Sunday 27 December 2015

ஏகாதசி விரதம்



காவத்து, குர்க்கை, துவாசி. இதெல்லாம் என்னனு தெரியுமா. எனக்கே இன்னைக்கி தான் தெரியும். திருவாதிரை களியோடு ஏழு வகை கூட்டுக்கு சேர்த்து கொண்ட கிழங்கு வகைகள் தான் இது.

பக்கத்து ஆத்து மாமி காவத்து தெரியுமானு கேட்டாங்க. எனக்கு தெரியாதே மாமி. நீங்க எதை சொல்றேள்ன. அது ஒரு கிழங்கு. பார்க்க கரடுமுரடா இருக்கும். நறுக்கினா வழ வழனு இருக்கும்னாங்க

கோயமுத்தூர்லயும், கேரளாலயும் தான் கிடைக்கும். அதுவும் திருவாதிரை அன்னைக்கு மட்டும் தான் கிடைக்கும்னாங்க.


நீங்க என்ன கிழங்கை சொல்லுதிங்கனு தெரியலையே மாமினேன். உடனே வீட்டில் வெட்டி வைச்சிருந்த கிழங்கை காட்டி இது தான் காவத்துனாங்க.

ஹ்ஹாஹா. இது வள்ளிக் கிழங்கு மாமி. எங்க ஊரில் பொங்கலுக்கு சமைப்போம்னேன்.தை மாசம் பிறந்தால் எங்க ஊரில் கிடைக்காத காய்கறிகளே கிடையாது.

கோயமுத்தூர்ல மரவள்ளி கிழங்கு தெரிஞ்சவங்க. வள்ளிக் கிழங்கை காவத்துங்கிறாங்க.அப்பறம் குர்க்க கிழங்கு. அட நம்ம ஊர் சிறுகிழங்கை இங்க குர்க்க கிழங்குனு சொல்லுறாங்க.

துவாசி.இது என்ன தெரியுமா. நம்ம ஊர் நெல்லிக்காய் தான்.ஏகாதசி மறுநாள் துவாதசி. அன்னைக்கி நெல்லிக்காய் துவையல், பச்சடி செய்வோம். அதை தான் இவுங்க நெல்லிக்காய்க்கு துவாசினு சொல்லுறாங்க.

திருவாதிரை களி. திரு வாக்கு அளி என்பது தான் திரிச்சி திருவாதிரை களி ஆயிட்ட்டாம். அதைப் பற்றியெல்லாம் எனக்கு சரியா தெரியாது. ஆனா களி தெரியாம இருக்குமா.

திருநெல்வேலி பக்கம் பச்சரியோடு பயத்தம் பருப்பை வறுத்து பொடி செய்து சர்க்கரை வெல்லத்தோடு நெய் கலர்ந்து மணக்க மணக்க களி செய்வோம்.ஆனா இங்க வெறும் பச்சரிசியை ஊற வைத்து இடுத்து களி கிண்டி சர்க்கரைப் பாகை தனியா செய்து வைக்கிறாங்க.

களியை பாகுல் தொட்டு சாப்பிடனும். அதோடு ஏழு வகை காய்கறி கூட்டு செய்து பதினோறு இலை போட்டு படையல் வைக்கிறாங்க.

சிவனுக்கு ராத்திரி பூஜைனு இரவே படையல் போட்டு பூஜை செய்றாங்க. பூஜையில் களியும்,கூட்டும் தான் ஸ்பெஷல்.

ஒரு சிலர் ஏகாதசி அன்று விரதம் இருந்ததைப் போல் இன்று திருவாதிரைக்கி கோதுமை உணவு எடுக்கிறாங்க.விரதம் பிடிக்கும் போது துவாசினு( நெல்லிக்காய்)சொல்லக் கூடாதாம்.

நாளை மறுபடியும் துவாதேசி சாப்பாடு நெல்லிக்காய், அகத்தி கீரையோடு வேப்பம்பூ ரசம்.

விரதத்தில் எத்தனை வித்தியாசம்.இந்த வருஷம் விரதம் எனக்கு புது அனுபவத்தையே கொடுத்தது.
மார்கழி மறக்க முடியாத மாதம்.

"சம்பல்" தயிர் வெங்காயம்



பெரிய நெல்லிக்காய் கேரட் 
இரண்டையும் துறுவிக்கோங்க.
கொஞ்சம் இஞ்சி, பச்சைமிளகாய்,
கொத்தமல்லி இலை,"பெல்லாரி" 
அதாவது பெரிய வெங்காயம் 
எல்லாத்தையும் பொடியா நறுக்கி 
தேவையான அளவு உப்புடன் கெட்டி 
தயிரில் கலர்ந்துக்கோங்க.
சம்பல் ரெடி.

பிரியாணி, சாப்பாத்தியோடு 
சாப்பிட சுவையாக இருக்கும்.

வைகுண்ட ஏகாதசி விரதம்





விரதன் என்றாலே இருவேளை உணவோடு இரவு பால் பழத்துடன் விரதம் முடிப்போம். இல்லை நாள் முழுதும் உண்ணா விரதம் எடுப்போம்.

விரதம் என்பது ஒவ்வொருத்தரின் மனநிலையைப் பொறுத்தது. ஏன் உடல் நிலையை பொறுத்ததுனுக் கூடச் சொல்லமாம்.


நான் தற்சமயம் கோவையில் இருக்கேன். இங்க உள்ளவர்கள் ஏகாதசியான இன்று மூன்று வேளையும் கோதுமை உணவே உண்கிறார்கள்.

வெங்காயம், பூண்டு சேர்க்காமல் கிழங்கு வகைகளைக் கொண்டு புலுக்கு என்று ஒருவகை கூட்டு வைத்து சாப்பிடுறாங்க.

காலை உணவு சாப்பாத்தி, புலுக்கு கூட்டு. மதியம் கோதுமை கஞ்சி, இரவு விருப்பத்திற்கு ஏற்ப சப்பாத்தியோ, கோதுமை தோசை அல்லது பால் மட்டும்.

இன்னைக்கி விரதம் எடுக்கிறவங்க கண்டிப்பா வரும் சனிக்கிழமையும் விரதம் இருக்கனுமாம். மறுநாள் காலை எப்போதும் போல் சமையல் செய்து அதோடு அகத்திக்கீரை, நெல்லிக்காய் சேர்த்துக்கிறாங்க.

நாம இட்லி ,தோசை சாப்பிட்டா இவுங்க கோதுமையில் உணவா சாப்பிடுவது எனக்கு புது அனுபவமே.

கோதுமை ரவையோடு பாசிபயறு சேர்த்து கஞ்சி. புலுக்கு கூட்டு எப்படி செய்றாங்க தெரியுமா

மரவள்ளி கிழங்கு, வாழைக்காய், பூசணிக்காய் இதோடு காரமணி சேர்த்து நல்லா குழைய வேக வைத்து உப்பு, தேங்காய் சீரகம் அரைத்து போட்டு கிளறி கறிவேப்பிலை உறுவிப் போட்ட வேண்டியது தான். தாளிக்க வேண்டிய வேலையே இல்லை. படு ருசியா கூட்டு. அப்படியே சாப்பிடலாம்

திறமையான டிரைவர்





ஒருமுறை நானும் என் பையனும் திருநெல்வேலியில் இருந்து சென்னையை நோக்கி பஸ்ஸில் பயணம் செய்தோம்.

பஸ் பயணத்தில் போதுவா நான் தூங்க மாட்டேன். பையனோ குளிர் தாங்காமல் சால்வையால் போர்த்திக்கிட்டு நல்ல தூக்கம்.


நாங்க இருந்த பஸ்ஸின் முன் சீட்டில். விடியற் காலை நேரம் அனைவரும் நல்ல உறக்கத்தில்.

சென்னையை நெருக்கும் தருணத்தில் பஸ் தாறுமாறா வளைந்து நெளிந்து ஒரு ஷடண் ப்ரேக் போட்டு நின்றது.

ஒரு நிமிஷம் எல்லாரையும் தூக்கத்தில் இருந்து தூக்கி வாரிப் போட்டுட்டு.

என் கண் முன்னே ஒரு அம்பாஸ்டர் கார் இங்கிலீஸ் படத்தில் பல்டீ அடிப்பது போல் அடித்து பறந்து போய் அப்படியே தடுப்பு வேலியை தாண்டி மல்லாக்க விழுந்தது.

பஸ் டிரைவர் முதல் எல்லாரும் இறங்கி போய் காரில் வந்தவர்களின் நிலை அறிந்து சில உதவிகளை செய்தார்கள்.

கார் டிரைவருக்கு கொஞ்சம் காயம். உடன் இருந்த பெரியவர் நிறையவே பயந்து போய் இருந்திருக்கார்.

விபத்தை பார்த்துட்டு வந்து பையன் தான் சொன்னார். கண் முன்னாடி நடந்த சம்பவத்தை பையனிடம் விளக்கி சொல்லும் போது தான் பையன் கொஞ்சம் வெளியில் எட்டிப் பாருங்கமானு.

பார்த்தால் பெரிய குளம் போல் தண்ணீர் நிறைந்து இருக்கு. நாங்கள் இருக்கும் பஸ்ஸோ குளத்துக் கரையின் விளிம்பில். கொஞ்சம் நகர்ந்தாலும் எல்லாரும் குளத்தில் தான்.

நினைத்துப் பார்க்கவே பயங்கராமா இருந்தது.பையன் அந்த நேரத்திலும் இந்த குளிரில் தண்ணீர்குள்ள விழுந்தா என்னா ஆவுரதுனு காமெடி செய்து என் பயம் போக்கினான்.

உண்மையில் சொல்லுறேன் அந்த டிரைவரின் பெயர் தெரியாது. ஆனால் அவர் மட்டும் அன்று கொஞ்சம் கவனம் தவறி இருந்தால் நடக்க இருந்திருக்கும் விபத்தைச் சொல்லி மாளாது.

வாழ்த்துகள். டிரைவரின் திறமைக்கு ஒரு பெரிய சல்யூட்

பேபிகார்ன் (சோளப் பிஞ்சு ) வறுவல்






பேபிகார்னை விரல் அளவுக்கு

நீளவாக்கில் வெட்டிக்கோங்க.

அதில் கொஞ்சம் மிளகாய் தூள்,

மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது,

அரிசி மாவு, எலுமிச்சை ச் சாறு,

உப்பு, சாட் மசாலா எல்லாத்தையும்

சிறிது தண்ணீர் தெளிர்த்து நல்லா

கலந்து ஒரு ஐந்து நிமிடம் ஊற வைத்து

நல்லா சூடான எண்ணையில் பொறித்து

எடுத்தால் பேபிகார்ன் வறுவல் ரெடி.

கறிவேப்பிலை துவையல் போச்சே



பக்கத்து வீட்டில் கறிவேப்பிலை மரம் நல்லா செழித்து பச்சை பசேல்னு வளர்ந்து நிற்குது. பார்க்கும் போதெல்லாம் கேட்டு பறிச்சி துவையல் அரைத்து சாப்பிடனும்னு ரொம்ப நாள் ஆசை.

கடையில் வாங்கும் கறிவேப்பிலை பெரிய இலையா பார்க்க வேப்பிலை மாதிரி இருக்கும். அதுவும்மில்லாம பத்து ரூபாய்க்கு வாங்கினாக் கூட கனத்த குச்சுயோடு ஒடித்து தருவாங்க. கொஞ்சம் இலை இருக்கிறாப்பில தாங்கனு கேட்டா கோவமா எங்களுக்கு எடைப் போட்டு தான் தாராங்கனு சொல்லுவார்.

ரெண்டு நாளா செண்பகப் பூ கொடுத்து பக்கத்து வீட்டில் பேசி பழக்கம் பிடிச்சுட்டேன். பேசினதுக்கு அப்பறம் தான் தெரிந்தது அவுங்களுக்கு சொந்த ஊர் திருநெல்வேலினு.


கேட்கனுமா . பேச்சோடு பேச்சா கறிவேப்பிலை பற்றி பேச ஆரம்பிச்சுட்டேன். கறிவேப்பிலை துவையல், கறிவேப்பிலை இட்லி பொடியெல்லாம் பற்றி பேசிட்டு கொஞ்ச கறிவேப்பிலையும் கேட்டு வாங்கிட்டேன்.

ஆசை ஆசையா மணக்க மணக்க நைட்டே அரைச்சு வைச்சாச்சு. காலையில தோசைக்கு துவையலைப் பார்த்தால் காணும்.

ஆஹா அரைச்ச தேவையலை இங்க தானே வைச்சோம். அதற்குள் எங்கு போயிருக்கும்.பாத்திரம் கழுவும் சிங்கில் அரைத்து வைச்சிருந்த துவையல் பாத்திரம் காலியா கிடக்கு.

பாட்டிமா கிட்ட துவையலை என்ன செஞ்சிங்கனு கேட்டால். எனக்கு தெரியாது.கறிவேப்பிலை துவையலா ஏது. நைட்டு சாப்பிட கொடுத்தேனேனு சொன்னா.நான் பார்க்கலைனு சொல்லிட்டாங்க.

என்னடா இது கறிவேப்பிலை துவையலுக்கு வந்த சோதனை. சரி நமக்கு துவையல் கொடுத்து வைக்கலை.

கொஞ்ச நேரம் கழித்து பாட்டி அது கறிவேப்பிலை துவையலா. நான் மருதாணினு நினைச்சி குப்பையில் போட்டுட்டேன். அட டா ரொம்ப ருசியா இருந்துச்சே.

இப்ப கவலைப் பட்டு என்ன செய்ய. வடிவேல் ஸ்டைல்ல துவையல் போச்சே.

Saturday 12 December 2015

மருதாணி - மருதோன்றி



மருதாணி...மருதாணி...

ஐப்பசி மாதம் வந்துட்டாலே கை கால்களில் மருதாணி வைக்கும் வைபோகம் தான். யார் கையைப் பார்த்தாலும் வித விதமா செக்கச் செவேனு சிவந்து இருக்கும்.

ஐப்பசியில் மருதாணி அப்பி பிடிக்கும்னு என் பாட்டி சொல்லுவாங்க. அப்போ எல்லாம் தெரு வாசலில் கால்படி ரெண்டு ரூபாயுக்கும் மூனு ரூபாயுக்கும் விற்கும்.

வயசான பாட்டி தான் பதிவா எங்களுக்கு கொண்டு வந்து கொடுப்பாங்க. எங்க அக்கா தான் எனக்கு கையில் வைச்சி விடுவாங்க. எனக்கு ரெண்டு கையிலும் மருதாணி வைக்க ஆசையா இருக்கும் ஆனா சாப்பிடுற கையில் வைக்கக் கூடாதுனு திட்டு விழும்.

மருதாணி அரைக்க தனியா குழவி கல் உண்டு. அம்மியில் அரைக்க விடமாட்டாங்க. அரைப்பதெல்லாம் எங்க பார்வதி அக்கா தான். மருதாணி அரைக்கும் போதே கை சிவந்துட்டானு பார்த்து பார்த்து அரைப்பாங்க.

எனக்கு மருதாணி கையில் வைப்பதை விட கால்ல வைக்க தான் பிடிக்கும். மருதாணி வைச்ச அன்னைக்கு தூங்கவே மாட்டேன். விடியும் வரைக்கும் உட்கார்ந்தே இருப்பேன். ஆனா பார்வதி அக்கா எனக்கு போட்டியா கை ரெண்டுலையும் மருதாணி வைச்சுட்டு துணியால் கையை கட்டிக்குவாங்க. ஏன்னா மருதாணி வைச்ச அன்னைக்கு படுக்கை எல்லாம் நாஸ்த்தி தான்.

காலையில எல்லார் கையிலும் அழகா சிவந்து இருக்கும். ஆனா பார்வதி அக்கா கை மட்டும் ஒரு இடம் விடாம மொத்தமா கரும் சிவப்பில் சிவந்து இருக்கும். நாங்க அவுங்களை கிண்டல் செய்த என் கை தான் நல்லா பிடிச்சிருக்கு. வைச்சா என்னை மாதிரி தான் வைக்கனும்பாங்க.

கடைசியா என் அக்கா எனக்கு ஆசை ஆசையா மருதாணி வைச்சு விட்டது என் மகள் வயிற்றில் இருக்கும் போது தான். அதற்கு பிறகு மருதாணி கிடைத்தாலும் வைக்க நேரம் இருக்காது. ஆனாலும் கால்ல வைப்பதை விட மாட்டேன்.

என் ஆசையெல்லாம் கொஞ்ச காலம் என்று ஆயிட்டு. எதையும் விரும்பி பார்ப்பது கிடையாது. ஆனா மருதாணியப் பார்க்கும் போது மட்டும் என்னுள் ஏக்கம் இருக்கும்.

வீட்டு கட்டும் போதே பின் பக்கம் மரம் செடிகளுக்கு இடம் விடும் போது மருதாணிக்கும் இடம் விட்டாச்சி. வேலியே மருதாணி தான் இப்போ. கொலு நாட்களில் மருதாணி அரைத்து வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் கொடுப்பேன். ஆனா நான் வைக்க மாட்டேன்.

ஆயிட்டு ஐந்து நாலைந்து வருஷம். மீண்டும் மருதாணி ஆசை மனதில். மருதாணி வைப்பது அப்படி ஒன்னும் குற்றம் மில்லைனு தோன்றியது. ஏன்னா வீட்டு முன் பெரிய மரமா வளர்ந்து நிற்க்குது. பறிக்க ஆள்ளில்லாமல்.

மருதாணி. மருதோன்றினு சொல்லுவாங்க. இது ஒரு மருத்துவ தாவரம். உடல் குளிர்ச்சிக்கு ஏற்றது.உடலின் உஷ்ணத்தை தணிக்க வல்லது. பித்தத்துக்கு சிறந்த நிவாரணி. ஆறாத புண்ணையும் ஆற்றும் குணம் உள்ளது.நகச் சுற்றுக்கு மருதாணி வைத்து கட்டினால் நல்ல குணம் ஆகும். கால் ஆணி உள்ளவர்கள் மருதாணி இலையை அரைத்து கட்டலாம்.

யாருக்கெல்லாம் மருதாணி பிடிக்குமோ அவுங்க எல்லாருக்கும் மருதாணி இருக்கு. எடுத்துக்கோங்க. இன்னைக்கு நான் மருதாணி வைக்கப் போறேன்.

செல்லப் பறவைகள்

































கார்த்திகை பொறி உண்ணும் என் அன்பு செல்லங்கள்

















மகள் மகேஷ்வரிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்




மலை மீது தவழ்ந்தாடி
விளையாடும் நதியே

அலை வீசும் கடல் போல
தமிழ் பாடும் கொடியே

மூடடி வாசற் கதவை 
கண்கள் தான் பட்டு விடுமே

பாடடி பாசக் கவிதை
நெஞ்சம் தான் கெட்டு விடுமே

என்றைக்கோ எழுதி வைத்தான்
இன்றைக்கே நடப்ப தெல்லாம்
உண்மை தான் முல்லையே

என்னையே நான் மறந்தேன்.

மகள் மகேஷ்வரிக்கு
பிறந்த நாள் வாழ்த்துகள்.

- பூங்கோதை நாச்சியார் 

24/11/2015

திருமண நாள்


"அன்றோரு நாள் இதே நிலவில் 
அவர் இருந்தார் என் அருகில்-நான்
அடைக்கலம் கொண்டேன் அவரிடமே 
நீ அறிவாயே வெண்ணிலவே...."

என்னோட சந்தோஷம் துக்கம் எல்லாமே மற்றவங்க தான் முடிவு செய்வாங்க. 
ஆனா முதல் முதலா நானே தைரியமா முழு மனசா தேர்ந்தெடுத்து எனக்கான வாழ்க்கைய அமைத்துக் கொண்ட நாள் இன்று.

பல போராட்டங்கள் நடுவே எல்லா கஷ்டத்தையும் எனக்காக தாங்கி என்னை கரம் பிடித்த ஜீவன் இன்று என்னோடு இல்லை என்றாலும் அவரின் நினைவுகளோடு இந்த நாளை எனக்காக மட்டுமே கொண்டாடுகிறேன்.

- பூங்கோதை 
12/12/2015