Saturday 22 August 2015

அயிரை மீன் குழம்பு


அட டா......என்ன இன்னைக்கு ஞாயிற்று கிழமையா வீட்டு வீட்டுக்கு வண்டிய எடுத்துக்கிட்டு எங்க கிளம்பிட்டிங்க? சிக்கன் வாங்க தானே. ஏங்க ஞாயிற்று கிழமைனாலே சிக்கன் தான் வாங்கனுமா.
எல்லா சத்துக்களும் நிறைந்த மீன் வாங்க கூடாதா. பொதுவா ஆடு, கோழி போன்ற இறைச்சி வகைகளை சாப்பிடுவதை விட மீன் சாப்பிடுவது உடம்புக்கு மிகவும் நல்லதுங்க.
காய்கறி, பழங்கள் சாப்பிடுவது போல் சத்துள்ள மீன் உணவு சாப்பிடுவது சிறு பிள்ளைகள் முதல் பெரியோர்கள் வரை எல்லா வயதினருக்கும் ஏற்ற உணவுனே சொல்லுவேன்.
மீன் நல்ல உணவாவதோடு இதய நோய்க்கு மிகவும் ஏற்ற நல்ல மருந்து என்று சொல்லலாம்.
பாலூட்டும் தாய்க்கு சிறந்த உணவும் கூட. வளரும் குழந்தைகளுக்கு வலுவான எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் சிறந்த உணவு மீன் .மூளை வளர்ச்சிக்கு இரத்த அழுத்தத்தை ஒரே சீராக வைத்து உடலின் வளர்சிதை மாற்றத்தை கட்டுப் படுத்தும்.
இரத்த ஓட்டத்தை தூண்டி செயல் படுத்தும் "விட்டமின் E " தேவையான அளவு மீன்ல இருக்கு. அப்புறம் முக்கியமா முடக்கு வாதம், மூட்டுப் பிடிப்பு, எலும்பு தேய்மானக் கோளாறுகளுக்கு மீன் நல்ல நிவர்த்தி நிவாரணிங்க.
நான் மீன் சாப்பிட மாட்டேன். எனக்கு பிடிக்காது. நான் சைவம்னு சொல்லுரவங்க. மெடிக்கல்ல மீன் மாத்திரை வாங்கி சாப்பிடலாம்.
சின்ன வயசில் பொதுவா எங்க அம்மா பகல்ல வேலைக்கு போகிறதால இரவு தான் சமைப்பாங்க. நானும் எங்க அம்மா மட்டும் தான் எதாவது கோதுமை ரொட்டி, சாம்பாருனு வைப்பாங்க. ஆனா ஞாயிற்று கிழமைனா கண்டிப்பா மீன் தான்.
மீன் தலைய தனியா தேங்காய் போடாமல் கெட்டியா சின்ன வெங்காயம் ,தக்காளி , வற்றல் பொடி போட்டு வைப்பாங்க. ரொம்ப நல்லா இருக்கும்.
கொஞ்ச மீன் துண்டுகளை மட்டும் பொறித்து விட்டு மீதியை குழம்பு வைப்பாங்க. மீன் குழம்புனு சொன்னாலே நாக்கில எச்சில் ஊறும்.
நான் மதுரையில் இருக்கும் போது அடிக்கடி அயிரை மீன் குழம்பு வைத்து தருவார்கள். மிகவும் ருசியாக இருக்கும்.
மதுரை மல்லிகைக்கு அடுத்து ஸ்பெஷல் உணவுனா அது அயிரை மீன் குழம்பு தாங்க.
சரி சரி மீன் வாங்குங்க. சத்தா சாப்பிடுங்க.

அயிரை மீன் குழம்பு
......................................
முதலில் அயிரை மீனை நல்லா சுத்தம் செய்யனும். மற்ற மீன்களை விட அயிரை மீன் சுத்தம் செய்வது மிகவும் சுலபம்.
குழிவான பாத்திரத்தில் மீனை போட்டு கொஞ்சம் பால் அல்லது நல்லெண்ணெய் விட்டு வைத்தால் மீன் உண்ட கசடை எல்லாம் வெளியேற்றி விடும். அயிரை மீன் குட்டி குட்டியா சின்ன மீனா உயிரோடு தான் கிடைக்கும். மீனில் எந்த பாகத்தையும் கழிக்க வேண்டிய தில்லை. அப்படியே கொஞ்சம் உப்பு போட்டு அலசினாலே போதும் .
இனி குழம்பு எப்படி செய்வதுனு பார்ப்போம்.
1/2கிலோ அயிரை மீனுக்கு 200 சின்ன வெங்காயம் எடுத்து உரித்து நீள வாக்கில் ரெண்டா மூனா வெட்டிக்கோங்க. ஒரு நாலைந்து பூண்டை லேசா நசுக்கி வைச்சிக்கோங்க. கொஞ்சம் புளி அதாவது சின்ன எலுமிச்சை பழம் அளவு எடுத்து வெது வெதுப்பான் தண்ணீரில் ஊற வைச்சிக்கோங்க. ரெண்டு தக்காளிய வெட்டி வச்சிக்கோங்க.
இனி அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாயில் கொஞ்சமா நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு வெந்தயம் போட்டு தாளித்து நசுக்கிய பூண்டு வெங்காயம் போட்டு வதக்குங்க.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி போட்டு வதக்கி அப்புறம் 2ஸ்பூன் வற்றல் பொடி, 3ஸ்பூன் மல்லிப் பொடி, கொஞ்சமா மஞ்சள் பொடி போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்குங்க.
ஊற வைத்த புளியை கரைத்து மசலாவில் ஊற்றி கொதிக்க விடுங்க. கொதி வந்ததும் கழுவி வைச்சிருக்கும் மீனை அதில போடுங்க. மீன் சீக்கிரமா வெந்து விடும். அதனால ரொம்ப நேரம் கொதிக்க வேண்டாம். கொதிக்கும் போதே ரெண்டு பச்சை மிளகாய காம்பு கிள்ளி முழுசா போடுங்க.
பொதுவா மீன் குழம்புக்கு நான் தேங்காய் சேர்ப்பது இல்லை. வேண்டும் என்றால் கொஞ்சம் அரைத்து சேர்த்துக் கொள்ளலாம்.
எனக்கு எப்பவுமே மீன் குழம்பு கலரா இருக்கனும். அதுக்கு நான் குழம்பை இறக்கும் முன் கால் ஸ்பூன் வற்றல் பொடியை தூவி கொஞ்சம் எண்ணெய் விட்டு சூட்டோடு இறக்கி விடுவேன். பார்க்க சிகப்பா அழகா இருக்கும். ரெண்டு கறிவேப்பிலையை ஊறுவி போட்டு மூடி விடுங்கள். வாசனை ஊரை கூட்டி விடும்.
அயிரை மீன் குழம்பு தண்ணீயா இல்லாமல் தின்னமா இருக்கட்டும்.



No comments:

Post a Comment