Tuesday 10 November 2015

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் லதா அட்சயா


காலையிலே எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்து சொன்ன நான் ரொம்ப நாளைக்கு பிறகு இன்னைக்கி என் மகளுக்கு போன் செய்தேன். 

யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லாமல் தனியா ஒதுங்கி நிற்கும் எனக்கு பேத்திகளின் குரலில் ஆனந்த கண்ணீர்.

முதலில் சின்ன பேத்தி அஷ்வதா பேசினாள். எடுத்ததுமே ஹேப்பி தீபாவளி ஆச்சி.குரலில் அப்படி ஓர் தோரணை.ரொம்ப வளர்ந்துட்டாள்.

ரெண்டாவதா பெரியவள் அட்சயா பேசினாள். எடுத்ததுமே "ஏன் ஆச்சி போனே பண்ணலை. நேற்று எனக்கு Happy Birthday. நீங்க பேசவே இல்ல. நான் போன் போட்டா எடுக்கவும் இல்ல".

பாவம் எந்த நம்பருக்கு அடிச்சதோ.

"சாரி செல்லம். சாரி சாரி சாரி..." ஒற்றைச் சொல்லில் என்னை புரிந்து கொண்டது. என் அம்மு குட்டி.

என்னோடு சேர்ந்து இன்று என் செல்லக் குட்டீமாவை வாழ்த்துவோமே.

லதா அட்ஷயாவுக்கு இந்த ஆச்சியின் அன்பும் ஆசியும் என்றும் உன்னோடு செல்லம் ....

Monday 9 November 2015

ஒரு தீபாவளி மழை நாளில்.....



தீபாவளி என்றாலே எங்கப் பார்த்தாலும் வெடியும், வான வேடிக்கையுமா சந்தோஷமா இருக்கும். பெரியவர்களை விட குழந்தைகளுக்கு தான் சந்தோஷமும் உற்சாகமும் அதிகம்.

தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்பே வெடி வியாபாரம் ஆரம்பிச்சிடுவாங்க. யாரைப் பார்த்தாலும் புது துணி எடுத்தாச்சானு கேட்பதை விட வெடி வாங்கியாச்சானு தான் கேட்பாங்க. காய்கறி, துணிக் கடைகள் தவிர மற்ற எல்லா கடைகளும் வெடிக் கடையா தான் மாறி இருக்கும்.

வெடிக் கடையில் கூட்டத்தில் பசியோடு வரிசையில் நின்று வெடி வாங்குபவர்கள் அதிகம். ஒரு சிலர் வெடி தயாரிக்கும் இடத்திலேயே வெடியெல்லாம் வாங்கிடுவாங்க

தீபாவளிக்கு முதல் நாள் தான் இட்லி, தோசைக்கு மாவரைக்கனும்.
பலகாரம் கூட ரெண்டு நாளைக்கி முன்பே செஞ்சிடுவாங்க.

நாங்க குடி இருந்ததே தாமிரபரணி ஆற்றங்கரையில் இப்படி தான் மழை பெய்து கொண்டே இருக்கு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எதைப் பற்றியும் கவலைப்படாமல் பட்டாசு வெடித்து சந்தோஷமா இருக்காங்க.

பொதுவா பண்டிகை நாள்ல எல்லாரும் தோசைக்கு அரைக்க எங்க வீட்டில் தான் கொடுப்பாங்க. அன்னைக்கும் அப்படி தான் மாவு அரைத்துக் கொடுத்தேன். மல்லிகா அக்கா வீட்டு அரிசி மாவு அரைச்சாச்சி. இனி உளுந்து அரைக்கனும். க்ரண்ட் கட்டாயிட்டு. ஆமாம். எங்கோ மரம் விழுந்துட்டாம் . க்ரண்ட்ட ஆப் பண்ணிட்டாங்க.

எனக்கோ இன்னும் நாலைந்து வீட்டு அரிசி, உளுந்தோடு எங்க வீட்டு உளுந்தும் சிரிச்சிக்கிட்டு இருக்கு. என்னோட கவலையெல்லாம் எப்ப கரண்ட் வந்து எப்போ இதையெல்லாம் அரைச்சிக் கொடுக்கனு தான்.

அடாத மழை விடாது பெய்யும்ங்ற மாதிரி பெருத்த மழைப் பிடிக்க ஆரம்பிச்சிட்டு. ஆற்றிலேயோ தண்ணீர் மட்டம் வேகமா கூடிக்கிட்டே இருக்கு. போலீஸ்க்காரங்க ஒரு பக்கம் கரையில் இருப்பவங்க எல்லாரையும் மேட்டுக்கு போகச் சொல்லி அனோன்ஸ் பண்ராங்க.

எல்லாரும் மூட்டை முடிச்சியெல்லாம் கட்டி எங்க வீட்டு மாடி ரூமில் போட்டுட்டு மேட்டு பக்கமா போயாச்சி. போன க்ரண்ட் கொஞ்ச நேரத்தில் வரவும் சந்தோஷத்தில் இருந்த அரிசி உளுந்தை வேகமா க்ரைண்டரில் போட்டு அரைக்கும் போது ஒரு போலீஸ்காரர் ஏம்மா ஆத்துல வெள்ளம் வந்துக்கிட்டு இருக்கு நீங்க என்னடானா மாவு அரைச்சுக் கிட்டு இருக்கிங்க. "சார் அரைச்சுட்டேன் இன்னும் கொஞ்சம் தான்". "சீக்கிரமா மேட்டுக்கு போங்க"னு சொல்லிட்டு போயிட்டார்.

வீட்டிலோ நானும் பையன்களும் தான். பெரியவன் காரையும் , பைக்கையும் மேட்டுல கொண்டு விட்டுட்டு வந்தான். ஆற்றின் தண்ணீர் மட்டம் வேகமா கூடிக்கிட்டே இருக்கு.

அங்க இருக்கிற வீடுகள்லயே உயரமானதும் மாடி வீடும் எங்கள் வீடு தான். ஆனா ஆற்று தண்ணீயோ வீட்டின் வாசற்படியை தொட்டு விட்டது. வீட்டில இருக்கும் சின்ன சின்ன பொருட்களை ஸ்லாப்பில தூக்கி வைச்சாச்சி.

ஊருக்குள்ள ஒருத்தர் கிடையாது. எல்லாரும் மேட்டுக்கு (உயரமான இடத்துக்கு) போயிட்டாங்க. லைனுக்கு போயிட்டு திரும்பி வந்த என் கணவரையோ ஊருக்குள் விட மாட்டுக்காங்க. எப்படியோ பேசி ஊருக்குள் அதாவது எங்க வீட்டுக்கு வரும் போது ஆற்று வெள்ளத்தில் நீச்சல் அடித்து தான் வந்தார்.

மனசெல்லாம் பயம். எல்லாரும் மேட்டில் இருக்கும் போது எங்களை காணும் என்றால் எப்படி இருக்கும். வீட்டு பக்கம் வந்ததும் நானும் குழந்தைகளும் மாடியில் இருப்பதைப் பார்த்து ஒரே சந்தோஷம். அப்பறம் என்ன விடிய விடிய மழையில் வீட்டை பூட்டிட்டு மாடியில் யாருக்கும் தெரியாமல் பலகாரம் செய்தோம்.

விடிந்ததும் தண்ணீர் மட்டம் குறைய ஆரம்பிச்சிட்டு. செய்த பலகாரத்தை தூக்கிட்டு போய் மேட்டில் இருந்தவங்களுக்கு கொண்டு போய் கொடுத்தோம்.