்டு இருந்தாங்க. நானும் அவுங்களோடு சேர்ந்து வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருந்தேன்.

முட்டையும், பாலும் வைச்சா பாம்பு வெளியில வந்துடும். தவளையைப் போட்டா அதை சாப்பிட வரும். இன்னும் சிலர் இது சாமி பாம்பு இப்படியே பேசிக்கிட்டு இருக்கும் போது மெல்ல வெளியில வந்தார் நம்ம நாகராஜா.


ஒருத்தர் பெரிய மூங்கில் கம்பை எடுத்து ஒரு அடி கொடுத்தார். நான் சும்மா நிற்காம "சின்ன கம்பா இருந்தா அடி உரைக்கும். பெரிய கம்பில் அடி விழாது" என்றேன்.


உடனே சின்ன கம்பு வந்தது. நான் அதை வாங்கி ஒரே அடி அம்புட்டு தான் மண்டை சிதஞ்சிட்டு. எனக்கு ஒரே பாராட்டு தான். பாம்பு செத்துட்டுனு நினைச்சிட்டு இருக்கும் போது தான் பார்த்தேன். அது சாகலை.


செத்த பாம்பு எடுத்தது ஒரு ஓட்டம். மறுபடியும் விரட்டி அடுத்து கொன்றாச்சி.

எல்லாத்தையும் ஜன்னலில் பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்த அம்மா அப்படியே ஆச்சரியத்தில்.


பாம்பை அடிச்சி வீரமா வந்து கதவை திறந்ததும் அந்த அம்மாவுக்கு ஒரே சந்தோஷம்.

"நீ இதுக்கு முன்னால பாம்பு அடிச்சிருக்கியா?"


"இல்லமா. இது தான் முதல் தடவை. உங்களுக்காக தான் தைரியமா அடிச்சேன்"


அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சம் இருந்த பயம் போய் மெதுவா நடக்க ஆரம்பிச்சிட்டாங்க. காலையிலும் சாயங்காலமும் வாக்கிங் போய் நல்லா நடக்க ஆரப்பிச்சிட்டாங்க. நான் அமிர்தபுரி போன நேரம் சுதா மணி அம்மா சிங்கபூரில் இருந்தாங்க.


உடம்பு நல்லா ஆனதும் சுதா மணி அம்மா தான் என்னை அனுப்பி வைச்சதா நினைச்சி சந்தோஷப்பட்டாங்க. திரும்ப கனடாவுக்கே போகப் புறப்பட்டுட்டாங்க. எனக்கு கை நிறைய சம்பளமும் கொடுத்து அவுங்க ஞாபகம் என்னைக்கும் இருக்கிற மாதிரி எனக்கு ஒரு முத்து மாலை வாங்கி கொடுத்து என்னை அனுப்பி வைச்சாங்க.


மீண்டும் என் பயணம் தொடர்கிறது.....

கொச்சின் அனுபவம் - பாகம் 1
கொச்சின் அனுபவம் - பாகம் 2
கொச்சின் அனுபவம் - பாகம் 3
கொச்சின் அனுபவம் - பாகம் 4

கொச்சின் அனுபவம் - பாகம் 4



நான் கவனிக்க வந்த பேஷண்ட்க்கு சொந்த ஊர் கனடா. அங்க ஏதோ ஒரு கம்பெனியில் கம்யூட்டரில் வேலைப் பார்த்துக்கிட்டு இருந்திருக்காங்க. அவரோடக் கணவருக்கும் கனடாவில் தான் வேலை நல்ல வருமானம். பொதுவா உட்கார்ந்தே வேலை செய்கிறவங்களுக்கு முதுகு வலி வரும். அதிலும் பெண்களுக்கு கேட்கவே வேண்டாம். குழந்தைப் பிறந்ததும் அவுங்க உடம்பு ரொம்ப வீக்காயிடுது. ஆனாலும் குடும்பத்திற்காக ரெஸ்டே இல்லாமல் வேலை செய்யும் போது அது உடம்பை படுத்தி எடுக்கும்.


முதுகு வலினுச் சொல்லி ட்ரீட்மெண்ட் எடுத்திருக்காங்க. அதில் எதுக்காகவோ கரண்ட் ஷாக் கொடுத்திருக்காங்க.அப்படி கொடுத்ததில் அவுங்க கை கால் நரம்பெல்லாம் இழுத்து நடக்க முடியாம படுத்த படுக்கையா ஆயிட்டாங்க.


படுத்த படுக்கையா ஆனதும் அதுக்கு வேற ட்ரீட்மெண்ட் எடுத்து சரி ஆயிட்டாங்க. ஆனா அவுங்களுக்குள் ஏற்பட்ட பயத்தை யாராலும் போக்க முடியல. அந்த நேரத்தில தான் அமிர்தபுரி அம்மா சுதா மணி அவர்கள் பிரசங்கத்திற்காக கனடா வந்திருக்காங்க. அவுங்க பிரசங்கத்தைக் கேட்டு அங்கிருந்து அமிர்தபுரி வந்துட்டாங்க.


அமிர்தபுரி வந்தாலும் அவுங்க பயம் மட்டும் போகவே இல்லை. எழுந்து நடமாட முடியாமல் படுத்த படுக்கையிலே இருந்தாங்க.


முதல் நாள் நான் பார்க்கும் போது எனக்கே கொஞ்சம் பயமா தான் இருந்தது. எண்ணெய் இல்லாமல் தலை முடி முகம் தெரியாத அளவுக்கு தாறுமாறா இருந்தது. கை கால் இரண்டும் நல்லா வீங்கி போய் இருந்தது..


கட்டிலைச் சுற்றி அமிர்தபுரி அம்மா படம் தான். தலையணிக்கு கீழ் பக்கத்தில் வேறு எப்ப பார்த்தாலும் யாருக்கும் தெரியாமல் அந்த அம்மா போட்டோவை முத்தம் கொடுத்துக் கொண்டே இருப்பாங்க. அந்த அளவுக்கு அம்மா மேல் நம்பிக்கை.


என்னைப் பார்த்ததும் கேட்ட முதல் கேள்வி நீ என்ன சோப்பு போட்டு குளிப்ப, என்ன பவுடர் போடுவனு தான். அதுக்கு நான் பதில் சொன்னதும் அதெல்லாம் போட்டா என் உடம்பு தாங்காது. நான் ரொம்ப சீரியஸ் கண்டீசன்ல இருக்கேன். எனக்காக அதெல்லாம் போடாதே ப்ளிஸ்ன்னுட்டாங்க....நானும் சரிமா . நீங்க சீக்கிரமா எழுந்து நடமாடுவீங்க. பயப்படாதிங்கனு சொன்னேன். பார்க்க பாவமா தான் இருந்தது.


ஆயிரக்கணக்கில் மருந்து மாத்திரைகள் வாங்கி சாப்பிடாமல் மூலையில் கிடக்கு. எல்லாம் சாப்பிட பயம். முதல் வேலையா எல்லாத்தையும் பார்சல் பண்ணி தெரியாமல் ஒளிச்சி வைச்சிட்டேன்.


எப்படியாவது இவுங்க வழிக்கே போய் இவுகள சரி பண்ணனும். அதான் என் வேலை.


காலையில் கிச்சனில் போய் சாப்பாடு வாங்கி கொடுத்து சாப்பிட வைச்சேன். பதினோரு மணிக்கி அவுங்க கணவர்ட கொஞ்சம் காய்கறி வாங்கி தரச் சொன்னேன்.

"எதுக்கு காய்கறி எல்லாம் இங்க தான் சாப்பாடு தருவாங்களே".


அதுவும் இருக்கட்டும். இதுவும் வேணும்னு சொல்லி வாங்கி வரச் சொன்னேன்.


கேரட்,பீன்ஸ், வெங்காயம், மிளகு சீரகம் போட்டு சூப் வைத்து குடிக்க கொடுத்தேன். ரொம்ப நல்லா இருக்கு தினமும் வைச்சி தரச் சொல்லி சாப்பிட்டாங்க. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா எழுப்பி உட்கார வைச்சாச்சி.பயத்தைப் போக்க நானே எனக்கு தெரிந்த கதைகளை கற்பனையாச் சொல்லி கொஞ்சம் கொஞ்சமா வீல்சேரில் வெளியில கூட்டுட்டு போவேன்.


அம்மா கோயில், காளிக் கோயில் பஜனை ஹால் எல்லாப் பக்கமும் கூட்டிட்டுப் போய் கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு வருவோம். 

"அங்க என்ன கூட்டமா இருக்கு?"

"தெரியலையே ...ம்மா, இருங்க போய் பார்த்துட்டு வாரேன்"

அங்க போய்  ஒருத்தர் கிட்ட  கேட்டேன்.

"என்ன...எதுக்கு கூட்டமா இருக்காங்க?"


"இவ்விடப் பாம்பு போய்... "

"என்னது பாம்பா....எங்க....?"

"அவ்விட "

எதோ பொந்துக்குள் போயிட்டு அது மட்டும் தான் புரிந்தது.

இங்க வந்தா  அந்தம்மா கேக்குறாங்க, 

"என்ன கூட்டம்?"

"ஒன்னும்மில்ல...பாம்பு வந்ததாம்"

 கேட்கனுமா....அய்...ய...ய்...ஒ பாம்பா. என்ன மறுபடியும் பயமா.... 

"முதல்ல நீ கதவைச் சாத்து .ஜன்னலை நல்லா மூடு. பாத் ரூம் ஒட்டையை அடை"


"ஐய்....யோ...அம்மா. அது அங்க தானே வந்தது. அதுக்கு ஏன் இவ்வளவு பயம்".


"அங்க வந்த பாம்பு இங்க வர எவ்வளவு நேரம் ஆகும். உனக்கு தெரியாது. முதல்ல ரூம்ம மாத்தனும் போய் வேற ரூம் புக் பண்ணிட்டுவா"

"சரி..சரி...."


ஆசிரமத்தில் தங்கனும்னா முதலில் ரூம் புக் பண்ணனும். வாடகை ஒரு நாளைக்கு 250/- ருபாயும், சாப்பாட்டுக்கு மாதம் ஒரு ஆளுக்கு 2000/-ரூபாயும் கட்டனும். இவுங்க இருக்கிற ரூம்ல இரண்டு பேர் தங்கலாம். ரூம் போய் கேட்டா எல்லாம் அஞ்சாவது மாடி ஆறாவது மாடியில தான் ரூம் இருக்கு. அங்க போனா லிப்ட் இருக்கு ஆனா இந்த அம்மா மறுபடியும் வெளியில வர மாட்டாங்களே. சரி ஒரு பொய் சொன்னா தப்பில்லைன்னுட்டு  ரூம் ஒன்னும் காலியா இல்லைமான்னு  சொல்லிட்டேன்...

-  தொடரும் (அடுத்த பதிவில்  முடியும்)

கொச்சின் அனுபவம் - பாகம் 1
கொச்சின் அனுபவம் - பாகம் 2
கொச்சின் அனுபவம் - பாகம் 3

கொச்சின் அனுபவம் - பாகம் 3


ஆட்டோவை விட்டு இறங்கியதுமே எனக்கு ஒரே மலைப்பா தான் இருந்தது. பின்ன ஹோம்னு சொன்னாங்க. இங்க வந்து பார்த்தா பெரி.....ய ஆசிரமம். ஹோம்னா பத்து இருபது பேர் இருப்பாங்க. எல்லாரும் கொஞ்சம் வயசானவங்களா இருப்பாங்கனு நினைச்சேன்.

எத்தனை ஏக்கரை வளைச்சி போட்டாங்கனு எனக்கு சரியா சொல்ல தெரியலை. ஆனா மாடியில் இருந்து பார்த்தா இந்த கடைசியில் இருந்து அந்த கடைசி வரை கடல் தான் அளவுகோல்.

வழி நெடுக மரங்களும் செடிகளுமாய் என்னை வா என்று வரவேற்றது. கேட்டு கேட்டு ஒரு வழியா ஆசிரமத்துக்குள் போய்ட்டேன்.

****************

காலைப் பொழுது எல்லாருக்கும் விடிஞ்ச மாதிரி எனக்கும் மிக அருமையாக விடிஞ்சது .

என்ன.....ஒரு கோழி கூவல் சத்தமோ, இல்ல ஒரு காக்கா கரையும் சத்தமோ இல்லாமல்.

சரி..சரி. ... ஒரு ஊர்லயும் கோழி கூவாது, காக்காவுமா கரையாது. அவ்வளவு ஏன் ஒரு பட்சி பறவைப் பறக்கட்டுமே. ம்கூம்.

அவ்வளவு அமைதியான இடம்.

கண்ணுக்கு அழகா கலர் கலராப் பூக்கள் அத்தனையும் செடியில் . பெரிய ,பெரிய மரங்கள். ஒவ்வொன்றும் அண்ணாந்து பார்த்தே கழுத்து சுழிக்கிக்கும்.

கூடை கூடையா மல்லிகைப் பூக்களை ஒரே நேரத்தில் தரையில் கொட்டியதுப் போல் ஆண்களும், பெண்களும் வெள்ளை உடையில் ஒரு இடத்தில் நின்றுப் பேசட்டுமே. ம்கூம்..

காலையிலே துணியெல்லாம் துவைத்து குளிச்சிட்டு. "துணி எங்கம்மா காயப்போட"ன்னு கேட்டா,

"துணிய அப்புறமா காயப்போடலாம். முதல்ல கிச்சன்லப் போய் சாப்பாடு வாங்கனும் லேட் ஆனா சாப்பாடு முடிஞ்சிடும்"ன்னுட்டாங்க

"கிச்சன் இங்க எங்க இருக்கு?"

"ரூம்ல இருந்து கொஞ்ச தூரம் போகனும்"

அங்கப்போய் பாத்தா, கிச்சனா இது. நம்ம வீட்டுலயெல்லாம் ஒரு கேஸ் ஸ்டவ் இல்ல ஒரு கரண்ட் ஸ்டவ் இருக்கும். இது என்னடானா எதோ factory குள்ள வந்துட்டோமோ? எதுக்கும் பக்கத்துலக் கேட்போம்.

"இவ்விடக் கிச்சன் எவ்விட?"

"இதே"

"டிபன் எவ்விட?"

"எவ்விட ஸ்தலம்?"

"தமிழ் நாடு"

"ஒ......வ்.......தமிழ் நாடு"

"ஆமா"

தமிழ் நாடு . தமிழ் என்றுச் சொல்லடா. தலை நிமிர்ந்து நின்னடா. சூப்பர்....

ஒரு வழியா சாப்பாடு கொடுக்கிற இடத்திலப் போய் சாப்பாடு வாங்கிட்டேன்.

சாப்பிட்டு துணியக் காயப்போடலாம்னுட்டு மூன்று இட்லிய சாம்பாரோட சாப்பிட்டு கிளம்பினா

"இப்ப டாக்டர் வர்ர நேரம் அப்புறமா துணிய காயப் போடுமா"

"சரிமா"

ஓகே. நாம துணி துவைத்த நேரம் சரியில்லை.

அப்படி இப்படியும் மணி 12 தொட்டு........

"சரிமா.... இப்ப போய் துணியக் காயப் போட்டு வா. காலையிலே துவைச்சிட்ட"

இப்ப தான் துணிக் காயப்போட நேர கிடைத்தது.

"ஆமா இங்க எங்க காயப்போட?"

"மொட்ட மாடிலப் போய் போடனும்"

"அதுக்கு எப்படி போகனும்?"

"இப்படி நேரா போனா அங்க லிப்ட் ரூம் இருக்கும். அதுல பதினேழாவது மாடி போய் போடனும்"

"என்னது......பதினேழாவது மாடியா? அதுவும் லிப்ட்ல தனியாவா ?"

எங்க ஊர்ல போத்திஸ் ஜவுளிக் கடைக்குப் போனா நாலு மாடி, அஞ்சி மாடி இருக்கும். அங்கேயும் லிப்ட் இருக்கும்.

லிப்ட்ல போகனுனா எப்படியும் கூட குறைந்தது ஒரு அஞ்சி பேராவது வருவாங்க. தனியா போக வேண்டி வராது.

மனசிலே கொஞ்சம் பயம் இருந்தாலும் வெளியே காட்டிக்கிடாம புறப்பட்டாச்சி .

இதுவரை தனியா லிப்ட்ல போவதில்லை. அப்படியே போனாலும் ஒன்னாவது இரண்டாவது தாண்டியதில்லை.

லிப்ட் போய் சுவிட்ச ஆன் பண்ணினா கதவு திறக்கட்டுமே. ம்கூம்.

அலிபாபா குகை மாதிரி எதுவும் சொல்லனுமோ. பட்டனை எத்தன முறை அழுத்தினாலும் குகைத் திறக்கிற மாதிரி இல்லை.

யாவரும் நலம் படத்தில் மாதவன் நியாபகம் தான் வந்தது. ஒருவேளை அப்படி இருக்குமோ.

பதிமூன்றுக்கும், பதினேழுக்கும் எவ்வளவு வித்தியாசம். கணக்கு போடுறதுக்குள் குகை திறந்தது.

ஒருவழியா லிப்ட் ஆன் ஆகிட்டு. பதினேழாவது மாடி. பதினைந்து மாடி வரைக்கும் லிப்ட். அப்புறம் ரெண்டு மாடி படியேறிப் போகனும்.

மாடி ஏறிப் போய் பார்த்தா சுற்றி பெரிய்ய்ய்யக் கடல். ஆமாங்க. சுற்றி கடல். பார்க்க எவ்வளவு பயமா இருந்துச்சி தெரியுமா . காயப் போட்ட துணி காற்றுலப் பறந்தா கடல்ல தான் போய் விழும் போலயே .

வேகம் வேகமா துணியக் காயப் போட்டுட்டு லிப்டுக்கு வந்துட்டேன் . மறுபடியும் லிப்ட் ஒர்க் ஆகல.

பட்டனை அழுத்தி அழுத்தி ஒரு வழியா லிப்ட்ல கீழ வந்தா இடமே மாறி இருக்கு.

ஆமாங்க .....பட்டன் 0 அழுத்தாம 1அழுத்தினால் அது சரியா 1லப் போய் நின்னுட்டு.

மறுபடியும் 0 அழுத்தி புத்திசாலித்தனமா வெளிய வந்துட்டேன்ல. ஹா ஹா.....

"கண்டுப் பிடிச்சி போயிட்டியா. பரவாயில்லயே..... வெரிகுட்"

"கடல் பார்க்க நல்லா இருந்துச்சா?"

"ஆமாம் நல்லா இருந்துச்சி"

"யாருமே அங்க இருக்க மாட்டாங்களே. உனக்கு பயம்மாயில்லையா? சரியா பன்னிரண்டு மணிக்கு ஒரு பருந்து மட்டும் சுற்றிக்கிட்டு இருக்குமே. பார்த்தியாமா?"

"அதையெல்லாம் நான் பார்க்கலை. துணியக் காயப் போட்டுட்டு வேகமா வந்துட்டேன்"

"அப்படி தான் பயப்படக் கூடாது. அம்மா எப்போதும் உன் கூடவே இருப்பாங்க"

இனி பன்னிரண்டு மணிக்கு துணி காயப் போடப்போவேன்.

எங்க நம்ம நினைக்கிறதெல்லாம் நடக்கிறது . இப்ப கூட பன்னிரண்டு மணிக்கு தான் துணிய காயப் போட்டுட்டு வந்தேன். இப்ப கொஞ்சம் கொஞ்சமா பயம் போயிட்டுங்க....

சொல்ல மறந்துட்டேனே . முதல் நாள் லிப்ட் ஏன் ஒர்க்காகலத் தெரியுமா . சொன்னா சிரிக்க கூடாது.

கரண்ட் போய்டு. போய்டு வந்தது. அதான் ஹா...ஹா....ஹா.....

கொச்சின் அனுபவம் - பாகம் 1
கொச்சின் அனுபவம் - பாகம் 2

Wednesday, 26 August 2015

லெட்சுமி



"ஏ.....ய்.....ராதா. உள்ள என்னடிப் பண்ணுதே. அத்தான் வந்திருக்கிறது தெரியாம. நல்லா....கொழுப்பு வைச்சிப் போச்சி" குரல் கேட்டு  எட்டிப் பார்த்தாள் வள்ளி.

என்ன? என்பது போல் கைகளை நீட்டித் தலையிட்டவளைப் பார்த்து

"இந்த பார் வள்ளியக்கா.....எங் குடும்ப விஷயத்தில தலையிடக் கூடாது. சொல்லிப்புட்டேன்" என்றவாறே மறுபடியும்

"ராதா.....ராதா....."

"உனக்கு என்ன வேணும். அவா படிச்சிக்கிட்டு இருக்கா. பேசாமா போ அங்க"

"எம் பொண்டாட்டிப் படிச்சா எனக்கு தானே பெருமை அவ படிக்கட்டும். வேண்டாங்கல. ஆனா என்னைக்கு ஆனாலும் அவ தான் என் பொண்டாட்டி"

"ஆமா பொண்டாட்டியாம் பொண்டாட்டி" இவள் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்த  ராதா தாவாக்கட்டையில் இடித்துக் கொண்டாள்.

"பின்னே இல்லையா?"

"ஐயோ கிட்ட வந்தாலே சிகரெட் நாத்தம் தாங்கல"

"அத்தானப் பார்த்து அப்படி சொல்லாத செல்லம். சத்தியமா...உன் தலையில அடிக்க நான் சிகரெட் குடிக்கல. மத்தவங்களுக்கு வாங்கியாந்து கொடுத்தேன் அதான் இந்த  நாத்தம்"

"முதல்ல போய் குளி"

"இன்னைக்கி லோடு அவ்வளவா வரலை. அதான் சீக்கிரமா உன்னையப் பார்த்துட்டு போகலாமேனு வந்தேன்" கொஞ்சலோடு குரல் ஒலித்தது.

"சரி...சாப்பிடுதியா....?" வள்ளி இருவருக்கும் இடையில் வந்தாள்.

"என்ன சாப்பாடு. எம் பொண்டாட்டி வைச்சதா?"

"இங்க பாரு அவளை பொண்டாட்டி பொண்டாட்டினு சொல்லிக்கிட்டு திரிஞ்ச. அப்புறம் அவளை யாருமே கட்டிக்க மாட்டாங்க பார்த்துக்கோ"

"நான் கட்டிக்கிறேன். நீ ஏன் கவலைப் படுதே வள்ளி"

"அடி வாங்கப் போற"

"நீ அடிக்கா. எவ்வளவு வேணுனாலும் அடிக்கா. யாரும் கேட்பா உன்னைய"

"சரி, சரி..... இன்னைக்காவது சீக்கிரமா வீட்டுக்கு போ" விரட்டுவதில் வள்ளி குறியாய் இருக்க,

"வீட்டுல போய் என்ன செய்ய. இங்கையாவது கொஞ்ச நேரம் சந்தோஷமா இருந்துட்டு போறேனே" என்றபடி கால் மடித்து உக்கார்ந்தாள் லெட்சுமி,

பாவம்.....இந்த பிள்ள. இவ்வளவு சின்ன வயசில் எவ்வளவு பெரிய பொறுப்பை ஏத்துருக்கு. பார்க்கிறவங்க எல்லாருடைய அனுதாபத்துக்கும் சொந்தக்காரி இந்த லெட்சுமி.

லெட்சுமியோட  பதிமூன்று வயதில்  நிறைய கடனை மட்டும் வைச்சிட்டு அவள் அப்பா டிபி நோயில் இறந்துட்டார்.

அம்மா வீட்டு வேலைச் செய்தாங்க. மூணு  பேருக்கு சாப்பாட்டுக்கே காணாது. கல்யாண வயதில் இருக்கும் அக்காவ  கட்டிக் கொடுக்கனும். கடனை அடைக்கனும்.

லெட்சுமி பார்க்க பையன் மாதிரி தான் இருப்பாள். இடுப்பில் பாவாடையும் ,மேல் சட்டையுமா. மெல்லிய உடல்வாகு. கம்பெனி வேலைக்கு காலையில் போனா சாயங்காலம் வரைக்கும் வேலை இருக்கும். சம்பளம் தினக்கூலி ஐஞ்சி அல்லது ஆறு ரூபாய்.

அதை வைச்சி என்ன செய்ய.

அப்ப தான் மூடைத் தூக்கிறவங்களுக்கு ஒரு சங்கம் வைச்சாங்க. சங்கத்து மூலமா தான் மூடை இறக்கவோ ஏற்றவோ செய்யனும்.

லெட்சுமி அங்கு தான் வேலைக்கு சென்றாள். சங்கத்து ஆட்களுக்கு டீ, காபி வாங்கி கொடுக்க. யாரு கேட்டாலும்  சிகரெட் ,பீடி வாங்கி கொடுக்கனும். கை நிறைய சம்பளம் . ஆண்களுடன் உண்டான வேலை. அதனால் தன்னையும் ஒரு ஆணாகவே நினைத்து கொள்வாள்.

பக்கத்தில் தான் ராதாவின் வீடு . சில நேரம் தண்ணீர் குடிக்க பாத்ரூம் போக என வரும் போது ராதையையும், அவள் அக்காவிடமும் கேலிக் கிண்டல் பேசுவாள்.

வேலைக்கு  சேர்ந்த கொஞ்ச நாள்லயே மூடை தூக்கவும் பழகிட்டாள். இவ்வளவு சின்ன வயசில் அதுவும் பொம்பளப் பிள்ள எப்படி மூடை தூக்குவாள்?

அது தான் அதிசயமே.

ஆச்சரியமா பார்த்த கண்கள் கொஞ்ச நாளில் சந்தேக பார்வை பார்க்க ஆரம்பிச்சிடுச்சி.

லெட்சுமி ஆணா, பொண்ணா. ஆளாளுக்கு நேராவே கேட்டுட்டாங்க.

"ஏண்டி... இன்னும் வயசுக்கு வரலையா?

"இப்ப என்ன உங்களுக்கு தெரியனும். நான் ஆணா பெண்ணானு தானே. கவலைப் பட வேண்டியவங்களே படலை. நீங்கப் பட்டு என்ன ஆகப் போகுது. உங்க வேலையப் பார்த்துட்டு போங்கம்மா"

நடக்குறத எல்லாம் லெட்சுமி ராதை வீட்டில் சொல்லி அழும் போது பாவமா இருக்கும். ராதையை அவளுக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா ராதை அவளிடம் அதிகம் பேசுவது கிடையாது. எப்பவும் அவள் மீது அடிக்கும் சிகரெட் நாற்றம் தான் காரணம்.

இந்த நாற்றத்தில் இவ்வளவு கதை இருக்கானு ரொம்ப நாளைக்கு அப்புறம் தான் ராதை தெரிந்து கொண்டாள். காலம் அதுபாட்டுக்கு ஓடிடுச்சு.

இப்ப ராதைக்கு கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தைக்கு தாய் . மூத்தப் பிள்ளையை ஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போகும் போது தான் அவளைப் பார்த்தாள்.

தன்னை இடிக்கிற மாதிரி வந்து நின்ற பைக்கின் பின் ஸீட்டில் இருந்து கையில் குழந்தையுடன். அட...நம்ம லெட்சுமி.

"ஏ...ய்.. ரா...தா...எப்படி இருக்கே. இது நம்ம பிள்ளையா. அப்படியே என்னைப் போலவே இருக்கு" சொன்னதோடு கண்சிமிட்டினாள்.

"உ...ன்...னை...ய..கொல்லப் போறேன் பாரு" அடிக்க ராதை கை ஓங்க, இருவரும் கலகலவென்று சிரித்தனர்.

அவள் புருஷன் பக்கத்தில்....ஞே என்று நடப்பது என்ன என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தான்.

Monday, 24 August 2015

வெஜிடபுள் ராகி கட்லெட்




1கப் ராகி மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி கொதிக்கும் நீரில் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்தில் கெட்டியாகப் பிசைந்து வைத்துக் கொள்ளவும். 

முட்டைக் கோஸ்,கேரட், பீன்ஸ், காலிப்ளவர் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணெய். ஊற்றி பட்டைக் கிராம்பு, பெருஞ்சீரகம் போட்டு பொறிந்தும் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு வதக்கவும். 

வெங்காயம் வதங்கியதும் தக்காளியை வெட்டிப் போட்டு வதக்கி சிறிது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி அத்துடன் வெட்டிய காய்கறி கலவையுடன் பட்டாணி சேர்த்து வதக்கி சிறிது நீர் தொளித்து முக்கால் பதத்திற்கு வேக விடவும். 

கரம் மசலா, வற்றல் பொடி, மஞ்சள் பொடி உப்பு கலந்து கெட்டியானதும் மல்லி இலை, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி போட்டு ஆற விடவும். 

ஆறியதும் பிசைந்து வைத்த ராகி மாவில் போட்டு பிசைந்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சிறிது சோளமாவு அல்லது மைதாவுடன் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.

ராகி கலவையை வடையாகத் தட்டி சோளமாவு கரைசலில் முக்கி எடுத்து காய்ந்த ப்ரட் தூளில் புரட்டி எடுத்து தோசைக் கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் விட்டு மொறு மொறுப்பாக வேக விட்டு எடுக்கவும்.

வித விதமான வடிவிலும் செய்து அசத்தலாம் தக்காளி ஜாஸ்ஸுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

கொச்சின் அனுபவம் - பாகம் 2



எர்ணாகுளம் to அமிர்தபுரி
.......................................................

அப்பாடா.......ஒருவழியா எர்ணாகுளம் வந்து புக்கிங் ஆபிஸ்சர் சொன்ன பஸ்ல ஏறி உட்கார்ந்துட்டேன்.

நான் எந்த நடத்துனர் கிட்ட அட்ரஸ்ச காட்டிக் கேட்டேனோ அவர் தான் நான் போகும் பஸ்சுக்கு நடத்துனர்.

அப்பாடா .. நான் தப்பிச்சேன். அவருக்குக்கோ தமிழ் தெரியாது. எனக்கோ மலையாளம் தெரியாது .....எப்படி...

குருவாயூர் அப்பன் காப்பாற்றிட்டான்.

காயன் குளம் வந்து இறங்கையில் மணி 8.30 pm. அட இந்த ஊர் பஸ்டாண்டு என்னவோப் பெருசா தான் இருக்கு. ஆனா கரண்ட் மட்டும் இல்ல.

எனக்கு இருட்டுனாலே கொஞ்சம் பயம். ஆனாலும் அங்கேயும், இங்கேயுமா கொஞ்சம் லைட் கண்சிமிட்டியது.

பக்கத்தில இருந்தவர்ட இந்த பஸ் "அமித்புரி" போகும். (மலையாளம். தெரிஞ்சவங்க-) மன்னிக்கவும்.

பஸ்ல போனா அஞ்சி ரூபா  சார்ச். ஆட்டோல போனா கூடுதல் சார்ச். யோசித்துப் பார்த்தேன் . இங்கேயே இருட்டு கசமா இருக்கு. "அமிர்தபுரி" எப்படி இருக்குமோ?

எதற்கு வம்பு. பஸ்டாண்டுல பஸ்ச நிப்பாட்னா ஆசிரமத்திற்கு போகனுமே. சரி இவ்வளவு தூரம் வந்தாச்சி. முக்கா கிணறு தாண்டியாச்சி இனி என்ன பாத்துக்கிடுவோம்.

ஆட்டோக்காரர்ட போய் "அமிர்தபுரி ஆசிரமம் போகனும்".

"இருநூறு ருபாத் தரனும்"

"நான் நூற்றி ஐம்பது தர்றேன்"

"இல்லமா ..பகல்ல முன்னூறு வாங்கும். இராவுக்கு தான் கேட்டேன்"

வேற வழியில்லை.

"சரி இருநூறு தரும்"

ஆட்டோ புறப்பட்டது. கொஞ்ச தூரம் வரை ஏதோ கொஞ்சம் வெளிச்சமா இருந்துச்சி.....

ஆட்டோ போய்க்கிட்டே இருக்கு.... கரும் இருட்டில் .....டபக்....டபக்...டபக்.... என்ன சத்தம் ....என் இதயம் தாங்க துடிக்கிறது...

பாஷை வேறத் தெரியாது. ஆட்டோக்காரர் பெரிய மீசை வேற வைச்சிருக்காரு. கடவுளே என்னைய மட்டும் காத்து.....

கொஞ்ச அமைதியாப் போன ஆட்டோ எடுத்து பாருங்க ஒரு வேகம்.

இன்றைக்கு நான் செத்தேன் .கடவுளே சொந்த ஊர விட்டு வந்து பிழைப்புக்காக யாருக்குமே தெரியாம அனாதையாவா நான் சாகனும்.

என்ன ஆனாலும் சரி தைரியத்த மட்டும் விடக் கூடாது. எங்க நாம தைரியமா இருந்தாலும் அப்ப தான் ஆந்தையும், நாயும் ஒன்னா கையப் பிடிச்சிக்கிட்டு பாட்டு பாடுதுக .. அமைதியா பேசாம இருந்தா தானே பயம். எதையாவது பேசிகிட்டேப் போவோம்.

"அண்ணே ரோடல்லாம் ஏன் இருட்டா இருக்கு?"

"இது முனிசிபால்டி ஏரியாமா"

ஆட்டோக்காரர் என்னை அம்மானுச் சொன்னதுல கொஞ்சம் தைரியமா இருந்துச்சி.

"எல்லாரும் விடியற்காலை நாலு மணிக்கெல்லாம் வேலைக்குப் போறவங்க. அதனால சீக்கிரமா தூங்கிடுவாங்க"

என் மகா ஊர்லயும் இப்படித் தான். சீக்கிரமா தூங்கிடுவாங்க. பிறகு நம்மள மாதிரி மூணு மணி வரைக்கும் இராப்பாடியாவா (கூர்கா) இருப்பாங்க.

"சரிமா .... இங்கே இருந்து ஒரு அஞ்சி கிலோ மீட்டர் உள்ளப் போனா ஆசிரமம் வந்துடும். பேக் ரெண்டும் வெயிட்டா இருக்கா?"

வெயிட்....டா ..... என்னச் சொல்லுதார்னு புரியலையே.....

"இல்லமா. பேக்கத் தூக்கிட்டு நடந்துடுவியானுக் கேட்டேன்"

"நடக்கனுமா....எதுக்கு? ஆசிரமத்தில கொண்டு விட மாட்டிங்களா?"

சும்மா ஒரே இருட்டா அங்கேயும் இங்கேயுமா நட்சத்திரம் மாதிரி மின்னுது. இதில் அஞ்சி கிலோ மீட்டர் நடக்கனுமா.

எனக்கு பயத்துல கண்ணக் கட்டிக்கிட்டு தலையெல்லாம் சுற்ற ஆரம்பிச்சிட்டு.

"இல்லமா இங்க இறங்கினா ஒரு பாலம் வரும் அதில போனாப் பக்கம்"

"நான் ஊருக்கு புதுசு ...ண்ணே.... எனக்கு இங்க வழியெலாம் தெரியாது. தயவுசெய்து நீங்களே என்னைப் பத்திரமா கொண்டு விட்டுடுங்க"

பாலத்துக்கு ஒரு பக்கம் கடல். மறுப்பக்கத்தில் கடல் தண்ணி ஒரு இடத்தில மீன் பிடிக்கும் போட்டெல்லாம் நிற்கும் .

ஆஹா.....எனக்கு இருட்டுனாலேப் பயம். அதிலேயும் இருட்டுல தண்ணீ.......

"தண்ணீயா.....கட......ல்"

என்னைய விட்டா சொந்த ஊருக்கேப் போயிடுவேன். ஆனா ஒத்தையில் அதுவும் இருட்டுல கடல் பக்கமா.

"அண்ணே.... நல்லா இருப்பிக.....என்னைய அந்தண்ட. கொண்டுப் போய் விட்டுடுங்க"

"அப்போ கூட ஐம்பது ரூபாக் கொடுக்கனும்"

"சரி....ண்ணே.... தாறேன். போங்க"

நமக்கு அம்பது ரூபாயா பெருசு......

டிக்.......டிக்.......டிக்........டிக். ஐயோ இந்த "கந்த சஷ்டி "கவசத்த எங்க வச்சேன்னு தெரியலையே....

ஆ.........கடல்....ஐயோ...இந்த காத்து வேற  பேய்த் தனமா அடிக்குதே .....

ராராரா ரிரிரி ரிரி லுலுலு ச்சே பயத்துல கவசம் கூட சொல்ல வர மாட்டுக்குதே.

"அந்த பக்கமா போனா பாலம் உண்டு. அதில ஆட்டோ போகாது. சின்ன பாலம் அகலம் குறைச்சி உண்டு. ஆனா நடக்கனும்"

"புதுஷாயிட்டு வரும் போது தனியா வரக்கூடாது. வேறு யாரும் இன் நேரத்துக்கு வராது. நான் உனக்கு அண்ணன் மாதிரி. என்மேல் பயம் வேண்டா. எனக்கு கொஞ்சும் தமிழ் அறியும்"

"உங்க தமிழ்நாடு பயம் உண்டு. இங்க எல்லாரும் நல்லவர்"

ஆஹா சந்தடி சாக்கில உண்மையெல்லாம் சொல்லுதாரே. நம்ம பயத்த வெளியிலக் காட்டிக்கக் கூடாது.

அங்க இங்க திரும்பாம ஒரே நேர் பார்வையில் கண்கள் இரண்டும் ஆசிரமத்தைத் தேடியது.

என் மகன் கூட இராமேஸ்வரம் போனப்ப நல்லா இருட்டிட்டு.

"வாங்கம்மா. கடல் கிட்ட போகலாம்"

"இருக்கட்டும் . காலையிலப் பாத்துக்கிடலாம்"

நம்ம பயம் அவருக்கு எப்படித் தெரியும்.

ஒருவழியா அந்த முருகப் பெருமாள் கண்திறந்துப் பாத்துட்டார். ஆமாங்க .....

அமிர்தபுரி ஆசிரமம் வந்துட்டு......ஹய்யா.

அமிர்த்புரி மர்மம் தொட.......ரு.......ம்.


கொச்சின்  அனுபவம் - பாகம் 1 

Sunday, 23 August 2015

வாழைப் பூ சூப்



வாழைப் பூவை இதழ் விரித்து நரம்பு நீக்கி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும் 

கடாயில் 2,ஸ்பூன் எண்ணெய் விட்டு 4பல் பூண்டை உரித்துப் போட்டு நன்றாக வதக்கவும். 

சின்ன வெங்காயம் 5,6 நறுக்கிப் போட்டு அதையும் சேர்த்து வதக்கி 2 தக்காளி வெட்டிப் போட்டு வதக்கி நரம்பு நீக்கிய வாழைப் பூவை நறுக்காமல் அப்படியே போட்டு வதக்கவும்.

எல்லாம் வதங்கியதும் மஞ்சள் பொடி , மிளகு பொடி கறிவேப்பிலை , மல்லி இழை, பிரியாணி இழை விருப்பம் இருந்தால் சோம்பு .சேர்த்து ,3 டம்பளர் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். 

வாழைப் பூ நன்கு வெந்ததும் உப்பு சேர்த்து பருகவும்.

காலையில் Bread or Bun னுடன் சாப்பிடலாம். கொலஸ்ட்ரால், நீரழிவு நோய்க்கு மிகவும் அரும் மருந்து. சிறுநீரகத்தில் உள்ள கல்லைக் கரைக்க வல்லது.





கொச்சின் அனுபவம் - பாகம் 1



சென்னை To கொச்சின்
........................................................


ட்ரீங் ........ட்ரீங் .......ட்ரீங் .......

"ஹாலோ......யாருங்க?. மேடம்...?"

"ஒரு பேஷண்ட் கேர் வந்திருக்கு, நீங்க பாக்க முடியுமா மேடம்?"

"எந்த..ஊர். மா?"

"பேஷண்ட்க்கு ஊர் "கொச்சின்" மேடம்"

"ஓகே மா. எப்ப கிளம்பனும்மா?"

"நாளைக்கு காலையில் 7.30க்கெல்லாம் அண்ணாநகர் வந்துட்டிங்கன்னா கொச்சின் அட்ரஸ்ச வாங்கிட்டு கிளம்பிடலாம்"

"ஓகே. மா....ஆனா பகல்ல ட்ரவல் பண்ணுறத விட நைட்னா நல்லா இருக்குமே மா"

"அப்படினா. ..நீங்க நைட்டே கிளம்புங்க மேடம்"

"ஓகே மா" என்னோட  கொச்சின் பயணம்  இப்படி  தான்  ஆரம்பிச்சது.

"கொச்சின்" எனக்கு பதினைந்து பதினாறு வயது இருக்கும் போது போனது. பெரிய ஐயா கார் வாங்கினப் புதுசுல கொல்லம்,கொச்சின்,எர்ணாகுளம், திருவனந்தபுரம் எல்லாம் கூட்டிட்டுப் போனாங்க.

கிட்டத்தட்ட முப்பது முப்பத்தி ஐஞ்சி வருஷம் இருக்கும். அதற்கு பிறகு இப்ப தான் கொச்சின் போகுற வாய்ப்பு கிடைச்சிருக்கு.

மூட்ட முடிச்சியக் கட்டிக்கிட்டுப் புறப்பட்டாச்சி.

கோயம்பேடு போய் கொச்சின் பஸ்ஸத் தேடுனா இப்ப பஸ் இல்லையாம். அப்ப எப்படி கொச்சின் போகிறதுனுக் கேட்டா கோயமுத்தூர் போனா அங்க அடிக்கடி. பஸ் இருக்குனுச் சொல்லிட்டாங்க.

சரினு..கோயமுத்தூர் பஸ் ஏறி கோயமுத்தூர் போய்ட்டேன். அங்க போய்

"அண்ணே....இங்க கொச்சின் பஸ் எங்க வரும்?"

"கொச்சின் பஸ் இங்க வராதுமா. நீங்க "5 நம்பர்" பஸ்ல ஏறி "உக்கடம் " போனிங்கனா அங்க நிறைய பஸ் உண்டு"

"தேங்யூ ...அண்ணே"

5ம் நம்பர் பஸ்ல உக்கடம் போயாச்சி.. இங்க கொச்சின் பஸ் எங்க நிற்குதுனு தெரியலையே.......

பக்கத்தில் நின்றவர்ட போய் "சார் இங்க கொச்சின் பஸ் எங்க வரும்"

"இவ்விட கொச்சின் பஸ் இல்லா...... பாலக்காடு. பஸ் உண்டு. அவிடப் போய் கொச்சின் உண்டு....".

"ஆஹா. .....இது ........மலையாளம் .? இங்கேயே..... மலையாள...மா?"

இது சரிவராது...... ஆட்டோ டிரைவர்ட போய் "இங்க கொச்சின் போகிறப் பஸ் எங்க நிற்கும்?"

"அதுக்கு காந்திபுரம் பஸ்டாண்டுலா போகனும்"

"இல்ல..இங்க தான் வரும்னுச் சொன்னாங்க........"

"இங்க பாலக்காடு ,திருச்சூர் பஸ் வரும். அங்கப் போய் கொச்சின் போலாமே".

இங்கேயே. மலையாளம் பறையுதாங்க. எனக்கு சுத்தமான மலையாளம் தெரியாது. இதுல பாலக்காடுப் போய் பாஷைத் தெரியாம விழிக்கவா ....வேண்டாம்........ இந்த விபரீதப் பரீட்சை .....

"கொச்சினுக்கு த்ருவா இங்கிருந்து பஸ் கிடையாதா அண்ணா"

"காந்திபுரம் போன அடிக்கடி பஸ் உண்டுமா"

"தயவுசெய்து காந்திபுரத்தில கொஞ்சம் விட்டுடுங்க ...ண்ணே..."

ஆட்டோக்காரர் பத்திரமா காந்திபுரம் பஸ்டாண்டுல விட்டுவிட்டார்.

அட .....இங்கே இருந்து தான்னே உக்கடம் வந்தேன். இது தான் காந்திபுரம் பஸ்டாண்டா.

"இங்க அடிக்கடி கொச்சினுக்கு பஸ் உண்டுமா"

"தேங்யூ.....ண்ணே......"

இனியார்டையும் கேட்கக் கூடாது. நேரா புக்கிங் ஆபிஸ்ல போய் "சார் கொச்சின் பஸ் எப்ப வரும்?".

"இன்னும் கொஞ்ச நேரத்தில வரும்...மா"

"தேங்யூ சார்"

"கோயமுத்தூர்"என் வாழ்க்கையில என்னைக்குமே மறக்க முடியாத ஊர். அப்படியே பழைய நினைவுகளை நினைத்துப் பார்துக்கிட்டு இருக்கும் போதே பஸ் வந்துட்டு.

திருச்சூர் ,பாலக்காடு ,எர்ணாகுளம் .....

"இது கொச்சின் போகுமா....?"

"கொச்சினுக்கு த்ருவா பஸ் இல்லா... எர்ணாகுளம் போய் அங்கிருந்து கொச்சின் பக்கம் தான்".

சரி... இத விட்டா வேற பஸ் இருக்கோ இல்லையோ. தெரியலை. பேசும எர்ணாகுளம் போய் பாத்துக் கொள்ளலாம்.

என்ற குருவாயூர் ...அப்பா .....நீயே ...துணை.

முதல்ல கொச்சின் போனதும் மலையாளம் அறியனும்.

அப்படி இப்படினு எர்ணாகுளம் வந்துட்டேன்.

வயிற்றில் பூச்சிக்கடிக்க ஆரம்பிச்சிட்டு . பின்ன காலையிலெ ரெண்டு இட்லியும் ,ஒரு வடையும் சாப்பிட்டது. அப்ப பசிக்காது.

முதல் வேலையா ரெண்டு ஆப்பம் கடலைக்கறியோடு சாப்பிட்டுட்டேன்.

சாப்பாடு முடிந்ததும் மீண்டும் கொச்சின் நோக்கி பயணம்.

அங்க நின்ற பஸ் நடத்துனர்ட கொஞ்சம் தைரியத்த வர வச்சிக்கிட்டு கைல இருந்த அட்ரஸ்ச காட்டிக் கேட்டேன்.

பாவம்.....அவருக்கு ஒன்று புரியவில்லை. ஏன்னா ......அட்ரஸ் தமிழ்லயும், ஆங்கிலத்திலும் இருக்கு....

பழையபடி புக்கிங் ஆபிஸ்லயே கேட்டேன். அவரும் கொஞ்ச நேரம் யோசித்துப் பாத்துட்டு இந்த அட்ரஸ் கொச்சின் இல்ல "கொல்லம்"

ஆஹா....கொல்லமா?.

அட்ரஸ்; காயன் குளம், அமிர்தபுரி. மாதா அமிர்தானந்தமாயி ஆசிரமம்.

அட்ரஸ் கொடுத்தவர் "கொச்சின்ல இருந்து காயன்குளம் போனா ஆட்டோக்காரர்டச் சொன்னா போதும் கொண்டு விட்டுடுவார்." ன்னு  தான  சொன்னார்..

மொழியும் தெரியாம ,சரியான ஊரும் தெரியாம வந்தா இப்படி தான். எதோ நான் கொஞ்சம் தைரியசாலியா இருக்கப் போய் பரவாயில்லை?


- தொடரும்



******** பூங்கோதை*********

Saturday, 22 August 2015

கீர்த்தனாவும் மகாவும்



கொஞ்ச நாளாவே கீர்த்தனாவுக்கு வீட்டில் இருப்பு கொள்ளவில்லை. எங்கயாவது கொஞ்ச நாளைக்கி போயிட்டு வந்தா நல்லா இருக்கும்.

க்கும்...எங்க போக. ....எங்க போனாலும் மனசு பாரம் என்ன குறையவா போகுது - அலுத்துக் கொண்டாள்.

"ஆசை ஆசையா வளர்த்த பிள்ளை. பெத்த பிள்ளைக்கு மேல் பாலும் சோறுமா கொடுத்து மடியிலயே போட்டு வளர்த்தேனே. இதுகளுக்கு என்ன குறை வச்சேன். ஆசைப் பட்டதெல்லாம் செஞ்சிப் போட்டேனே எதுக்கு இப்படி அற்ப ஆயிசுல போறதுக்கா. எனக்கு கொடுத்து வைக்கலை அவ்வளவு தான் யாரைச் சொல்லி என்ன செய்ய" வாய் ஓயாம புலம்பிட்டே இருந்தா.

பின்ன, ஒன்னா ரெண்டா இதோட நாலு பேர் ஆச்சி. ஒவ்வொன்னையா குழிக்குள்ள போட்டாச்சி. யாரு கண்ணுப் பட்டதோ தெரியலையே... 

"மேலத் தெரு கருப்பாயி சொன்னா புள்ளைய வெளியில விடாதேனு.  வீட்டுல நம்ம பேச்சை யாரு கேட்கா... வெளியில போய்டு வந்தா தான் ஆரோக்கியமா இருக்குமாம். இப்படி வெளில விட்டு அவா சொன்னதுப் போலேயே ஆயிட்டு.
இந்தா போச்சா மொத்தமா அள்ளிக் கொடுத்தாச்சி இல்ல". புருஷனுக்கு ரெண்டு திட்டு. பிள்ளைக்கி பிள்ளையா வளர்த்த கதிர் செத்ததில் இருந்தே இப்படி புலம்பிக்கிட்டு இருக்கா.

கதிர் எப்படி செத்தான். யாருக்கு தெரியும். எதோ புட் பாய்ஸனாம்.. கீர்த்தனா ஆக்கிப் போட்டதை தின்னுக்கிட்டு அவ முந்தானையப் பிடிச்சிக்கிட்டே திரிவான். வெளியில போய் கண்டதையும் தின்னு புட் பாய்ஸன்ல போய்ட்டான்.

"சரி....சரி... இப்படியே புலம்பிக்கிட்டு இருக்காம நடக்குர வேலையப் பாரு. போனதுகப் போயிட்டு. புலம்பினா மட்டும் வந்துடவா போகுதுக" சொன்ன புருஷன் மேல கேவமா தான் வந்தது. கோவப் பட்டு என்ன செய்ய.

நாட்கள் ஒடிட்டு. செத்தவங்களுக்கு தான் எவ்வளவு வேகமா நாட்கள் போகுது.
*********

"கீர்த்தி....கீர்த்தி....."

"யாரு.... சேலைக்கார அக்காவா. என்னக்கா...ஆளையே காணும். எப்படி இருக்கிக"

"எனக்கு என்ன.... நான் நல்லா இருக்கேன். எம் மகா தான் ரெட்டைப் புள்ளைய பெத்து போட்டு இருக்கா. அதுகள பார்த்துக்கிடுறது தான் பெரிய வேலையா இருக்கு"

"என்ன...ரெட்டைப் புள்ளயா.ஆணா பொண்ணாக்கா" கீர்த்தனா குரல்ல உற்சாகம் தெரிச்சிச்சி.

"ஆண் ஒன்னு பொண்ணொன்னு . ஏன் கேட்கிற"

"இல்ல.... அதில ஒரு பிள்ளய எனக்கு தருவியாக்கா. நான் நல்லா பார்த்துப்பேன்". கொஞ்சம் யோசனையோடே போனாள் சேலைக்காரக்கா.

ரெண்டு நாளா சேலைக்காரக்கா தெருவுக்குள் வரவில்லை. மூனாவது நாள் ரெண்டு மாத குழந்தைய யாருக்கும் தெரியாம கொண்டு வந்து கொடுத்தாள். பத்திரமா பார்த்து கொள் என்று.

மான் நிறத்தில் பொசு பொசுனு முடியோடு கண்ண உருட்டிக்கிட்டு அழகான பெண் பிள்ளை.

மகா என்ற மகாலட்சுமி. ஒரு மகாராணி மாதிரி வளர்ந்தாள். பிடிச்சதெல்லாம் செஞ்சிக் கொடுத்து வீட்டுக்குள்ளே யார் கண்ணும் பட்டு விடாமல் மாடியில் தனி ரூம் கொடுத்து சகல வசதியோடு தள தளனு வளர்ந்து நிக்கிற மகாவுக்கு வரிசையா மாப்பிள்ளை வீட்டார் வந்த வண்ணமா இருக்க. மகா அவளுக்கு பிடிச்ச மாப்பிள்ளைய அவளே தேர்வு செய்து இன்று நிறை மாத கர்ப்பிணியாய் நிற்கிறாள்.

****************

ரெண்டு நாளாவே மகா முகத்தில் ஒரு கலவரம். சரியா சாப்பிடாம தூங்காம உளத்திக் கொண்டு இருந்தாள்.

மகாவை விட கீர்த்தனா தான் ரொம்ப பயமாய் இருந்தது. அப்ப அப்போ வயிற்றை தடவிக் கொடுத்து ஆறுதல் சொன்னாள்.

இரவு மணி சரியா ஏழு இருபதுக்கு மகா ரெட்டைப் பிள்ளகளைப் பெற்றெடுத்தாள். அவா அம்மா மாதிரியே ஆண் ஒன்னு பொண்ணென்னாய்.

கீர்த்தனா சந்தோஷத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தாள். ஒன்றுக்கு ரெண்டாய் கிடைத்த மகாவின் குட்டிகளை தன் மடியில் வைத்து கொஞ்சினாள்.

அடக் கெரகமே....ஒரு நாய்க்கு வந்த வாழ்வைப் பாருங்க. பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளிக் குதிச்சானாம் அந்த கதையால்லா இருக்கு . ஊருக்குள் மாமியாகாரி புலம்பி தீர்த்தாள்.

*************

பிள்ளைகள் வளர ஆரம்பிக்கும் போது வீட்டுக்குள்ளயே வளர்ந்த மகா கீர்த்தனாவுக்கு தெரியாம வீட்டை விட்டு வெளியில் போனாள்.

வந்தது வினை. வெளியில போயிட்டு வந்த மகா ஒரே வாந்தி . கண்ண சொருக்கி கிட்டு ஒரு மாதிரியா வந்தாள். ஏன் எதுக்குனு தெரியலையே . ஆட்டோ பிடிச்சி டாக்டர்ட போய் காட்டினா புட் பாய்ஸனாம்.

வீட்டுக்குள் இருக்கும் போது வராத நோய். வீட்டை விட்டு வெளியில போனா எப்படி வருது . அதுவும் கொஞ்ச நேரத்தில்.

"அட கடவுளே .....இது என்ன கொடுமை. எம் மகாவுக்கு எதுவும் ஆகக்கூடாது. குட்டிகளைக் கொடுத்துட்டு பெத்தவளைப் பிரிச்சிடாதே. எப்படியாவது மகாவைக் காப்பாற்று"

"மகா யார் எதைக் கொடுத்தாலும் சாப்பிட மாட்டாள். அப்ப எப்படி புட் பாய்ஸன் ஆச்சி". எப்படி கேள்வி கேட்டாலும் பதில் மட்டும் கிடைக்கவே இல்லை. 

உடனடியா கொடுத்த ட்ரிட்மெண்டில் மகா எழுந்து நடமாட ஆரம்பித்தாள். கீர்த்தனாவைப் பார்த்த பார்வையில் இனி வீட்டை விட்டு போக மாட்டேன் மா என்பது போல்.

கீர்த்தனாவுக்கும் எப்படியோ நிம்மதியும் சந்தோசமும். பின்ன இருக்காது. எமன் கிட்ட இருந்து தப்பி வளர்ந்தவள் இல்ல இந்த மகா என்ற மகாலட்சுமி.

********************

ஒரு வாரம் போயிருக்கும்.

"பக்கத்து வீட்டு முருங்கைக்காய் எவ்வளவு காய் காய்ச்சிருக்கு பார்த்தியா. ஒரு ஆள் உயரத்துக்கு நீளமா. எப்படி ?"

மீரா மாமி தான் சொன்னாள்,  அவுங்க வீட்டுப் பக்கம் போகும் நாய்களுக்கு சாப்பாட்டில் பாய்ஸனைக் கலந்து கொடுத்து பிறகு மரத்துக்கு உரமாக வைப்பதை. அப்படி வச்சா மரம் தளதளன்னு வளர்ந்து நிறைய காய் காய்க்குமாம். 

இப்படி தான் என் கதிரும் மற்ற பிள்ளைகளையும் இழந்தேனா. நினைக்கவே கொடுமையான செயலை செய்பவர்களும் நம்ம நாட்டுல இருக்க தான் செய்றாங்க. அவர்களை அந்த கடவுள் தான் கேட்கனும் .


அத்தைப் பையன்



நான் பிறந்ததுமே என்னோட அத்தை மகன் தான் எனக்கு புருஷன்னு பெரியவங்கல்லாம் முடிவு பண்ணிட்டாங்க. என்னோட அத்தை மகனை சின்ன வயசில் இருந்தே நான் பார்த்தது கிடையாது. ஆனா அவர் தான் என்னோட வருங்காலப் புருஷன் என்கிற நினைப்பில் என்னை ஒரு தலையா காதலித்தவர்களை எல்லாம் அலைய விட்டுட்டேன். 

அன்னைக்கி என் அக்கா மகளுக்கு கல்யாணம். நான் பட்டு பாவாடைக் கட்டி,ரெட்டை சடைப்போட்டு தலை நிறைய பூவோடும்,கை நிறைய வளையல், ஜிமிக்கியோடு, காலில் கொலுசு போட்டு சும்மா.... ஒரு ஹிரோயின் மாதிரி இருந்தேனு நினைச்சிக்கோங்க. அப்ப தான் நம்ம ஹீரோ அதான் என் அத்தை பையன் அவரோட நண்பர்களை கூட்டிகிட்டு வந்தார். 

யாருனு தெரியாத பையன்கள் எல்லாம் கல்யாண வீட்டில இருக்கும் போது சும்மா இருந்த என் அக்கா என்னைக் கட்டிக்க போகிறவர் வந்திருக்கார்னு தெரிஞ்சதும் என்னை ரூம்ல வைச்சி பூட்டாதக் குறையா பூட்டிட்டாங்க. 

எனக்கு மட்டும் பார்க்க ஆவல் இருக்காதா. சரி பார்க்கிரப்ப பாத்துக்கிடலாம்னு இருந்துட்டேன். அவரோட நண்பர்கள் வந்தும் என் அக்காட்ட எங்க நண்பனோட வருங்கால மனைவியப் பார்க்கத் தான் வந்திருக்கோம்னு சொல்லி இருக்காங்க. 

சின்ன வயசில் கூடப் பார்க்காத அத்தை மகன் அன்று தான் என்னை பார்க்க வந்திருக்கார். அன்னைக்கே கல்யாண மண்டபத்தில் வைச்சே பெண் பார்க்கும் படலம். அவராவது பராயில்லை என்னை பெண் என்ற முறையில் என்னை பார்த்தார். 

ஆனால் என் நிலையோ வேறு. ஐந்தாறு பையன்களில் ஒருவராக. 

எல்லா பையன்களும் என்னிடம் என்ன படிச்சிருக்கிங்க. உங்களுக்கு என்ன பிடிக்கும் இப்பிடி நிறையக் கேள்விகள் வேறு. இதில் யாரு என்னைக் கட்டிக்க போறவர். யார்ட்ட கேட்க.... 

அப்பல்லாம் நான் சரியா யாரிடமும் பேச மாட்டேன். கேட்டதுக்கு பதில் அவ்வளவு தான் எனக்கு சுதந்திரம். 

ஒரு வழியா வரும் தை மாதம் கடைசி வெள்ளி அன்று திருமணம் முடிவாயிட்டு. கல்யாண வீட்டில் ஒரே என் அண்ணன் படத்தில் உள்ள பாடல் சலக்கு சலக்கு சிங்காரி...... அன்னக்கிளி படப் பாடல்னு தன்னோட விருப்பத்தை பாடல் மூலமா எனக்கு தூது விட்ட என் அத்தை மகனோடு நேரடியா நானும் அவரும் பேசியதே இல்லை.

அப்புறம் சொத்து பிரச்சனையில் என் அத்தை நிறைய எதிர்பாத்தாங்க. எங்க அப்பா தான் எல்லாருக்கும் ஐந்து தம்பிகளுக்கும், மூன்று தங்கைகளுக்கும் மூத்தவர். எல்லாத்தையும் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் கொடுத்திட்டு எங்களை விட்டு இறந்துட்டார். 

சொத்தில்லா அண்ணன் மகளைக் கட்டிக்க இஷ்டமில்லாத அத்தை கல்யாணத்தை தள்ளிப் போட்டு அம்மாவை அவமானப் படுத்தினாங்க. 

இது எதுவுமே அத்தைப் பையனுக்கு தெரியாது. அவர் வெளியூரில் இருந்தார். 

அவமானம் தாங்க முடியாத அம்மா எனக்கு வேறு இடத்தில் கல்யாணம் பேசினாங்க. கேள்வி பட்ட அத்தை பையன் சொத்துக்காக மாமா பொண்ணை கட்டித் தராத உன்னிடம் இனி நான் பேச மாட்டேனு சொல்லி அவர் வேலை பார்க்கும் இடத்தில் எந்த ஒரு நகையும் இல்லாத ஒரு பெண்ணைக் கட்டிக்கிட்டார்.

இப்படி  தான் ஒரு அத்தைபையன் அத்தியாயம் முடிஞ்சி போச்சு. 

பாட்டி குசும்பு




ஆடி பூரம் கோயிலுக்கு போறேன். கொஞ்சம் மருதாணி அரைத்துக் கொடுப்பிங்களானு பாட்டி மகள் கேட்டாங்க.

நானும் சரினுட்டேன்.

மரத்தில் பாதி மரத்தை வெட்டி கொண்டு வந்து கொடுத்துட்டு போயிட்டாங்க.

பாட்டிக்கு வந்ததே கோவம். 

இவ்வளத்தையும் எப்படி அரைப்பிங்க. இதை அரைக்க எவ்வளவு நேரம் ஆகும்.
சரி. அரைக்க கொடுத்தவள் இலைய உருவிக் கொடுக்கலாம் இல்ல. நீங்க மாட்டேனு சொல்ல வேண்டியது தானேனு ஏகப்பட்ட திட்டு மகளுக்கு.

நானும் ச்சே பாட்டிக்கு நம்ம மேல எவ்வளவு பிரியம்னு நினைத்து சந்தோஷப் பட்டா அப்புறம் தான் தெரிந்தது. மிக்‌ஷி வம்பா போயிடுமாம். 

அப்புறம் என்ன பாட்டி மகளே.. நானே அரைத்துக்கிடுதேனு வாங்கிட்டு போயிட்டாங்க. நான் எஸ்கேப்.

கோயிலுக்கு அரைத்துக் கொடுப்பதுனா சும்மாவா.

இப்படியும் சிலர்


நேற்று இரவு எட்டு மணிக்கு எல்லாம் தூங்கப் போயாச்சி. ஏன்னா டீவியில் வழக்கமா ஓடும் நாடகம் கிடையாதுல்ல அதான். மேலும் இடி மின்னல் வேறு. 

சுமார் ஒரு பதினொரு மணி இருக்கும் நான் கவனிக்கும் வயதான அம்மா ஹால்ல லைட்டப் போட்டு எதையோ தேடிக் கொண்டு இருந்தார்கள். 

நான் என்னவாக இருக்கும்னு கேட்கும் போது செல்போனை காணும்னாங்க. 

எப்போதும் பக்கத்தில் தான் வைத்திருப்பார்கள். தூங்க போகும் போது நான் தான் கட்டில்ல வைப்பேன். 

போனக் காணும்னு சொன்னதும் எல்லா பக்கமும் தேடிட்டு கடைசியா போர்வைக்கு கீழ் இருந்து எடுத்து கொடுத்தேன். 

போன் எங்க இருந்ததுனு கேட்டதுக்கு நான் நீங்க மூடிப் படுக்கும் போர்வைக்கு கீழ் இருந்தது என்றேன். 

உடனே சண்டைக்கு வந்துட்டாங்க. நான் சொன்னது தப்பாம். 

இதில் என்ன தப்பு என்றால் "மூடிப் படுக்கும்" என்று சொல்லக் கூடாதாம். போர்த்திப் படுக்கும் என்று சொல்லனுமாம்.

கிளாஸ் எடுத்தாங்க பாருங்க எனக்கு வராத தூக்கமும் இனி வருவேனா நான்னு போயிட்டு..

அயிரை மீன் குழம்பு


அட டா......என்ன இன்னைக்கு ஞாயிற்று கிழமையா வீட்டு வீட்டுக்கு வண்டிய எடுத்துக்கிட்டு எங்க கிளம்பிட்டிங்க? சிக்கன் வாங்க தானே. ஏங்க ஞாயிற்று கிழமைனாலே சிக்கன் தான் வாங்கனுமா.
எல்லா சத்துக்களும் நிறைந்த மீன் வாங்க கூடாதா. பொதுவா ஆடு, கோழி போன்ற இறைச்சி வகைகளை சாப்பிடுவதை விட மீன் சாப்பிடுவது உடம்புக்கு மிகவும் நல்லதுங்க.
காய்கறி, பழங்கள் சாப்பிடுவது போல் சத்துள்ள மீன் உணவு சாப்பிடுவது சிறு பிள்ளைகள் முதல் பெரியோர்கள் வரை எல்லா வயதினருக்கும் ஏற்ற உணவுனே சொல்லுவேன்.
மீன் நல்ல உணவாவதோடு இதய நோய்க்கு மிகவும் ஏற்ற நல்ல மருந்து என்று சொல்லலாம்.
பாலூட்டும் தாய்க்கு சிறந்த உணவும் கூட. வளரும் குழந்தைகளுக்கு வலுவான எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் சிறந்த உணவு மீன் .மூளை வளர்ச்சிக்கு இரத்த அழுத்தத்தை ஒரே சீராக வைத்து உடலின் வளர்சிதை மாற்றத்தை கட்டுப் படுத்தும்.
இரத்த ஓட்டத்தை தூண்டி செயல் படுத்தும் "விட்டமின் E " தேவையான அளவு மீன்ல இருக்கு. அப்புறம் முக்கியமா முடக்கு வாதம், மூட்டுப் பிடிப்பு, எலும்பு தேய்மானக் கோளாறுகளுக்கு மீன் நல்ல நிவர்த்தி நிவாரணிங்க.
நான் மீன் சாப்பிட மாட்டேன். எனக்கு பிடிக்காது. நான் சைவம்னு சொல்லுரவங்க. மெடிக்கல்ல மீன் மாத்திரை வாங்கி சாப்பிடலாம்.
சின்ன வயசில் பொதுவா எங்க அம்மா பகல்ல வேலைக்கு போகிறதால இரவு தான் சமைப்பாங்க. நானும் எங்க அம்மா மட்டும் தான் எதாவது கோதுமை ரொட்டி, சாம்பாருனு வைப்பாங்க. ஆனா ஞாயிற்று கிழமைனா கண்டிப்பா மீன் தான்.
மீன் தலைய தனியா தேங்காய் போடாமல் கெட்டியா சின்ன வெங்காயம் ,தக்காளி , வற்றல் பொடி போட்டு வைப்பாங்க. ரொம்ப நல்லா இருக்கும்.
கொஞ்ச மீன் துண்டுகளை மட்டும் பொறித்து விட்டு மீதியை குழம்பு வைப்பாங்க. மீன் குழம்புனு சொன்னாலே நாக்கில எச்சில் ஊறும்.
நான் மதுரையில் இருக்கும் போது அடிக்கடி அயிரை மீன் குழம்பு வைத்து தருவார்கள். மிகவும் ருசியாக இருக்கும்.
மதுரை மல்லிகைக்கு அடுத்து ஸ்பெஷல் உணவுனா அது அயிரை மீன் குழம்பு தாங்க.
சரி சரி மீன் வாங்குங்க. சத்தா சாப்பிடுங்க.

அயிரை மீன் குழம்பு
......................................
முதலில் அயிரை மீனை நல்லா சுத்தம் செய்யனும். மற்ற மீன்களை விட அயிரை மீன் சுத்தம் செய்வது மிகவும் சுலபம்.
குழிவான பாத்திரத்தில் மீனை போட்டு கொஞ்சம் பால் அல்லது நல்லெண்ணெய் விட்டு வைத்தால் மீன் உண்ட கசடை எல்லாம் வெளியேற்றி விடும். அயிரை மீன் குட்டி குட்டியா சின்ன மீனா உயிரோடு தான் கிடைக்கும். மீனில் எந்த பாகத்தையும் கழிக்க வேண்டிய தில்லை. அப்படியே கொஞ்சம் உப்பு போட்டு அலசினாலே போதும் .
இனி குழம்பு எப்படி செய்வதுனு பார்ப்போம்.
1/2கிலோ அயிரை மீனுக்கு 200 சின்ன வெங்காயம் எடுத்து உரித்து நீள வாக்கில் ரெண்டா மூனா வெட்டிக்கோங்க. ஒரு நாலைந்து பூண்டை லேசா நசுக்கி வைச்சிக்கோங்க. கொஞ்சம் புளி அதாவது சின்ன எலுமிச்சை பழம் அளவு எடுத்து வெது வெதுப்பான் தண்ணீரில் ஊற வைச்சிக்கோங்க. ரெண்டு தக்காளிய வெட்டி வச்சிக்கோங்க.
இனி அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாயில் கொஞ்சமா நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு வெந்தயம் போட்டு தாளித்து நசுக்கிய பூண்டு வெங்காயம் போட்டு வதக்குங்க.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி போட்டு வதக்கி அப்புறம் 2ஸ்பூன் வற்றல் பொடி, 3ஸ்பூன் மல்லிப் பொடி, கொஞ்சமா மஞ்சள் பொடி போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்குங்க.
ஊற வைத்த புளியை கரைத்து மசலாவில் ஊற்றி கொதிக்க விடுங்க. கொதி வந்ததும் கழுவி வைச்சிருக்கும் மீனை அதில போடுங்க. மீன் சீக்கிரமா வெந்து விடும். அதனால ரொம்ப நேரம் கொதிக்க வேண்டாம். கொதிக்கும் போதே ரெண்டு பச்சை மிளகாய காம்பு கிள்ளி முழுசா போடுங்க.
பொதுவா மீன் குழம்புக்கு நான் தேங்காய் சேர்ப்பது இல்லை. வேண்டும் என்றால் கொஞ்சம் அரைத்து சேர்த்துக் கொள்ளலாம்.
எனக்கு எப்பவுமே மீன் குழம்பு கலரா இருக்கனும். அதுக்கு நான் குழம்பை இறக்கும் முன் கால் ஸ்பூன் வற்றல் பொடியை தூவி கொஞ்சம் எண்ணெய் விட்டு சூட்டோடு இறக்கி விடுவேன். பார்க்க சிகப்பா அழகா இருக்கும். ரெண்டு கறிவேப்பிலையை ஊறுவி போட்டு மூடி விடுங்கள். வாசனை ஊரை கூட்டி விடும்.
அயிரை மீன் குழம்பு தண்ணீயா இல்லாமல் தின்னமா இருக்கட்டும்.



இளங்காலை


கொக்கரிக்கும் சேவல்கள்
கூரைத் தொடும் சூரியன்
வானோடு உயர்ந்த மலர்கள்
அதனைக் கொஞ்சும் தேனீக்கள்.
சிறகடிக்கும் சிட்டுக் குருவிகள்
இன்பம் தரும் இன்னிசைகள்
தரை தொடாத தட்டான்கள்
பாம்போடு கூடிய வயல் வெளி
மனசு குளிர வைக்கும் மழைத் துளிகள்
இழந்ததே இயற்கை வளம்
மனிதன் பெற்ற செல்வங்களோ சில.




போட்டோ ; கார்த்திக் புகழேந்தி.