Saturday 3 October 2015

நவராத்திரி கொலு (தசரா) - பாகம் 2



இரவு மணி பத்து. குமார் ஆசாரி தான் எதோ இருப்பு கம்பியில் தட்டிக் கொண்டு இருந்தார்.

“என்ன அண்ணே இவ்வளவு நேரத்துக்கு பிறகு வந்து என்ன செய்றீங்க?”

“நீங்க கொலு வைக்க கொலு படி கேட்டிங்கல்ல அதான். அண்ணன் கூப்பிட்டு விட்டாங்க”

“அது சரி இருப்பு கம்பியில என்ன செய்றீங்க?”

“ஒவ்வொரு வருஷமும் மரப் பலகையில செய்றதை பத்திரப் படுத்த கஷ்டமா இருக்குனு அண்ணன் தான் ஸ்டீல்ல செய்ய சொன்னாங்க. இனி தேவையானப்போ உபயோகிச்சிட்டு மற்ற நேரத்தில் கழட்டி வைச்சிக்கிடலாம்கா”

“சரி.... எங்க உங்க அண்ணனைக் காணும்?”

“ஸ்குரு வாங்க கடைக்கு போயிருக்காங்க அக்கா”

“இவ்வளவு நேரத்துக்கு அப்புறம் எப்படி வீட்டுக்கு போவீங்க? வீட்டுல உங்க வீட்டுகாரங்க தேட மாட்டாங்களாண்ணே. நாளைக்கு வந்து செஞ்சி கொடுக்கலாம்ல”

“இன்னைக்கு வரை வேலையே இல்லாம தான் இருந்தேன். காலையில தான் ஒரு வேலை வந்தது. நாளையிலே இருந்து அங்க போய்ட்டா வர முடியாது. அதான் இப்பவே முடிச்சிக் கொடுத்துடலாம்னு வந்தேன்”

“சரிண்ணே. சாப்பிடுறீங்களா? இல்ல காபி எதாவது போட்டுத் தரட்டுமா?”

“இல்லக்கா. நான் விரதம் இருக்கேன். தசரா முடியிற வரைக்கும் எங்கேயும் சாப்பிட மாட்டேன். குலசைக்கு காளி வேஷம் போடப் போறேன். நாற்பது நாள் விரதம்க்கா”

“காளி வேஷமா? அதுக்கு ரொம்ப கட்டுப்பாடா இருக்கனுமேண்ணே. எத்தனை வருஷமா போடுதிங்க?”

“சின்ன வயசில அம்மை நோய் வந்து ரொம்ப கஷ்டப்பட்டேன். பிழைச்சதே அந்த காளி புண்ணியத்தில் தான். அப்போ தான் எனக்கு வருஷா வருஷம் காளி வேஷம் போடுறதா அம்மா வேண்டிக்கிட்டாங்க. இந்த வருஷத்தோட முப்பது வருஷம் ஆகுது”

“நா சின்னப் பிள்ளையா இருக்கேல பூதத்தார்னு ஒருத்தர் மட்டும் தான் காளி வேஷம் போடுவார். அவர் காளி வேஷம் போட்டு வர்றதைப் பார்க்க ஒரு கூட்டமே காத்திருக்கும். அப்படியே அம்மனே நடந்து வர்ற மாதிரி வருவார். நீண்ட ஜடையும், துருத்திய நாக்கும், எடுப்பான கண்ணும், சிங்கப் பல் அதுவுமா கையில் சூலாயுதத்தோடு ஜல் ஜல்னு நடந்து வரும் போது அப்படியே ஜனங்கள் எல்லாம் மெய்மறந்து நிற்போம். எங்களை அறியாமலேயே கைகள் ரெண்டும் தன்னாலே கும்பிடும். அப்படி ஒரு பரவசம் இருக்கும். அவர் மேல் சாமி வந்து ஆடும் போது ஐயோ சொல்லவே பயமா இருக்கு. அப்படி ஒரு ஆவேசம் இருக்கும். கொஞ்ச நேரம் தான் பார்க்க முடியும். ஆனா இப்ப எல்லாம் யாரைப் பார்த்தாலும் வேஷம் போட்டுக்கிட்டு சாமி மேல உள்ள பயமே போயிட்டு. அதிலேயும் அம்மன் வேஷத்தைப் போட்டுட்டு வீதி வீதியா ஏன் கடை கடையா உண்டியலை குலுக்கிட்டு காணிக்கை பிரிக்கிறேனு அலையும் போது எனக்கெல்லாம் கோவமா வரும். அதிலும் ஒவ்வொரு கடையில காணிக்கை இல்லைனு விரட்டும் போது பார்க்க கொடுமையா இருக்கு”

“என்னப் பண்ணக்கா. ஒரு சிலர் காசுக்காக காணிக்கை என்கிறப் பேர்ல பிச்சை எடுக்கிறாங்க. ஆனா எல்லாரும் அப்படி கிடையாதுக்கா. நானெல்லாம் நாற்பது நாளும் கடுமையா விரதம் இருப்பேன். தரையில் தான் படுப்பேன். ஒரு நேரம் தான் சாப்பாடு. ரெண்டு வேளை குளிப்பேன். நவராத்திரி முடியிர வரைக்கும் வெளியூர் எங்கேயும் போக மாட்டேன். கடைசி தசரா அன்னைக்கு சப்பரம் கிளம்பும் போது தான் வேஷமே போடுவேன்”

கடைக்கு போன சொக்கன் ஸ்க்ருவோடு கலர் கலரா பெயிண்ட் டப்பாக்களை மீனாவின் கையில் கொடுத்தான்.

“என்னதுங்க இது. நான் கேட்டப்ப கொலு வைக்க வேண்டாம்னு சொல்லிட்டு இப்போ என்னடானா எனக்கே தெரியாம குமார் அண்ணன வரச் சொல்லி இருக்கிங்க. இப்போ பெயிண்ட் டப்பா எல்லாம் வாங்கிட்டு வந்துருக்கிங்க?”

“நான் வேண்டாம்னு சொன்னாலும் தெருப் பிள்ளைகள் விடுரதா இல்ல. நீ வீட்டுக்கு போனதும். பால்காரக்கா மகா செல்வி வந்தாள். என்ன மாமா அத்தைய எங்கேனு கேட்டா. நடந்ததை சொன்னேன். சண்டைக்கு வந்துட்டா. என்ன மாமா. நாங்க எல்லாம் எப்படா தசரா வரும். அத்தை கொலு வைப்பாங்கனு இருக்கோம்ன்னா. இல்ல செல்வி அத்தைக்கு கஷ்டமா இருக்குமேனு தான் வேண்டாம்னு சொன்னேன்னேன். நாங்கெல்லாம் இருக்கும் போது அத்தைய கஷ்டப்பட விடுவோமா. நீங்க கொலு படி மட்டும் செஞ்சி கொடுங்க . மற்றதெல்லாம் நாங்க பார்த்துக்கிடுதோம்னு சொல்லிட்டா. சரி ஏன் இந்த சின்னப் பிள்ளைகள் ஆசையக் கெடுப்பானேனு கடைக்கு போகும் போதே குமார் அண்ணனப் பார்த்து பேசி வரச் சொல்லிட்டேன்”

அப்பாடா அந்த கருமாரி எதோ ஒரு வகையில எனக்கு அருள் புரிஞ்சிட்டா. இந்த வருஷ கொலுவுக்கு நீங்க எல்லாரும் வீட்டுக்கு வந்துடுங்க. "எல்லார்க்கும் எல்லாமும் வேண்டும் அருள் புரிவாள் நல்லாசி வைத்த எந்தன் நாயகியே"



- தொடரும் 

நவராத்திரி கொலு (தசரா) - பாகம் 1

No comments:

Post a Comment