Saturday 12 December 2015

மருதாணி - மருதோன்றி



மருதாணி...மருதாணி...

ஐப்பசி மாதம் வந்துட்டாலே கை கால்களில் மருதாணி வைக்கும் வைபோகம் தான். யார் கையைப் பார்த்தாலும் வித விதமா செக்கச் செவேனு சிவந்து இருக்கும்.

ஐப்பசியில் மருதாணி அப்பி பிடிக்கும்னு என் பாட்டி சொல்லுவாங்க. அப்போ எல்லாம் தெரு வாசலில் கால்படி ரெண்டு ரூபாயுக்கும் மூனு ரூபாயுக்கும் விற்கும்.

வயசான பாட்டி தான் பதிவா எங்களுக்கு கொண்டு வந்து கொடுப்பாங்க. எங்க அக்கா தான் எனக்கு கையில் வைச்சி விடுவாங்க. எனக்கு ரெண்டு கையிலும் மருதாணி வைக்க ஆசையா இருக்கும் ஆனா சாப்பிடுற கையில் வைக்கக் கூடாதுனு திட்டு விழும்.

மருதாணி அரைக்க தனியா குழவி கல் உண்டு. அம்மியில் அரைக்க விடமாட்டாங்க. அரைப்பதெல்லாம் எங்க பார்வதி அக்கா தான். மருதாணி அரைக்கும் போதே கை சிவந்துட்டானு பார்த்து பார்த்து அரைப்பாங்க.

எனக்கு மருதாணி கையில் வைப்பதை விட கால்ல வைக்க தான் பிடிக்கும். மருதாணி வைச்ச அன்னைக்கு தூங்கவே மாட்டேன். விடியும் வரைக்கும் உட்கார்ந்தே இருப்பேன். ஆனா பார்வதி அக்கா எனக்கு போட்டியா கை ரெண்டுலையும் மருதாணி வைச்சுட்டு துணியால் கையை கட்டிக்குவாங்க. ஏன்னா மருதாணி வைச்ச அன்னைக்கு படுக்கை எல்லாம் நாஸ்த்தி தான்.

காலையில எல்லார் கையிலும் அழகா சிவந்து இருக்கும். ஆனா பார்வதி அக்கா கை மட்டும் ஒரு இடம் விடாம மொத்தமா கரும் சிவப்பில் சிவந்து இருக்கும். நாங்க அவுங்களை கிண்டல் செய்த என் கை தான் நல்லா பிடிச்சிருக்கு. வைச்சா என்னை மாதிரி தான் வைக்கனும்பாங்க.

கடைசியா என் அக்கா எனக்கு ஆசை ஆசையா மருதாணி வைச்சு விட்டது என் மகள் வயிற்றில் இருக்கும் போது தான். அதற்கு பிறகு மருதாணி கிடைத்தாலும் வைக்க நேரம் இருக்காது. ஆனாலும் கால்ல வைப்பதை விட மாட்டேன்.

என் ஆசையெல்லாம் கொஞ்ச காலம் என்று ஆயிட்டு. எதையும் விரும்பி பார்ப்பது கிடையாது. ஆனா மருதாணியப் பார்க்கும் போது மட்டும் என்னுள் ஏக்கம் இருக்கும்.

வீட்டு கட்டும் போதே பின் பக்கம் மரம் செடிகளுக்கு இடம் விடும் போது மருதாணிக்கும் இடம் விட்டாச்சி. வேலியே மருதாணி தான் இப்போ. கொலு நாட்களில் மருதாணி அரைத்து வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் கொடுப்பேன். ஆனா நான் வைக்க மாட்டேன்.

ஆயிட்டு ஐந்து நாலைந்து வருஷம். மீண்டும் மருதாணி ஆசை மனதில். மருதாணி வைப்பது அப்படி ஒன்னும் குற்றம் மில்லைனு தோன்றியது. ஏன்னா வீட்டு முன் பெரிய மரமா வளர்ந்து நிற்க்குது. பறிக்க ஆள்ளில்லாமல்.

மருதாணி. மருதோன்றினு சொல்லுவாங்க. இது ஒரு மருத்துவ தாவரம். உடல் குளிர்ச்சிக்கு ஏற்றது.உடலின் உஷ்ணத்தை தணிக்க வல்லது. பித்தத்துக்கு சிறந்த நிவாரணி. ஆறாத புண்ணையும் ஆற்றும் குணம் உள்ளது.நகச் சுற்றுக்கு மருதாணி வைத்து கட்டினால் நல்ல குணம் ஆகும். கால் ஆணி உள்ளவர்கள் மருதாணி இலையை அரைத்து கட்டலாம்.

யாருக்கெல்லாம் மருதாணி பிடிக்குமோ அவுங்க எல்லாருக்கும் மருதாணி இருக்கு. எடுத்துக்கோங்க. இன்னைக்கு நான் மருதாணி வைக்கப் போறேன்.

1 comment:

  1. ''பேர் அண்ட் லவ்லி'' போட்டீங்கன்னா முகம் சிவக்க எப்படியும் 60 அல்லது 70 வருடம் ஆகிவிடும் .... இதே மருதோன்றி போட்டீங்கன்னா மறுநாளே சிவப்பழகு ஜொலிக்கும் ... அரைச்சி மூஞ்சில அப்பிக்குங்கடான்னு சொன்னா .... யாரு கேக்குறா? ..... ஐடியா சொன்ன நம்மளையே அடிக்க வர்ரானுங்க...
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete