Monday 13 July 2015

முருகன் குறிச்சி அத்தை.


கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் பச்சைப் பசேல்னு தெரியும் வயல்வெளிகள். அதைச் சுற்றி அரண் மாதிரி ஐம்பது அறுபது தென்னை மரங்கள். நடு நடுவே மா மரங்களும், புளிய மரங்களும்.

வயலுக்கு நடுவே பெரிய கிணறு. கிணற்றைச் சுற்றி மல்லி, முல்லை, கனகாம்பரம்னு வித விதமான பூந்தோட்டம். அத்தனைக்கும் சொந்தக்காரி தான் இந்த முருகன் குறிச்சி அத்தை.

அத்தை ஆவுடைநாச்சியார். மாமா பரமசிவம். பெயருக்கு ஏத்தார் போல் ரெண்டு பேரும் பார்வதி, பரமசிவம் தான். ஒரு பாதி அத்தைனா மறு பாதி மாமா. குணத்திலும் கூட.

ஊருக்குள் என்ன விசேஷம்னாலும் இந்த ரெண்டு பேர் தலைமையில் தான் நடக்கும். கல்யாணம் ஆகி புகுந்த வீட்டுக்கு போகும் புது பொண்ணு புது மாப்பிள்ளைக்கு முதல் சீரே பரமசிவம் மாமா வீட்டு சீர் தான்.

மாமாவுக்கும் அத்தைக்கும் ரெண்டு பையன்கள் தான். அதனால அத்தையும் மாமாவும் ஊருக்குள் இருக்கும் பெண் பிள்ளைகளை தன் பிள்ளைகளா நினைச்சி சந்தோஷப் படுவாங்க.

மாமாவும், அத்தையும் பகல்ல தோட்டத்தில் தான் இருப்பாங்க. தோட்டத்தில இருந்துக்கிட்டே வயல் வேலையையும் கவனிச்சிக்கிடுவாங்க. அத்தை நாச்சியார் வேலை ஆட்களுக்கு அப்பப்போ மோரும், காபி தண்ணியும் கொடுத்து கவனிப்பாங்க. தோட்டத்தில் பூத்தப் பூக்களை தான் கையாலே கட்டி அங்குள்ள பொண்ணுப் பிள்ளைகளுக்கு கொடுத்தும் வைச்சி விட்டும் அழகு பார்ப்பாங்க.

எங்க அம்மாவும் அப்பாவும் பரமசிவம் மாமா குடும்பத்துக்கு சின்ன வயசு சிநேகிதம். எப்படினா, அம்மாவும் அப்பாவும் காதலித்து புதுஷா கல்யாணம் செஞ்சிக்கிட்டு ஊருக்குள்ள வந்தப்போ பரம சிவ மாமா தான் உறவுனுச் சொல்லி கை நீட்டி அணைத்துக் கொண்டவர்.

அப்பா ஆரம்பத்தில் கே.டி.சி டிப்போவில் தான் மெக்கானிக்கா வேலை செய்தார். அக்கா ரெண்டு பேரும் பிறந்ததும் பரமசிவ மாமா கூட இருந்து கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டார்.

நான் சின்னப்பிள்ளையா இருக்கும் போது மாமா வீட்டில் இல்லை தோட்டத்தில் தான் முழு நேரமும் இருப்பேன். ஸ்கூல் லீவ் விட்டுட்டா போதும் மாமா வீடு தான் சொர்க்கம் எனக்கு.

மாமா வீட்டுப் பின் வாசலைத் திறந்தா போதும் பச்சை பசேல்னு வயல். அப்படியே வரப்பில் ஓடும் போது எத்தனையோ முறை விழுந்து எழுந்திருச்சிருக்கேன்.

நாச்சியார் அத்தை மாமரத்தில் ஊஞ்சல் கட்டி தருவாங்க. ஆசை தீரும் வரை ஆடுவேன். எனக்கு மீன் குழம்புனா ரொம்ப பிடிக்கும். வேலை ஆட்களை விட்டு மீன் பிடித்து வரச் சொல்லி வித விதமா பொறிச்சி கொழம்பு வைச்சி முள் எடுத்து ஊட்டி விடாத குறையா சாப்பிட வைப்பாங்க.

சாயங்காலம் ஆயிட்டா போதும் தலை சீவி பின்னல் இட்டு ஜடை நாகம் வைச்சி குஞ்சலத்தோடு ரிப்பன் வைத்து கட்டி விடுவாங்க. நானும் ஜடையை அப்படியும் இப்படியுமா ஆட்டிக்கிட்டு பயங்கரமா ஸ்டையில் பண்ணுவேனாம்.

பார்க்கிற எல்லாரும் “என்ன, நாச்சியாரு . இப்பவே பையனுக்கு பொண்ணு ரெடியா இருக்கு போலயே”

“ஆமா. மூத்தவனுக்கு இவளைக் கேட்டா எங்க அண்ணன் தரமாட்டானா என்ன”

“ஏன் தர மாட்டாரு. பையனுக்கு என்னக் கொற. ராசா வாண்டம் இருக்காப்புல்ல. ரெண்டு பேருக்கும் ஜோடி பொருத்தம் அம்சமா இருக்கு”

“அடி போங்கடி, பிள்ளைகளை கண்ணு வைச்சிக்கிட்டு”. உடனே முஞ்சந்தியில் மண்ணெடுத்து உப்பும், வற்றல், கடுகுனு எல்லாத்தையும் சேர்த்து திருஷ்டி சுற்றி எரிகிற நெருப்பில் போடுவாங்க.

அம்மா வந்து கூப்பிட்டா “ஏன் மைனி அவ இங்க இருக்கட்டுமே. லீவு முடிஞ்சதும் அனுப்பி வைக்கேனே”னு சொல்லிருவாங்க. போட்டோ ஸ்டுடியோவுக்கு வில் வண்டியில் மாமாவும் அத்தையும் கூட்டிட்டுப் போய் போட்டோ எடுத்ததோடு வீட்டுக்கும் கூட்டிட்டு வந்து வயல் வெளியில், தோட்டத்தில்னு ஏகப்பட்ட போட்டோ எடுப்பாங்க.

வீட்டின் நடு கூடத்தில் பெரிய ஊஞ்சல் உண்டு. கைபிடி செயின் எல்லாம் பித்தளையில் யானை வைத்தது. ஊஞ்சலில் ஆட அத்தை பையனோடு சண்டைப் போட்டு விழுந்து நாடியில் வெட்டி ஒரே ரத்தம். மாமாவுக்கும் அத்தைக்கும் கேட்கனுமா பையனுக்கு அன்று நல்லா கொடை விழுந்தது.

காலங்கள் வேகமா ஓட நான் பெரிய மனுஷி ஆனேன். தாய் மாமன் கட்டு பரமசிவம் மாமா தான் செய்வதா இருந்தது. கடைசி நேரத்தில் அம்மாவின் அண்ணன் சீரோடு வந்து கட்டு செய்தார். அப்பாவுக்கும், அம்மாவுக்கும் ஒரு புறம் சந்தோஷமும் மறுபுறம் கஷ்டமாவும் இருந்தது. ஆனா மாமாவும் அத்தையும் அதை பெருசா எடுத்துக்கிடல.

சந்தோஷமா அண்ணன் என்றும் மைனி என்றும் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டு கொடுத்து ஒற்றுமையா இருக்கும் போது தான் மாமா குடுப்பத்தில் பூகம்பம் வந்தது.

மாமாவின் வளர்ச்சி பிடிக்காத சிலர் மாமாவை ஆள் வைத்து கொல்ல திட்டம் போட்டுருக்காங்க. இது தெரியாத மாமாவும் அப்பாவும் கிணற்று மேட்டில் ஈச்சுச் சேரில் அமர்ந்து பேசிக்கிட்டு இருந்திருக்காங்க. வயல் வேலை முடித்து கரையேறி சம்பளத்தை வாங்கிட்டு எல்லாரும் கிளம்பியதும் அத்தை மட்டும் வீட்டுக்கு வந்து விளக்கேற்றி சாமி கும்பிடும் போது தான் பிறவாசலில் இருந்து சத்தம் கேட்டது.

இப்ப தானே அங்க இருந்து வந்தோம் அதுக்குள்ள என்ன சத்தம்னு அவசரமாவும் பதற்றத்தோடும் கதவைத் திறக்கும் போது பரமசிவம் மாமா ஒரு சிலரால் வெட்டுப் பட்டு அத்தையின் கண் முன்னே தரையில் சாய்ந்தார். அவருக்கு முன்பே என் அப்பாவையும் கயவர்கள் வெட்டி வீழ்த்தியிருந்தார்கள்.

விஷயம் கேள்விப்பட்டு ஊரே கூடி மாமாவுக்காகவும், அப்பாவுக்காகவும் அழுதது. போலிஸ் வண்டி வந்து விசாரணையோடு மாமாவையும் அப்பாவையும் அள்ளிக் கொண்டு போய் போஸ்ட்மாட்டம் பண்ணி உயிர் இல்லா ஜடத்தை ஒப்படைத்து போனார்கள்.

காரியம் எல்லாம் முடிந்து எல்லாரும் அவரவர் வேலையப் பார்க்க போனாங்க. நாச்சியார் அத்தை வைரக் கம்மலும், வைர மூக்கத்தியும், வைர ஒட்டியாணமும் இல்லாமல் சிவனைப் பிரிந்த பார்வதியா மூலையில் கிடந்தாங்க.

அம்மாவை இனி இந்த ஊரில் பிள்ளைகளை வைச்சிக்கிட்டு தனியா இருக்க வேண்டாம்னு அம்மாவின் அண்ணன் எங்களை எல்லாம் கூட்டிட்டுப் போனார்.
பாவம் நாச்சியார் அத்தைனு நான் அவுங்க கூடவே இருக்கேன்னு அடம் பிடிச்சேன். மாமா அதான்  அம்மாவின் அண்ணன் விடமாட்டேன்னு சொல்லிட்டார்.

நாட்கள் மாதமாகி வருஷங்கள் ஆனது. மாமாவோடு போன கொஞ்ச நாள்லயே அம்மாவுக்கு மனசு ஒத்து போகலை. கையில் இருந்த பணம் நகையை வைத்து அக்கா ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி சீர் செய்தாள். மிஞ்சி இருப்பது நான் மட்டும் தான்.

அக்காக்களின் கல்யாணத்திற்கு நாச்சியார் அத்தை வரவில்லை. காரணம் அப்போ எனக்கு தெரியலை. அம்மா கஷ்டப்பட்டு என்னை படிக்க வைச்சாங்க.
படித்து முடித்து வீட்டில் இருக்கப் பிடிக்காமல் பக்கத்து டாக்டரிடம் உதவியாளரா வேலைக்கு சேர்ந்தேன். அன்று ஞாயிற்று கிழமை. எனக்கு லீவு.

மத்தியான நேரம் ஒரு மணி இருக்கும். உச்சி வெயிலில் உடம்பில் சட்டையில்லா தேகத்தில் காதிலும் கழுத்திலும் நகை எதுவும் இல்லாமல் வெற்று காலோடு செருப்புக் கூடப் போடாமல் கையில் மஞ்சள் பையோடு நாச்சியார் அத்தை பக்கத்து வீட்டில் அம்மாவின் பெயர் சொல்லிக் கேட்கும் போது தான் பார்த்தேன். ஆளே அடையாளம் தெரியாத அளவில் மாறி போயிருந்தார்கள்.

“அத்....த...”

“ஏலேய், பூங்கொடி. எப்படி லே இருக்க. இந்த அத்தைய மறந்துட்டோலா”

“இல்ல அத்த. நாங்க யாரும் ஒங்கள மறக்கலை. முதல்ல வாங்க வீட்டுக்குள்ள. வாங்க அத்தை”னுச் சொல்லி அப்படியே கட்டிக் கொண்டு அழுதேன். அது சந்தோஷத்திலா வருத்தத்திலானு தெரியலை.

முதல்ல கொஞ்சம் சாப்பிடுங்கனுச் சொல்லி அம்மா வைத்திருந்த மீன் குழம்பை ஊற்றி சாப்பிடச் சொன்னேன்.

நாச்சியார் அத்தை கண்களில் கண்ணீர் . “அழாதிங்க அத்தை. அழாம சாப்பிடுங்க”னுச் சொல்லிட்டு நானே அழுதேன்.

ஊருக்குள் கொடைனாலே ஆள் ஆளுக்கு கிடா வெட்டி பொங்கல் வைப்பாங்க. அதிலும் நாச்சியார் அத்தை வீட்டு பொங்கலுக்கும் கறிக்கும் ஒரு கூட்டமே காத்துக் கிடக்கும். எல்லாரையும் வரிசையா உட்கார வைச்சி பரமசிவம் மாமாவும் அப்பாவும் பரிமாறும் அழகே தனி தான். மற்ற நாட்களில் வயல் வரப்பில் உட்கார்ந்துக் கொண்டு கை நிறைய கறி சோற்றை அள்ளி கை வளையல்கள் குலுங்க உருண்டைப் பிடித்து வேலை ஆட்களுக்கும் மாமாவுக்கும் கொடுத்த கையா இது? ஊருக்கே சோறு ஊட்டிய கையல்லவா இது. நினைக்கும் போது எனக்கு அழுகையா வந்தது.

பக்கத்து வீட்டு போனில் அம்மாவைக் கூப்பிட்டு “அம்மா அத்தை வந்திருக்காங்க. முருகன் குறிச்சி அத்தைமா”ன்னு சொல்லும் போதே மனசில ஒரு உற்சாகம். இருக்காதா பின்ன. முருகன் குறிச்சி ஊரையே கட்டி காத்தவர் இல்லையா.

விஷயம் கேள்விபட்டதும் ஓடோடி வந்த அம்மாவும் அத்தையும் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு மனசுல இருந்த பாரத்தை எல்லாம் சொல்லி அழுதார்கள்.

“மைனி எப்படி இருக்கிக மைனி. இது என்னக் கோலம் மைனி” அம்மாவ பார்த்து பதறின அத்தையிடம் “நீங்க மட்டும் என்ன மைனி, அலங்காரம் பண்ணி வைச்ச சாமி சிலையா இருப்பிக. இப்போ ஏன் மைனி இப்படி இருக்குதிக. நம்ம பிள்ளைக எல்லாம் எப்படி இருக்காக. என்னச் செய்தாக மைனி”ன்னு அம்மா கேட்டார்கள்.

மாமா இறந்த கொஞ்ச நாள்லயே மாமாவையும் அப்பாவையும் கொன்றது மாமாவின் பெரியப்பா பிள்ளைகள் தான்னு தெரிஞ்சிக்கிட்டாங்க. அத்தைக்கு பைத்தியக்காரப் பட்டம் கட்டி சொத்தையெல்லாம் கழுகு கூட்டமா சேர்ந்து கொதறியிருக்காங்க.

பெரிய பையன் கிடைத்த கொஞ்ச நிலத்தில் விவசாயம் செய்கிறார். சின்னப் பையன் பட்டாளத்தில் இருக்கிறார். அதுவும் எப்படியெல்லாமோ போராடி தான் இருக்க இடமும் உழுவதுக்கு கொஞ்ச நிலமும் கிடைத்திருக்கு. பாவம் அத்தை. அவுங்க முகத்தில் இன்னும் ஏதோ ஒரு கலவரம் இருந்துக்கிட்டு தான் இருக்கு. அது என்ன கையில மஞ்சப் பை.

நான் கேட்கிறதுக்குள்ள அத்தையே பையில் இருந்து ஜாதகத்தை வெளியே எடுத்தார்கள்.

“மைனி. இது உங்க பெரிய மருமகன் ஜாதகம்” என்று அம்மா  கையில் கொடுத்தார்கள்.

“இந்தாமா, பூங்கொடி. இது உனக்காக தான் பத்திரமா வைச்சிருக்கேன். இந்தா பிடிமா. வைச்சிக்க” வெள்ளைத் துணியில் சின்னதா ஒரு பொட்டலம்.

என்னவாக இருக்கும் என்ற சிந்தனையோடு பொட்டலத்தை பிரித்து பார்த்தேன். மாமா அத்தைக்கு ஆசை ஆசையா வாங்கி கொடுத்த வைரக் கம்மலும், வைர மூக்குத்தியும்.

“என்னமா பாக்கிற. இது உனக்கு தான். காலம் பூராம் எங்க வீட்டில வாழப்போற உனக்கு கொடுக்க எங்கிட்ட இது மட்டும் தாம்மா இருக்கு” சொல்லும் போதே அத்தையின் கண்களில் கண்ணீர்.

சொத்து சுகம் அனைத்தையும் இழந்து நிற்கும் அத்தைக்கு சொத்துனு சொல்லிக்க கையில் இருப்பது இந்த கம்மலும் மூக்குத்தியும் மட்டும் தான். பிள்ளைகள் என்ன தான் அம்மாவை பார்த்துக் கொண்டாலும் தனக்கு என்று ஒரு பிடிதரம் இருக்கனும் என்பது தெரியாத அத்தை.

எனக்கு என்னச் சொல்வது என்றே தெரியாமல் தடுமாறினேன். எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆனது தெரியாமல் எத்தனை ஆசையாய் வந்திருக்கிறார்கள். பாவம் அத்தை. சொன்னால் எப்படி தாங்கி கொள்வார்கள்.

“அத்தை, இது மாமா உங்களுக்கு ஆசையா வாங்கி கொடுத்தது. உங்க காலம் வரைக்கும் அது உங்க கிட்ட தான் இருக்கனும். முதல்ல இந்த கம்மலை காதில போடுங்க”னுச் சொல்லி கட்டாயப் படுத்தி கம்மலை மட்டும் போட வைச்சேன். “உங்க பேரப் பிள்ளைகள் காலம் வரைக்கும் எக்காரணம் கொட்டும் கம்மலை கழட்டக் கூடாது. இது இந்த மருமகளோட உத்தரவு சரியா அத்த”ன்னு நான் கேட்டுகிட்டதும்  மனசே இல்லாம தான் கம்மலை போட்டுக் கொண்டார்கள்.

அம்மா தான் மெதுவா எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆனதை அத்தைக்கு சொன்னாங்க. பாவம் அத்தை ஏமாற்றத்தில் என்னைக் கட்டிக் கொண்டு அழுதார்கள்.
ஜாதகத்தை கையில் வைத்துக் கொண்டு ஊர் ஊரா தேடி அலைந்து கடைசியில் கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாது போல் அமைஞ்சா எப்படி இருக்கும்? அப்படி தான் இருந்தது அத்தையின் நிலைமையும்.

கல்யாணப் பரிசா வைர மூக்குத்தியை என் மூக்கில் போட்டு விட்டு ஏமாற்றத்தோடு போன அத்தை அலைந்து திரிந்து சொந்தத்திலே ஒரு பெண்ணைப் பார்த்து மூத்த பையனுக்கு கல்யாணத்தை முடித்தார்கள். ரெண்டாவது பையனோ தன்னுடன் வேலையில் இருந்த பட்டாளத்துக்காரின் பொண்ணைக் கட்டிக் கொண்டார். அத்தை மூத்த பையன் மருமகளோடு இருந்தார்கள்.

முதல் பிரசவத்திற்காக அம்மா வீட்டிற்கு நான் வந்து ஒருவாரம் இருக்கும். மதியம் மணி பதினொன்னு பன்னிரெண்டு இருக்கும். முருகன் குறிச்சி அத்தை வாசலில் மஞ்சள் பையோடு நின்றிருந்தார்கள்.

நான் தான் “வாங்க அத்த. நல்லா இருங்கிங்களா. அம்மாட்ட உங்கள பத்தி கேட்பேன்”னு ஆரம்பித்தேன்.

“எனக்கு என்னமா, நான் நல்லா இருக்கேன். நீ எப்படிமா இருக்கே. ஆஸ்பத்திரிக்கு எல்லாம் போனியா. கஷாயம் எல்லாம் குடிக்கிறியா”னு மூச்சி விடாமக் கேட்டுக்கிட்டே போன அத்தையின் வெறும் காதை வந்ததுமே கவனித்தேன்.

“சரி, பையன்களுக்கு தான் கல்யாணமெல்லாம் ஆயிட்டே அத்த. அப்பறம் என்ன இன்னும் கையில பை”

“சும்மா தானே இருக்கேன். அதான் ரசம் வைக்க கறிவேப்பிலை மல்லி இலை வாங்கிட்டு வரலாம்னு வந்தேன். வரும் போது தான் மைனி நீ வந்திருக்கிறதை சொன்னாங்க. சரிமா நேரம் ஆயிட்டு நான் அப்புறம் வாரேன்” அத்தை பார்வைல இருந்து மறையுற வரைக்கும் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

அம்மா வந்து சொல்லும் முன்பே தெரிஞ்சிக்கிட்டேன். மருமகளா வந்தவள் வந்த ஒரு வாரத்தில் அத்தையின் கம்மலுக்கு அடிப் போட்டது முதல் கறிவேப்பிலைக்காக ரெண்டு மூணு கிலோ மீட்டர் உச்சி வெயிலில் நடக்க வைப்பது வரை.

ஒரு காலத்தில் கூப்பிடும் முன்பே வந்து நிற்கும் வேலை ஆட்கள். நாச்சியார் கை சோற்றுக்கு தனி மணம் உண்டுனு சொன்னது போக இன்று ஒரு வாய் சோற்றுக்கு அத்தை படும் பாடு சொல்லி மாளாது.

இன்று என்னவோ இந்த மூக்குத்தி உறுத்துது. மூக்கில் அல்ல மனதில்.


°°பூங்கோதை°°°

- July 13 2015

1 comment: